தனக்குள் வந்த தீமைகள் அனைத்தையும் ஒடுக்கி ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள் தான் “மகரிஷிகள்”

தனக்குள் வந்த தீமைகள் அனைத்தையும் ஒடுக்கி ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள் தான் “மகரிஷிகள்”

 

கோழி… விஷமான உணவுகளை உட்கொண்டாலும் அந்த விஷத்தினை ஒடுக்கித் தன் உடலின் தசைகளாக மாற்றித் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றது. மயில் போன்ற பெரும்பகுதியான பறவை இனங்களும் விஷத்தை ஜீரணிக்கக் கூடிய சக்தி பெற்றவைகள் தான்

இதைப் போன்று தான்
1.மனிதனின் வாழ்க்கையில் தனக்குள் வந்த கடும் தீமைகளை… அதனின் செயலாக்கங்களை ஒடுக்கி
2.தன் இணைப்பின் நிலையாகச் செயல்படுகின்றார்கள் மகரிஷிகள்.

அப்படிச் செயல்பட்டவர்கள் தான் தன் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதற்குப் பின் வந்த மனிதர்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கற்றைகளைச் சந்தர்ப்பத்தால் கவர்ந்து
2.தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இணைக்கப்படும் பொழுது
3.உடல் பெறும் நிலைகளை மாற்றி விட்டு உயிருடன் ஒன்றி
4.ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்

அது தான் சப்தரிஷி மண்டலம் என்பது. ஏழாவது நிலை என்றால் சப்தரிஷிகள் என்பது.

ஆகவே நம்முடைய ஆறாவது அறிவால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தனக்குள் செயல்படாதபடி தடுத்து… ஒவ்வொரு உணர்வின் தன்மையும் அடக்கி… அருள் உணர்வுகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் உடலை விட்டுச் சென்ற பின்…
1.எந்த மகரிஷியின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ அவரின் உணர்வுகள் நமக்குள் வலுப்பெற்று
2.துருவ மகரிஷி எப்படித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளாரோ
3.அவரின் ஈர்ப்பு வட்டத்திற்கு அது நம்மை அழைத்துச் சென்று விடும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் அடுத்து உடல் பெறும் விஷத்தன்மைகளை ஒடுக்கிவிடும். பின் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றி விடும்… அதற்குப்பின் நமக்குப் பிறவி இல்லை.

விண்ணுலகில் உருவாகும் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பெரும் கூட்டமைப்பாக முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தக் கூட்டமைப்புக்குள் “சாதாரண கண்களுக்குப் புலப்படாத அளவுகளில்” விண் சென்றவர்கள் அனைத்தும் ஒளியின் சரீரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்…!

நாம் சென்றடைய வேண்டிய எல்லை அதுதான்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply