விஷ்ணு தத்துவம் -12

Kalki avatar

  1. விஷ்ணு தத்துவம்

கடவுளின் அவதாரம் பத்து – 10. கல்கி

உடல் கொண்ட உயிரினங்கள் மற்ற மிருகங்களெல்லாம் பரிணாம வளர்ச்சியில் வருவது. மனிதர்களான நாம்.., பரிணாம வளர்ச்சியில் வந்து.., “முதிர்வு பெற்றவர்கள்”.

இதிலிருந்து நாம் விண் செல்லும் மார்க்கத்தைத் தவறவிட்டால், நாம் கீழ்நிலையான ஆரம்ப நிலைகளுக்குச் சென்றுவிடுவோம்.

ஆரம்ப நிலைக்குச் சென்றுவிட்டால் நாம் மனிதனாக வரும் வரையிலும் எத்தனை கோடி சரீரங்களில் துன்பத்தை அனுபவித்து இன்று மனித உடலைப் பெற்றோமோ “அந்த நிலையைத் திரும்பவும் எய்யும் தருணம்” வந்துவிடும்.

அதிலிருந்து மீண்டிடும் நிலையாக “என்றும் பதினாறு..,” என்ற அழியா ஒளிச் சரீர வாழ்க்கையினை மனித உயிரான்மா பெறுவதைத்தான் ஞானிகள் “கல்கி” என்றார்கள்.

மனிதர் தாம் கல்கி என்ற பெருவீடு பெருநிலையை அடைவதைத்தான் பத்தாவது அவதாரமாகக் காண்பித்துள்ளார்கள்.

உயிர் விண்ணிலே தோன்றியது. உயிரின் பரிணாம வளர்ச்சியில் “இறுதியானதும்.., உறுதியானதுமான..,” அழியா ஒளிச் சரீர வாழ்வே மனித இனத்திற்கு இலட்சியமாக இருக்கவேண்டும் என்றுரைத்தார்கள் ஞானிகள்.

சூரியனின் ஒளிக்கதிர்களிலிருந்து வெளிப்பட்டுப் புவியின் ஈர்ப்பில் வந்த உயிரான்மாவிற்கு விண்ணில் ஒளிச் சரீரம் பெறுவதே முழுமையான நிலையாகும்.

விண்ணில் ஒளிச் சரீரம் பெற்ற உயிரான்மா தம் ஒளியின் தன்மையை நாளும் வளர்த்துக் கொண்டாலும் அது எல்லையில்லாப் பேரண்டத்தில் சிறியதாகவே இருக்கும்.

ஒளியின் சரீரத்திற்கு அழிவே இல்லை. ஆகையால்தான் பெருவீடு பெருநிலை என்ற அழியா ஒளிச்சரீரத்திற்கு என்றும் பதினாறு என்று காரணப் பெயரைச் சூட்டினார்கள் ஞானிகள்.

சப்தரிஷிகள் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் ஒளி அலைகளைத் தம்முள் கவர்ந்து தம்முள் நஞ்சினைப் பிளந்து தீமைகள் தம்முள் வராது தடுத்துப் பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மனிதர்களான நாம் நமது ஆறாவது அறிவின் துணைகொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வெளிப்படும் உணர்வின் ஒளி அலைகளை நம்முள் கவர்ந்து நம் உடல் முழுவதும் படரச் செய்து, நமது உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் பரவச் செய்து, அதனின் வலிமை பெற்றபின் வேதனை என்ற உணர்வுகள் நமது உடலில் ஆன்மாவாக இருப்பதைப் பிளத்தல் வேண்டும்.

தீமைகள் விளைந்த நிலையைப் பிளக்க வேண்டுமென்றால் நாம் எப்படி சக்தி பெறவேண்டும் என்பதை நமக்கு ஞானிகள் உணர்த்தி உள்ளார்கள்.

கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் சேர்ந்து ஒரு உயிராக எப்படி உருவானதோ இதைப் போன்று தீமைகளை அகற்றிடும் சக்தியினைக் கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து பெறவேண்டும்.

அதாவது மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று தம் உடலுக்குள் சேர்த்து மனைவி தன் கணவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அவர் உயர்ந்த நிலை பெறவெண்டும் அவருடைய பார்வை என்றும் என்னைத் தெளிந்த மனமாக்க வேண்டும் மகிழ்ந்திடும் செயலாக உருவாக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதுபோன்றே கணவனும் தன் மனைவி அந்த சக்திகளைப் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். தீமைகளை அகற்றிடும் சக்தியினை தனித்து ஒருவர் பெறமுடியாது.

நளாயினி தன் கணவனைக் கூடையில் வைத்துத் தன் சிரம் மீது சுமந்தாள் என்ற நிலையாக மனைவி தான் குறைகளை எண்ணாது கணவருடைய நிறைவான மனது எனக்கு வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆதியிலே அகத்தியன் துருவத்தை நுகர்ந்து அதன் வழியினில் துருவ மகரிஷியாகி தான்  பெற்ற சக்தியெல்லாம் தன் மனைவி பெற வேண்டும், என்ற உணர்வினை ஊட்டி அதே உணர்வினை மனைவி தன் கணவனுக்குக் கிடைக்கவேண்டும், என்று உணர்வினை வலுபெறச் செய்ததினால் எந்தத் தீங்கினையும் உருமாற்றவல்ல சக்தி அவர்களிடத்தில் உண்டானது.

தீமையை அகற்றிய மகரிஷிகளின் அருளுணர்வுகளை கணவன் மனைவி இரண்டு பேரும் கவர்ந்து தமக்குள் உருப்பெறச் செய்யப்படும் பொழுதுதான் சமப்படுத்த முடியும்.

தீமைகளை அகற்றும் செயலாக்கமாகக் கணவன் தனது மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணுவதும் மனைவி தனது கணவன் பெற வேண்டும் என்று என்ணுவதும் ஆக இந்த இரு உணர்வும் வரும்பொழுது ரேவதி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து ஒரு உயிரானதைப் போன்று கணவன் மனைவி இரண்டு பேரின் உணர்வின் தன்மையும் ஒன்றாகின்றது.

உணர்வினை ஒளியாக ஒருவருக்கொருவர் மாற்றப்படும்பொழுது இருவருக்குள்ளும் வரக்கூடிய இருளினை மாற்றுகின்றது.  இருளை மாய்த்து ஒளியாக மாற்றுகின்றது.

இந்த வலுவின் தன்மைகள் பெறப்படும்பொழுது அவர்கள் பிறருடைய தீமைகளைப் பார்த்தாலும் தீமைகள் அவர்களுக்குள் வராது தடுத்துக் கல்கியின் தன்மையினை அவர்களுக்குள் உருவாக்குகின்றது.

“எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள் சாவித்திரி” எனும் நிலையாகப் பிறவியில்லா நிலை அடைந்து தம் உணர்வின் தன்மைகளை ஒளிக்கதிர்களாக மாற்றும் சக்தி பெறுகின்றது. இதுதான் கல்கி.

அருள் ஞான நெறிகளில் நினைவினைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் பெறுவீர்களேயானால் அருள் ஞான உணர்வை உங்கள் உயிர் அணுவாக மாற்றுகின்றது.

அருள் ஞான உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது மெய்யுணர்வுகள் உங்களுக்குள் பெருகுகின்றது.

தீமையற்ற நிலையாக உயிர் உருவாக்குகின்றது. பேரானந்தத்தின் தன்மையினை உங்களிடத்தில் உருவாக்குகின்றது. உங்களுடைய உயிரான்மா என்றும் பதினாறு என்ற மெய்ப்பொருளின் தன்மையைப் பெறும் தகுதியினைப் பெறுகின்றது.

இதனின் உண்மை நிலைகளை அறிந்துணர்ந்து தம்முள் மெய்ப்பொருளைப் பெறும் தன்மையாக தமது உணர்வை வளர்த்து வரும் அன்பர்கள்  அனைவரும் என்றும் பேரானந்த பெருவாழ்வைப் பெறுவீர்கள்.

ஆகவே இன்றைய விஞ்ஞான உலகம் மனிதனுடைய சிந்தனைகள் அழியும் தருணம் வரும் பொழுது.., “தீமையான உணர்வுகளை வாளால் வீசி.., கல்கி” – இந்தப் பறக்கும் உணர்வினுடைய நிலைகள் பெறவேண்டும்.

அதாவது ஒளியின் தன்மை கொண்டு விண்ணின் ஆற்றலால் நாளை வரக்கூடிய சந்ததிகளுக்கு ஜீவனூட்டும் மனிதர்களாக இருந்து செயல்படுவோம்.

இதில் நாம் உயர்ந்த நிலைகளை எடுத்துக் கொண்டால் நாம் அனைவரும் விண் செல்ல முடியும்.

Leave a Reply