மனிதப் பிறவியில் நாம் செய்ய வேண்டிய சாதனை

மனிதப் பிறவியில் நாம் செய்ய வேண்டிய சாதனை

 

நம் பூமியில் பல காலங்களாகவும் இன்றைய காலங்களிலும் பலர் பல உண்மை ஆராய்ச்சி நிலையில் பல சாதனைகளை வெளிப்படுத்திக் கொண்ட தான் வந்துள்ளார்கள்… அதே வழித் தொடரிலும் வாழ்கின்றனர்.

ஆனால்..
1.மனிதன் பல புதிய புதிய நுண்ணலை ஈர்ப்பால் பல செயல்களைச் செய்கின்றான் என்றாலும்
2.அந்த மனிதன் தன் ஆத்ம உயிரணுவிற்கு.. அந்த ஒளியின் பால் செல்வதற்குகந்த வழி ஆற்றல் பெறவில்லை.

பல மேதைகள் உண்டு…! ஆனாலும் அந்த மேதைகளினால் எதன் அடிப்படை ஆராய்ச்சி ஈர்ப்பில் தன் எண்ண ஞானத்தைச் செலுத்தி வழி பெறுகின்றனரோ… அதன் தொடர் ஞானம் ஒன்றின் பால் மட்டும் அவர்களின் ஈர்ப்பில் சுவாசம் உள்ளதனால்… அதன் சுழற்சி வட்டத்தில் மட்டும் தான் உள்ளனர்.

ஆக… உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகும் அதே எண்ண செயலுக்காகப் பிறிதொரு ஜீவ ஆத்மாவுடன் தொடர்ச்சிப்படுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் ஒரு ஜென்மத்திற்கு வருகிறார்களேயன்றி தன் ஆத்ம ஜீவ உயிரணுவின் வளர்ச்சியில் ஒளி அலையுடன் கலக்கவிடும் நிலை எய்துவதில்லையப்பா.

இங்கே போதிக்கப்படும் நிலைகள் கொண்டு…
1.ஒவ்வொருவரும் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தில் நுண்ணிய ஈர்ப்பலையின் நினைவைச் செலுத்தி
2.சக்தி கொண்ட மகான்களின் ஒளியுடன் நம் எண்ண நுண்ணிய அலை பதியும் பொழுது
3.அதன் தொடரிலிருந்து அவர்களின் ஒளி அலையை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய வழித் தொடர் பெற்று
4.இந்த உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களும் அம்மகான்களின் தொடர் அலையுடன் கலக்கும் வழி நிலை பெற்றால்
5.இன்று இப்பிரபஞ்ச ஆதி சக்தியின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள பல கோடிக் கோளங்களின் வளர்ச்சி ஏற்படுத்திய
6.சப்தரிஷிகளின் ஒளி வட்டம் போல் நம் நிலையும் நிலைத்து நிற்கும்

எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே. மனிதனுக்கு மட்டுமல்ல.. மற்ற எல்லா நிலைகளுக்குமே…!

1.மனிதனுக்கு எப்படித் தன் எண்ணத்தின் சுவாச ஈர்ப்பை இந்த உடல் பிம்பம் பலவாக உள்ள நரம்புகளில் ஈர்த்து
2.இந்த உடல் முழுமைக்குமே எண்ணத்தின் சக்தி பிம்பம் பரப்புகின்றதோ
3.அதைப் போன்று ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் மற்ற மற்ற எல்லா இயற்கை வளங்களுக்குமே
4.இந்த ஈர்ப்பலையை உறிஞ்சக்கூடிய நரம்புகள் உண்டு.

அமிலத்தின் ஒளி சக்தியை ஈர்த்து ஜீவன் பெற்று துடிப்பு நிலை ஏற்படும் நிலையிலேயே “ஈர்க்கும் காந்த நரம்புகள்…!” வளர்ச்சி பெறுகின்றன.

ஆனால் மனிதச் சுவாச ஈர்ப்பினால் எந்த ஈர்ப்பின் நிலையில் மனிதன் உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள இரத்தத்தில் அவன் எடுக்கக்கூடிய எண்ணத்திற்கொப்ப எல்லாம் அவன் உடலில் உள்ள இரத்தத்தில் வளரும் ஜீவ அணுக்களின் நிலையும் கலந்து விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட சுவாசம் கொண்டவை தாவரங்கள்.
1.மனிதனையும் மற்ற மிருகத்தையும் ஒத்த இரத்த ஓட்டச் சுழற்சி இல்லாமல்
2.நரம்பின் ஈர்ப்பினாலேயே ஒரு நிலையில் காந்த சக்தியையே ஈர்க்க வல்லது தாவரம்.

பலவாக உள்ள எண்ணக் கலப்பில் பலவற்றையும் எண்ணி வாழும் மனிதன் தன் எண்ணத்தில் எடுக்கும் ஒவ்வொரு நிலையினாலும் அவன் பிம்ப உடலை அவனே பல நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

இந்த நிலையிலிருந்து எல்லாம் மீண்டு… பல நிலைகள் மோதிடும் நிலையை நம் எண்ணத்தில் பதிய விடாமல் “சமமான நிலையில்” நம் எண்ண ஈர்ப்பை வழிப்படுத்திடல் வேண்டும்.

ஆக வாழ்க்கைக்குகந்த செயலுடன் இந்த எண்ணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் தன் பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனின் சக்தியில் அவதரித்த…
1.ஆண்டவன் என்ற உயிராத்மாவுடன் வாழும் நாம்
2.அந்த ஆண்டவனுக்கு உகந்த காணிக்கையாக நம்மை நாமே ஆண்டவனாக்கிக் கலப்பது தான்
3.மனித ஆத்மாவின் எண்ண வளர்ச்சியின் வழித் தொடர் இருந்திடல் வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை.

Leave a Reply