உபதேசக் கருத்துக்களை (வாக்கு) அழுத்தமாகச் சொல்வதன் காரணம் என்ன…?

உபதேசக் கருத்துக்களை (வாக்கு) அழுத்தமாகச் சொல்வதன் காரணம் என்ன…?

 

இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய ஞானிகளின் அருள் வித்துக்களைப் பெறச் செய்வதற்குத் தான் உபதேசத்தின் வாயிலாக வாக்குகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு)

விஞ்ஞான அறிவு கொண்டு வாழ்க்கைக்காக வேண்டி ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டுப் பதிவாக்கி… புத்தக வாயிலாகப் படித்து… பின் அதை எல்லாம் நினைவு கொண்டு பரீட்சை எழுதி அதில் தேர்ச்சி பெறுவது போன்று
1.மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை உங்களுக்குள் கொடுத்து
2.துன்பத்தை நீக்கிடும் மெய் ஒளியின் தன்மையாக மெய் ஞானத்தின் அருளாற்றலைப் பெறச் செய்து
3.உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் இருள் சூழும் நிலைகளை நீக்கிடும் சக்தி பெற வேண்டும் என்பதற்காக
4.குருநாதர் காட்டிய அருள் வழியிலே வாக்கின் வன்மையாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

ஆகையினால் தான்… “இதை உங்களிடம் அழுத்தமாகச் சொல்வது…!”

“திட்டியவனை” எண்ணியவுடன் எவ்வளவு வேகமாக அந்த உணர்ச்சியின் வேகங்கள் கிளம்புகின்றதோ அதே மாதிரி
1.அந்த அருள் ஞானிகளைப் பற்றி உங்களுக்குள் “அழுத்தமாக” உபதேசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் உந்தும்
2.அப்பொழுது உங்களைச் சார்ந்தவர்களோ மற்றவர்களோ யாராவது சாபங்கள் இட்டிருந்தால்
3.உங்கள் உடலுக்குள் அது இருந்தால் அதை உணரச் செய்யும்… அதே சமயத்தில் எரிச்சலாகிப் பல நிலைகள் ஆகும்.

ஆனால் எரிச்சலாகும் பொழுது…
1.என்னடா சாமி இப்படிச் சொல்கிறார்…! என்று எழுந்து சென்று விட்டால் “யாம் சொல்வது எல்லாம் போய் விட்டது”
2.எப்படியும் இந்த உபதேசத்தைக் கேட்டு எனக்குள் இருக்கும் பாவ நிலைகளும் சாப நிலைகளும் தீர வேண்டும் என்று எண்ணினால் “பாவங்கள் போய்விடும்”
3.இல்லை என்றால் “நல்ல சக்திகளைப் பெறுவது போய்விடும்…”

குருநாதர் காட்டிய வழியிலே எப்படியும் அந்த உயர்ந்த சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… நல்லது நடக்க வேண்டும்… என்பதற்குத்தான் தெளிவாகச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் தெரிந்து எதுவும் முடிவதில்லை
2.தெரிந்து யாரும் அவ்வாறு செயல்படுத்த முடியாது
3.சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாக்கின் வன்மையும் தான் இயக்குகின்றது.

“ஏனென்றால் அது பிரணவம்…!”

“உயர்ந்த எண்ணத்தைத் தனக்குள் சிருஷ்டிக்க வேண்டும்” என்ற உணர்வின் ஏக்கத்தைத் தூண்டச் செய்து அந்த உணர்வுக்குள் பல நிலைகளை உங்களைப் பழக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
3.உங்கள் உடலுக்குள் இவ்வாறு தியானித்து அந்தச் சக்தியை ஏற்றிக் கொள்ளுங்கள்.

திரும்ப அதே உணர்வுடன் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒருவன் நம்மைத் திட்டினான் என்றால் அவனை நாம் மீண்டும் மீண்டும் நினைத்து அப்படிப் பேசினான்… பேசினான்… என்று அந்த வேகங்களைக் கூட்டிக் கொள்கின்றோம் அல்லவா…! மீண்டும் மீண்டும் அவனைப் பற்றி பேசுகிறோம் அல்லவா…!

அதைப் போன்று தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வினைத் திணிக்கச் செய்கின்றேன். இந்த உணர்வுகள் உள்ளே செல்லச் செல்ல துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் அது விலகும்.

அழுக்கு நீரில் நல்ல நீரை ஊற்ற ஊற்ற… அழுக்கு நீர் குறைந்து நல்ல நீர் பெருகி வரும். அது போன்று தான்
1.உங்களுக்குள் இருக்கக்கூடிய சங்கட அலைகள் அது படிப்படியாகக் குறையச் செய்வதற்கு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
3.ஒவ்வொரு நிமிடமும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்யுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப அந்த உணர்வுகளை ஏங்கிச் சுவாசியுங்கள். அதை உங்கள் உடலுக்குள் பரப்புங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உயிர் வழி இந்த உணர்வுகளை உள்ளே செலுத்தப்படும் பொழுது உங்கள் துன்பங்கள் நீங்குகிறது.

Leave a Reply