சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் ஆற்றல்

சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் ஆற்றல்

 

அகஸ்தியனும் அவர் மனைவியும் இருவருமே நம் பூமியின் துருவத்தின் வழி வரும் உணர்வுகளை அது தாவர இனங்களாக மாறுவதற்கு முன் அதன் உணர்வின் ஒளி அலைகளை நுகர்ந்தறிகின்றனர்.

1.துருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி… பிரபஞ்சத்திலிருந்து வரும் உணர்வினைத் தனக்குள் பெற்று
2.தன் வளர்ச்சியின் முதுமையில் இருவரும் ஒன்றாக இணைந்து
3.அவருடைய தாய் தந்தையரின் உயிரான்மாக்களும் இவர்களுடன் இணைந்து
4.உடலை விட்டுச் சென்ற பின் “ஓர் குடும்பமாக… முதல் துருவ நட்சத்திரமாக அமைக்கப்படுகின்றது…!”

இருவரின் உயிரான்மாக்களும் அங்கே சென்றபின் இவர்கள் உடலுடன் இணைந்த தாய் தந்தை உயிரான்மாக்களும் துருவத்தைச் சென்றடைகின்றனர். அடைந்தபின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சேர்க்கப்படும் போது ஆறாவது அறிவின் தன்மை… ஏழாவது நிலைகள் அடைந்து “சப்தரிஷி மண்டலங்களாக அமையப்படுகின்றது…”

அவர்கள் முதலில் துருவ நட்சத்திரமாக ஆனபின் அவர் ஆற்றலின் துணை கொண்டு தாய் தந்தையர்களும் அவருடைய ஈர்ப்பு வட்டத்திலேயே சுழலத் தொடங்குகின்றார்கள்.

அதன் வளர்ச்சி கொண்டு அக்காலங்களில் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நுகர்ந்தவர்களும்… அதைப் பின்பற்றியோரும்… உடலை விட்டுப் பிரிந்த பின் அவர்கள் செய்தது போன்றே இவர்களும் சப்தரிஷி மண்டலங்களாக அமைந்து வளர்ச்சி பெற்று (முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களாக) வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால்…
1.இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இவை அனைத்தும்… ஏன் நான்காயிரம் ஆண்டுகள் என்று கூடச் சொல்லலாம்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் சக்திகள் மனிதனில் குறைவாகி குறைவாகி குறைவாகித் தேய்பிறையாக ஆகி… இன்று மறைந்து விட்டது.
3.வான்மீகி வியாசகர் போன்றவர்கள் கடைசியாக விண் சென்றார்கள்.
4.அதற்குப்பின் ஒன்றொன்றாகக் குறையப்பட்டு… விண்ணுலகம் செல்லும் தன்மைகள் குறைந்து விட்டது.

அரசர்கள் என்ற நிலை முதலில் உருவானதும் அவர்கள் இட்ட சட்டங்களைத் தான் பின் வந்தோர் சிற்றரசர்கள் பேரரசர்கள் என்று உலகெங்கிலும் பரவத் தொடங்கியது.

மனித உடலின் இச்சைக்கும் சுகபோகங்களுக்கும் இது மாற்றப்பட்டு… அதற்குப் பின் விண்ணுலகம் செல்லும் ஆற்றலைப் பெறும் தகுதிகள் இழக்கப்பட்டு விட்டது.

மனிதனில் உயர்ந்த நிலை பெற்றவர்கள்…! என்று
1.அதிலே மந்திரங்களைச் சொல்லித் தன் வாழ்க்கையில் பெருக்குபவர்களை…
2.கடவுளாக எண்ணியும் ரிஷிகளாக எண்ணியும் திசைகள் மாற்றப்பட்டு
3.இன்றளவிலும் விண்ணுலகம் செல்லும் நிலைகள் மறைந்தே போய் விட்டது.

நமது குருநாதர் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்தவர்…!

அன்று அகஸ்தியன் துருவ மகரிஷியாகி விண்ணுலகம் எவ்வாறு சென்றார்…? என்ற நிலைகளை அறியும் வாய்ப்புகள் பெற்ற பின்… அதன் வழி கொண்டு அவருக்குண்டான உணர்வின் துணை கொண்டு
1.விண் செல்லும் மார்க்கங்களை எனக்கு (ஞானகுரு) உபதேசித்து
2.எவ்வாறு விண் சென்றார்…? என்ற அந்த முறைகளையும் எனக்கு உபதேசித்தார்.

குருநாதர் உடலை விட்டுப் பிரியும் சமயம் உற்றுப் பார்க்கும்படி செய்தார் குருநாதர்…!
1.சப்தரிஷி மண்டலத்துடன் அவர் இணையும் ஆற்றலையும்
2.அவர் உடல் பெறும் உணர்வுகள் அங்கே எவ்வாறு கரைகின்றது…? என்பதையும் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

இப்பொழுது தற்காலத்தில் (1971) விண் சென்றவர் தான் நம் குருநாதர்…!

அவர் உயிரான்மா எவ்வாறு விண் செல்கிறது…? என்று விண் செல்லும் மார்க்கங்களை உபதேசித்தார். அதற்கு என்ன உபாயங்களைச் செய்ய வேண்டும்…? என்றும் சொன்னார்.

அவரைப் பின் தொடரும் நிலையாக… இதை எப்படித் தனக்குள் பெருக்க வேண்டும்…? என்று அவர் காட்டிய அருள் வழிப்படி செய்கின்றேன்.

அன்று அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன… அதன் வழிகளில் வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு. அதைப் பின்பற்றியோர் சப்தரிஷி மண்டலங்களாக உருப்பெற்ற உணர்வுகளும் உண்டு

அதை எல்லாம் எப்படிப் பெற வேண்டும்…? என்று குரு உபதேசித்த வழிப்படி நுகர்ந்தறிந்து எனக்குள் விளையச் செய்தேன்.
1.அதன் உணர்வின் எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் செவிப்புலனில் இது ஈர்க்கப்பட்டு
2.அதன் உணர்வின் துணை கொண்டு நீங்கள் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

மனிதனில் உயர்ந்து சென்ற அந்த மெய் ஞானிகள் தீமைகளை அகற்றிட்ட… அந்தத் தீமைகளை அகற்றும் உணர்வுகளை நுகரப்படும் போது தான்
1.நம் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி
2.என்றென்றும் பிறவி இல்லை என்று அடையச் செய்யும் உணர்வுகள் இங்கே உருப்பெறுகிறது.

Leave a Reply