தீமைகள் நம் உடலுக்குள் சுழன்று வருவதற்குள் அதைச் சுத்தப்படுத்தும் வழி

Divine cleaning.JPG

தீமைகள் நம் உடலுக்குள் சுழன்று வருவதற்குள் அதைச் சுத்தப்படுத்தும் வழி

வாழ்க்கையில் வரும் துன்பங்களை நீக்க அன்று மெய்ஞானிகள் தன் உணர்வின் ஆற்றலை மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

அந்த வழியைத்தான் யாம் உபதேசிக்கின்றோம்.

தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் எப்படி செம்பும், பித்தளையும் வெள்ளியும் ஆவியாகச் செல்கின்றதோ அதைப் போன்று நாம் ஆத்ம சுத்தி செய்து நமக்குள் வரும் தீமைகளை நீக்க முடியும்.

ஓம் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி விண்ணை நோக்கி நாம் உணர்வைச் செலுத்த வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்க வேண்டும். அப்படி விண்ணிலிருந்து சுவாசித்து அதை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் நல்லதை எண்ணி வாழும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் சந்தர்ப்ப வசத்தால் நமக்குள் சங்கடமோ துன்பமோ பயமோ அவசரமோ ஆத்திரமோ இதைப் போன்ற உணர்ச்சிகளை நாம் நுகர நேருகின்றது.

இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் உமிழ்நீராகச் சேர்ந்து அந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் அது சுழன்று வருவதற்குள் நாம் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்யும் பொழுது அதைப் பரிசுத்தப்படுத்தி நல்ல உணர்வுகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருணைக்கிழங்கை நாம் வேகவைத்தவுடன் அதில் உள்ள விஷத்தின் தன்மைகள் மாறுகின்றது. இதைப் போன்று
1.கடினமான சொற்கள் நம்மை இயக்கவும் அறியவும் உதவினாலும்
2.அது நம் உடலுக்குள் போய்த் தீங்கு செய்யாதபடி
3.அதை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் நல்லதைக் காக்க வேண்டும் என்றுதான் அந்த உணர்வுகளை நுகர்ந்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நல்ல உணர்வின் தன்மையைக் காக்க முடிந்தது. நல்ல செயல்களை அறியவும் செய்யவும் முடிந்தது.

ஆனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே மோதியபின் அது இயக்கி அந்த உணர்ச்சிகளை ஊட்டி நம் உடலை இயக்கியபின் தான் தெரிகின்றது.

இந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் கலப்பதை அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த அசுத்தமே நம் உடலில் சேர்ந்துவிடுகின்றது.

அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற முறை.

வாரத்தில் ஒரு நாள் நாம் கூட்டுக் குடும்ப தியானம் செய்து, நம் மூதாதையர்களை விண் செலுத்தினால்தான் இந்தச் சுலப நிலைகள் பெறமுடியும்.

இன்று விஞ்ஞானிகள் எப்படித் தமக்குள் எதனதன் நிலைகள் கொண்டு பொருத்தி இணைத்துச் செய்கின்றனரோ அதே போன்றுதான்
1.மெய்ஞானிகள் தன் உடலின் தன்மையில்
2.இயற்கையின் சக்தியைத் தனக்குள் தொடர்பு கொள்வதற்கு
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி
4.உணர்வின் எண்ணத்தைப் புலனறிவான தன் கண்ணுக்குள் செலுத்தி
5.கண்ணின் நினைவை விண்ணை நோக்கி ஏகி
6.அதன் வழியிலே தனக்குள் சக்தியைப் பெருக்கிக் கொண்டார்கள்.

இப்படி அவர்கள் பெற்ற அந்த சக்திகளை நீங்கள் பெறுவற்காக வேண்டித்தான் அவர்கள் எம்மார்க்கங்களிலே சென்றார்களோ அவ்வழிகளிலே உங்களைச் செல்லச் செய்வது.

இதில் ஒன்றும் கஷ்டமில்லை.

வாரத்தில் ஒரு நாள் வீட்டில் எல்லோரும் சேர்ந்து தியானம் செய்து உங்களுக்குச் சக்தியைக் கிடைக்கச் செய்து கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கக்கூடிய ஆற்றலை இந்த முறைப்படி செய்து கொண்டால் விண்ணுலகையும் அண்டத்தையும் நீங்கள் காணலாம்.

அந்த அண்டத்திற்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையை நமக்குள் இழுத்துத் துன்பப்படுத்தும் நிலைகளைக் குறைக்கலாம்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

Leave a Reply