உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவாக்க வேண்டியதன் முக்கியத்துவம்

உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவாக்க வேண்டியதன் முக்கியத்துவம்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் துணை கொண்டு யாம் இயற்கையின் இயக்கப் பேருண்மைகளை அனுபவ ஞானமாகப் பல சிரமங்களுக்கிடையே தான் பெற்றோம்.

அதை உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் பொழுது அந்த அருள் உணர்வுகளை உங்களுடைய கருத்தில் பதிய வைக்காமல் விட்டு விடுகின்றீர்கள்.

எமது அருள் ஞான உபதேசங்களை நீங்கள் படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் ஆர்வமுடன் இருப்பீர்கள். ஆனால் அருள் ஞான உபதேசங்களைக் கேட்டுப் படித்த பிறகு சில நிமிடங்களில்…
1.சாலையில் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால்
2.அதைப் பார்த்து அதனின் உணர்வை ஈர்த்து உங்களுக்குள் பதிவு செய்து வளர்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.

உதாரணமாக… ஒரு குரு தம் சீடரை அழைத்து அவருடைய கையில் காசைக் கொடுத்துக் “கடைக்குச் சென்று கொழுக்கட்டை வாங்கி வா” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

சீடரும் தாம் கடைக்குச் சென்று கொழுக்கட்டை வாங்கி வருவதற்குக் கிளம்பினார்.

சீடர் கடைக்குச் செல்லும் வழியில் குறுக்கே ஒரு சாக்கடை இருந்தது. சாக்கடையைத் தாண்டித்தான் கடைக்குச் செல்ல வேண்டும். சாக்கடையில் இருந்து வரும் நாற்றமோ சீடரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருந்தது.

சீடர்… “அத்ரி… சீ… தூ…” என்று சொல்லிக் கொண்டு மூக்கைப் பொத்தியவாறு சாக்கடையைத் தாண்டிச் சென்றார். இப்படிச் சென்றவர் நேராகக் கடைக்குப் போய் நின்று “கொழுக்கட்டை தாருங்கள்” என்று கேட்பதற்குப் பதிலாக “அத்ரி… சீ… தூ…” கொடுங்கள் என்று கேட்டார்.

அதாவது… எமது அருள் ஞான உபதேசங்களை நீங்கள் கேட்பீர்கள். பின்னர் என்ன செய்வீர்கள்…?
1.நல்லவைகளை அறிந்து கொண்ட பின் சாலையில் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால்
2.அதைக் கண்களால் பார்த்து அதன் உணர்வுகளை விலைக்கு வாங்கிக் கொள்வீர்கள்.

இதன் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட நிலையில் வீட்டிற்குள் போவீர்கள். வீட்டில் மனைவி மீதும் குழந்தை மீதும் வெறுப்பு இருக்கும். குழந்தை சிறிது குறும்புத்தனம் செய்தால் போதும்.

இவன் இப்படிச் சேட்டை செய்கிறான்…! நாம் எப்படி இருக்க வேண்டும்…? என்று “சாமி” உபதேசம் செய்கிறார்.
1.ஆனால் வீட்டில் மனைவி குழந்தைகள் இப்படி இருக்கின்றார்களே…! என்று
2.தன்னை நியாயப்படுத்திக் கொண்டு தன் மனைவி குழந்தைகளிடம் வேக உணர்வைக் காண்பிப்பார்கள்.

ஏனென்றால் நமக்குள் எதிர்நிலையான உணர்வுகளான பின் நமக்குள் உணர்வுகள் வேகமாகின்றது.

ஆனால் அருள் ஞான உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து வளர்த்து
1.”உங்களுடைய உணர்வுகள் எதிர்நிலைக்கு மாறாதிருந்தால்” உங்களுடைய உடலில் உள்ள நோயை குறைக்க முடியும்.
2.குடும்பத்தில் உள்ள சிக்கலை நிவர்த்திக்கும் ஆற்றலும்… சிந்தித்துச் செயல்படும் தன்மையும் வரும்.

அருள் ஞான உணர்வுகளை நீங்கள் படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் ஊழ்வினை என்ற நிலையில் பதிவாகுகின்றது. யாம் சொல்லிக் கொண்டு வருவதனைத்தையும் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் உங்களுடைய கருவிழி ருக்மணி கவர்ந்த உணர்வலைகளை உங்களுடைய செல்களில் பதிவாக்குகின்றது.

ஒருவரை எமது அருள் ஞான புத்தகங்களைப் படிக்கச் சொல்லி அவரைத் தாம் படித்ததைத் திரும்பச் சொல்லும்படிக் கேட்டால் அவருக்குச் சொல்லத் தெரியாது. ஏனென்றால் புத்தகங்களில் கருத்துகள் அடுக்கடுக்காக வரும்.

தியானத்தில் இருப்பவர்கள் திரும்பச் சொல்கின்றார்கள் என்றால் அவர்கள் தியானத்தில் இருப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும்.
1.யாம் தந்தருளிய தியான முறையினைக் கடைப்பிடித்து வருபவர்கள்
2.தாங்கள் படித்த கருத்தினுடைய மூலங்களை அடுக்கடுக்காகச் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

காரணம் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…!
1.பதிவான உணர்வுகள் எலக்ட்ரான் என்ற முறைப்படி அது காற்றில் இருப்பதை எடுத்து
2.நம்முடைய இயக்கச் சக்தியாக்கக் கூடிய ஞானம் நமக்கு வருகின்றது.

ஞானத்தின் தன்மை வந்தால் நமக்குள் தீமை புகாது வலிமை கிடைக்கும். நான் காட்டிற்குச் சென்று ஞானத்தைப் பெறுவேன்… “பெற வேண்டும்” என்று நினைத்தால் முடியாது.

ஒரு விஞ்ஞானி புதிய ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் இருக்கும் பொழுது பல சங்கடங்களை அனுபவிக்கலாம். அப்படி அவர் பல சிரமங்களை அனுபவித்துக் கண்டுபிடித்த இயந்திரத்தை நாம் சரியானபடி ஏற்றுக் கொண்டோமானால் அந்த விஞ்ஞான அறிவு நமக்கு பயன்படும்.

விஞ்ஞான அறிவு கொண்டு கம்யூட்டரை செய்து கொடுக்கின்றார்கள். சிரமப்பட்டுத் தான் அதைச் செய்து கொடுக்கிறார்கள்.

ஆனால் கம்ப்யூட்டரை விளையாட்டிற்குத் தட்டிக் கொண்டிருந்தால் பயன் ஒன்றும் இருக்காது.

அதைப் போன்று யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவு செய்து கொண்டபின்
1.அந்த உபதேசித்த உணர்வுகளை நினைவுபடுத்தி
2.நீங்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை எளிதில் நுகர முடியும்.

உங்கள் உயிர் வழி துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை நுகர்ந்து… உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுக்க முடியும். நாம் அனைவரும் இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு கொண்டு வந்துவிட்டோம் என்றால் நாம் எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க முடியும்.
1.நமக்குள் தீமைகள் வராது தடுக்க முடியும்.
2.மெய் வழி வாழ முடியும்… மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளை நாமும் கண்டுணர முடியும்.
3.மெய் ஞானிகளுடன் இணைந்து வேகா நிலை என்ற நிலையாக அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெற முடியும்.

எமது அருளாசிகள்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply