
எமது உபதேசங்களைப் பதிவாக்கி உங்கள் உயிரான ஈசனிடம் அதை அனுப்புங்கள்
இதற்கு முன் ஐதீகம் ஐதீகம் என்ற நிலையில் நம்மை அறியாமலே செயல்பட்ட சாங்கிய உணர்வுகளிலிருந்து… அதனின் விளைவுகளிலிருந்து விடுபட்டு
1.அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் நேரடியாகப் பற்றி அதனின் உணர்வின் துணை கொண்டு
2.எந்த நிமிடமும் ஒளியின் சரீரமாகி அழியா சரீரமாகி வேக நிலையாக நிச்சயம் நாம் விண்ணுலகம் செல்ல முடியும்.
அந்த நிலைகள் பெறுவதற்குத் தான் இதை உபதேசிப்பது.
எமது உபதேசங்கள் அனைத்தும் புத்தகங்களாகவும் ஒலி நாடாக்களாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் காலத்தைப் போக்க ஒவ்வொரு நாளும் அதைப் படித்து கேட்டு சிறுகச் சிறுக உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.
யாம் உபதேசித்த உணர்வுகளையும் அருள் மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளையும் நிச்சயம் நீங்கள் பெற முடியும். உங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.
நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் படைக்கின்றது… உடலாக ஆக்குகின்றது… உணர்வின் இயக்கமாக உங்களைச் செயல்பட வைக்கின்றது.
ஆகவே… உயிரே கடவுள் என்று மதித்து எண்ணுங்கள் அவன் படைத்த ஆலயமான உங்கள் உடலை வணங்குங்கள் அதே சமயத்தில்
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் கோடிக்கணக்கான குணங்களை இந்த உயிரே தெய்வங்களாக அமைத்தது.
2.அந்த நல்ல குணத்தின் நன்மை கொண்டே இந்த மனித உருவை உருவாக்கியது
3.அவன் உருவாக்கிய அந்த நல்ல குணத்தைக் காக்க “அவனுடன் ஒன்றுவோம்…”
மெய் ஒளி கண்டுணர்ந்த மெய் ஞானியின் அருள் சக்திகளை நாம் பெறுவோம். அவன் வழியில் என்றென்றும் அழியா நிலைகளாக மனிதன் முழுமை என்ற நிலை அடைவோம்.
உபதேச வாயிலாக உங்களுக்குள் அருள் உணர்வுகள் பதிவாகின்றது பதிவானதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுகின்றீர்கள்.
1.ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த அருள் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்…
3.துரித கதியில் நீங்கள் சக்திகளைப் பெற முடியும்.
குடும்பத்தில் சிக்கல்கள் இருந்தால்… மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து ஒற்றுமை ஏற்பட வேண்டும் தொழில் வளம் பெருக வேண்டும்… அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
இந்தச் சக்தி உங்களுக்குள் செயலாக்கும்…
1.உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்த உங்கள் எண்ணமே உதவும்… அந்த வலிமை பெறுவீர்கள்.
2.சிக்கலைத் தீர்க்கும் ஞானமும் மன உறுதியும் கிடைக்கும் சிக்கலைத் தீர்க்கும் மனமும் வரும்.
அதே சமயத்தில் உடலில் வந்த நோய்களை நீக்க அருள் வாக்குகளைக் கொடுக்கின்றோம். நோய் நீக்கும் சக்திகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய்கள் நீங்க வேண்டும் என்று அது என்னென்ன நோயோ அதை நீங்க வேண்டுமென்று அடிக்கடி எண்ணும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியைப் பற்றுடன் பற்றுகின்றீர்கள்… அது அதிகமாக விளைகின்றது.
பாலிலே ஒரு துளி விஷம் பட்டால் நஞ்சாகி விடுகின்றது அதில் ஆயிரம் கூட பாலை விட்டால்… நஞ்சின் தன்மை குறைந்து பாலுக்கே அது ஊட்டசக்தி கொடுக்கின்றது.
இதைப் போன்று தான்
1.அருள் ஞானிகள் என்பவர்கள் பல ஆயிரமாயிரம் குடம் பாலைச் சம்பாதித்தவர்கள்… நஞ்சினை நீக்கும் சக்தி பெற்றவர்கள்.
2.ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் அதை ஆத்ம சுத்தி மூலம் எடுக்கப்படும் பொழுது
3.வாழ்க்கையில் வந்த நோய்களை நீக்க பல ஆயிரம் குடம் பாலின் சக்தியாக நமக்குள் சேர்க்கப்படுகின்றது.
ஆகவே நீங்கள் தியானத்தில் அந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று தியானியுங்கள்… அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று தியானியுங்கள்.
இது தான் வாழ்க்கையை தியானம் என்று சொல்வது. இதை நீங்கள் கடைப்பிடித்துப் பாருங்கள் அனைத்தும் நன்றாகும்.
இந்த உபதேசங்களை உங்களுக்குள் ஆழமாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்
1.அதை உங்கள் உயிரான ஈசனிடம் அனுப்புங்கள்
2.அவன் அந்த உணர்வுகளை வித்தாக விளையயச் செய்வான் அது உங்களுக்குள் விளைகின்றது.
3.விளைந்த நிலைகள் கொண்டு உங்களுக்கு ஆறுதலான மன பலமும் மனவளமும் பெறுவீர்கள்
4.மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் உங்களை அவனே அரவணைத்து அழைத்துச் செல்கின்றான்… தன்னுடன் அணைத்துக் கொள்கின்றான்.
இதைச் செயல்படுத்துங்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.