“மனித வாழ்க்கையை அப்புறப்படுத்திவிட்டு…” மெய் ஒளியைக் காண வேண்டும் என்று பித்தராகச் செயல்பட்டவர் தான் ஈஸ்வரபட்டர்

“மனித வாழ்க்கையை அப்புறப்படுத்திவிட்டு…” மெய் ஒளியைக் காண வேண்டும் என்று பித்தராகச் செயல்பட்டவர் தான் ஈஸ்வரபட்டர்

 

பேரண்டத்தின் பேருண்மைகளை அறிந்து கொள்ள… பக்தி என்ற மார்க்கத்தில் நல்ல ஒழுக்கத்தைக் கடைபிடித்து நல்லதன் நிலைகள் கொண்டு… மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி அருள் உணர்வுகளைத் தனக்குள் கூட்டி… மெய் வழி செல்லும் மார்க்கங்களைச் சாதாரண மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் நன்னாள் தான் “மார்கழி மாதம் பௌர்ணமி…!”

ஏனென்றால்
1.இந்த மார்கழி மாதம் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்…
2.ஈஸ்வரபட்டராக இருக்கப்படும் பொழுது இந்த உடலில் இருந்து வெளிச் சென்று விண்ணுலகம் சென்றார்.

அவர் உடலுடன் இருக்கப்படும் பொழுது பேரண்டத்தின் பேருண்மையின் நிலைகளைச் சொல்லாக சொல்லி… எனக்குள் (ஞானகுரு) அதை உபதேசித்து உணர்த்தி… அவரின் ஆற்றல்மிக்க சக்தியைப் பதிவு செய்தார்.

குருநாதர் உங்களுக்குப் பதிவு செய்தார்… எங்களுக்கு நீங்கள் எப்படிப் பதிவு செய்கிறீர்கள் என்று நிறையப் பேர் கேட்கலாம்.

ஒரு மனிதன் நம்மைத் திட்டுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவன் நமக்குப் பின்புறமாக சுவருக்கு அப்பால் நின்று பேசிக் கொண்டிருந்தாலும்
1.என்ன…? நம்மைப் பற்றி குறை பேசுகிறார்களா…! என்று கூர்ந்து கவனித்தால் போதும்
2.அவன் திட்டியதெல்லாம் இங்கே பதிவாகின்றது.

பதிவான பின் என்ன செய்கின்றோம்…?

ஆகா… அவ்வளவு தூரத்திற்கு ஆகிவிட்டதா…? என்று அந்த உணர்வை ஏற்று அந்த உணர்வையே நாம் தியானிக்கிறோம்.

அதற்கடுத்து அவனுடன் சண்டை செய்வதற்கும் எப்படி எந்தெந்த வகையில் அவனுக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்றும் செயல்படுத்துகின்றோம். சாதாரண நிலையில் இப்படித்தான் இருக்கின்றோம்.

1.இது எல்லாம் காந்தப்புலனின் நிலைகள்
2.நாம் எதன் மேல் கவனத்தைச் செலுத்துகின்றமோ அந்தக் கவனத்தின் உணர்வலைகள் அதற்குள் பதிவாகின்றது.

தெளிவாக இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

குருநாதர் பித்தனைப் போன்று இருந்திருந்தாலும்… பல பல முறைகளிலே பல எண்ணங்களை எனக்குள் சொல்லும் பொழுது நான் முதலில் ஏற்றுக்கொள்ளாத நிலையில் தான் இருந்தேன்.

அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை. இப்போது நான் சொல்லும் பொழுது உங்களுக்குப் புரியவில்லை… புரியவில்லை… என்று சொல்கிறீர்கள் அல்லவா. சாமி… நீங்கள் சொல்கிறீர்கள்… எங்களால் திருப்பிச் சொல்ல முடியவில்லை…! என்று சொல்கின்றீர்கள்.

அதைப் போன்று தான் குருநாதர் அவர் உடலுடன் இருக்கும் போது எனக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது நான் செவிகளில் கேட்டாலும்
1.ஒரு நிமிடத்தில் கன்னடத்தில் பேசுவார்
2.ஒரு நிமிடத்தில் மலையாளத்தில் பேசுவார்
3.ஒரு நிமிடத்தில் தமிழில் பேசுவார்
4.ஒரு நிமிடத்தில் தெலுங்கில் பேசுவார்
5.இந்த உலகில் எத்தனை பாஷைகள் இருக்கின்றதோ அத்தனை பாஷைகளிலும் ஒவ்வொரு வார்த்தையைச் சொல்வார்.

அதை நான் எப்படிப் புரிந்து கொள்வது…?

எல்லாம் சொல்லி விட்டு நான் என்ன சொன்னேன்…? என்று கேட்பார்.

“தெரியவில்லை” என்று சொன்னால் ஏன் தெரியவில்லை…? என்று கேட்பார். “தெரிகிறது” என்று சொன்னால் என்ன தெரிந்து கொண்டாய்…? என்று கேட்பார். இரண்டுக்கும் நான் விடை சொல்ல வேண்டும்.

இப்படித்தான் என்னைச் சிக்கலிலே மாட்டிப் பல இம்சைகளைக் கொடுத்துக் கொடுத்துத் தான் பல பல முறைகளைக் கையாண்டு
1.என்னுடைய கவனத்தை அவர்பால் திருப்பச் செய்து
2.அவர் என்ன சொல்கிறார் என்று உற்றுக் கவனிக்க செய்து
3.அவருடைய சொல்வாக்கின் நிலைகளைப் பதிவு செய்தார்.

அப்படிப் பதிவு செய்த அந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்தாற்போல் அடித்து விடுவாரோ… திட்டி விடுவாரோ… பிடித்து விடுவாரோ…! என்ற
1.இந்த எண்ணத்தைக் கொண்டு தான் அவரைக் கூர்ந்து கவனித்து
2.அவருடைய சொல்லுக்குள் நான் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
3.அந்த ஆற்றல் மிக்க நிலையை எனக்குள் பதிவு செய்தார்.

ஏனென்றால் அந்த அருள் ஞானி அவர் சொன்னது ஒன்றும் புரியவில்லை என்றாலும் நான் ஜெபமிருந்து வரம் வாங்கி அதை எடுக்கவில்லை.

அவர் உணர்வின் ஆற்றலை எனக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு அவர் சென்ற வழிகளிலேயே அதன் வழிகளில் பின்னாடி அதைப் பின்பற்றும் பொழுது தான் அந்த ஆற்றலின் சக்தியை நான் உணர முடிந்தது. இப்பொழுது அதை உங்களிடம் பரிமாறிக் கொள்ளவும் முடிகின்றது.

விண்ணுலக ஆற்றலையும் மண்ணுலகத்தின் தன்மையும் மண்ணுலகத்தில் விளைந்தது உயிரியலாக மனித உடலுக்குள் உயிர் நிலைகளில் இருந்து மனிதனுக்குள் விளைந்தது எவ்வாறு…? என்ற நிலையை உணர்த்தினார்.

அதை நான் பின்பற்றுவதற்கு எத்தனையோ முறைகளைக் கையாண்டார்.

குருநாதர் ஆற்றல் பெற்ற நிலைகளில் ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில் செயல்பட்டார். ஆனாலும் பித்தரைப் போன்று தான் பல சரீரங்களில் இருந்துள்ளார்.

“பித்தன்…!” என்றால்
1.புறவாழ்க்கையின் நிலைகளை (அதாவது இன்று நாம் வாழும் வாழ்க்கை என்ற நிலைகளை) அப்புறப்படுத்திவிட்டு
2.மெய் ஒளியையே காண வேண்டும் என்ற உணர்வுடன் தான் அவர் கடந்த காலங்களில் செயல்பட்டுள்ளார்.

மெய் வழியில் செயல்பட வேண்டும் என்று அன்று எண்ணி இருந்தாலும் “அவர் எண்ணங்கள் அனைத்தும்” அவருக்குள் விளைவித்த அனைத்தையும் அக்காலத்தில் வாழ்ந்தோருக்கும் சரி… இக்காலத்தில் வாழ்வோருக்கும் சரி… அவர் எண்ண ஒளிகளைப் பதிவு செய்து அவரவர் எண்ணங்களிலே அதை விளைவிக்கும் ஆற்றலாகத் தான் வெளிப்படுத்திச் சென்றார்.

ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில் இருக்கப்படும் பொழுது அவரை அணுகியவர்கள்… சந்தித்தவர்கள்… அனைவருமே
1.சொத்து வேண்டும்… சுகம் வேண்டும்… நோய் போக வேண்டும்,,, வைத்தியம் பார்த்து அதிலே சம்பாதிக்க வேண்டும்…
2.குருநாதரிடம் ஆசி வாங்கினால் வீடு வாங்கலாம் சொத்து வாங்கலாம் வயல்கள் வாங்கலாம் என்ற இந்த ஆசையில் தான் வந்தார்கள்.

ஆனால் நானோ அவரைப் பார்க்கும் போதும் சரி… அவர் என்னைக் கூப்பிட்டுச் சொல்லும் போதும் சரி… இவர் பெரிய மந்திரக்காரர் போல் இருக்கிறது… பித்துப் பிடித்திருக்கின்றார்…! என்ற எண்ணத்தில் அவரை பார்த்தாலே நான் விலகி ஓடிக்கொண்டு இருந்தேன்.

ஆனால் நகர்ந்து விலகிச் சென்றாலும்… “உன்னை விட்டேனா பார்…!” என்று விரட்டிக் கொண்டு வந்தார். தப்பித்து நான் விலகிச் சென்றாலும் கூட அவருடைய மெய் உணர்வின் தன்மையை பல சக்திகளை எனக்குள் பதிவு செய்தார்.

குருநாதர் மெய் ஒளியைக் கண்டு.. இந்த மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று தான்… அவர் விண் சென்றார்.

ஆகவே அவர் எனக்கு உணர்த்திய நிலைகள் கொண்டு
1.ஞானத்தைப் பெற வேண்டும் என்று உண்மையான நிலைகளில் வருபவருக்கு
2.அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் எல்லோருக்கும்… கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலே தான் இதை வெளிப்படுத்துகின்றேன் (ஞானகுரு).

Leave a Reply