எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை

எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை

 

குருநாதர் சொன்ன முறைப்படி இமயமலையிலே நான் (ஞானகுரு) சென்று கொண்டிருந்தேன். அங்கே பனிப்பாறையைக் கடந்து செல்லும் பொழுது அந்தப் பாதை திடீரென்று இடிந்து விழுந்து விட்டது.

அந்த நேரத்தில் குருநாதர் என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சொல்லிக் கொடுத்த அத்தனையும் மறந்து விட்டேன். மரணம் அடையும் நிலையே ஏற்பட்டு விட்டது. என் மனைவி மக்களை எல்லாம் எண்னத் தொடங்கிவிட்டேன்.

குருநாதர் காட்சி கொடுக்கின்றார்…
1.பனிப்பாறைகள் நொறுங்கிய பின் திரும்ப எப்படிப் போவது…? என்று பயந்தாய்…
2.உனக்குள் புயலே வந்து விட்டது… தலை சுற்ற ஆரம்பித்து விட்டது
3.உன்னுடன் இணைந்த மனைவி மக்களள் எல்லோரையும் எண்ணத் தொடங்கி விட்டாய்.

அவர்களை எண்ணும்போது இந்தப் பனியின் குளிரிலிருந்து தப்ப முடியவில்லை நீ மரணம் அடையும் நிலைக்கு வந்து விட்டாய்… இப்போது நீ யாரைக் காக்கப் போகின்றாய்…? என்று கேட்டார் குருநாதர்.

ஆகவே மனமே இனியாகிலும் மயங்காதே…! இந்த மனித வாழ்க்கையில் நீ தயங்காதே..
1.இந்த உடல் ஆசையை நீ வைக்காதே
2.எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்
3.ஆனால் நடக்காது தடுப்பதற்கு உனக்குள் சக்தி கொடுத்துள்ளேன்.

அதை எண்ணி எடுக்காதபடி… இந்த உடல் இச்சையை நீ பட்டு விட்டால்… “என் குழந்தை… என் பிள்ளைகள்… என் மனைவி…!” என்று நீ எண்ணினால் இந்த உணர்வின் இச்சைப்பட்டு… உடலை விட்டு நீ கீழே வந்து விடுகின்றாய்.

உன் குழந்தையின் ஈர்ப்பிற்குள் போகின்றாய்… அல்லது மனைவியின் ஈர்ப்புக்குள் தான் செல்ல முடியும். அந்தக் குழந்தையையும் மனைவியையும் நிம்மதியாக இருக்க வைக்க முடியுமா…?

“நீ இறந்து விடுகின்றாய்…” என்று வைத்துக் கொள்வோம். தன்னைக் காத்தவர் என்று ஆசையுடன் அவர்கள் ஏங்கி இருக்கப்படும் பொழுது அவர் உடலுக்குள் எளிதில் புகுந்து அவர்களையும் திருந்தி வாழ முடியாத நிலைகள் கொண்டு அனாதையாக்கி… நோயாக்கி விடுகின்றாய்.

1.உன்னை நம்பிய அனைவருக்கும் நீ பட்ட வேதனைகளை உருவாக்கி
2.துரித நிலையில் அவர்களும் மடியும் தன்மையை நீ உருவாக்குகின்றாய்.
3.அந்த வேதனையைத்தான் உன்னால் அங்கே உருவாக்க முடியும் அவர்களைக் காக்க முடியாது.

ஆகவே நீ எண்ணிய உணர்வுகள் அவர்கள் உணர்வுடன் நீ மடிந்தாலும் அவர்கள் உடலுக்குள் தான் செல்கின்றாய். அவர்களையும் அழித்து விடுகின்றாய்.

அந்த உடலுக்குப் பின் எந்த வேதனையும் துயரத்தையும் பட்டாயோ இந்த உயிர் அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்… அடுத்து நீ எங்கே போகின்றாய்…? என்று தெரியுமா…!

நீ எந்த வேதனை என்ற உணர்வை எடுத்தாயோ… அந்த விஷத்தையே தனக்குள் ஜீரணித்துத் தன் உடலைப் பாதுகாக்கும் கொள்ளும் அத்தகைய உயிரினங்களுக்குள் அழைத்துச் சென்று உயிர் அதற்குத் தக்க உடலை அங்கே உருவாக்கிவிடும்.

இதனை அனுபவபூர்வமாகக் காட்சியாகவே குருநாதர் காட்டுகின்றார்.

அதற்குப் பின் அங்கிருந்து டெல்லி வந்து… சென்னைக்கு விமானத்தில் திரும்பும் போது… குருநாதர் இன்னொரு அனுபவத்தையும் கொடுக்கின்றார்.

விமானத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்மறையான காற்று மண்டலத்திற்குள் செல்லும் போது “விமானம் கவிழும்…” சந்தர்ப்பம் ஏற்பட்டது.

விமானி முதற்கொண்டு மற்றவர்கள் எல்லாருமே பயந்து கதிகலங்கி விட்டார்கள். நான் மட்டும் அசையாமல் உட்கார்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.

குருநாதர் அங்கே சில விளக்கங்களைக் கொடுக்கின்றார்.

மற்றவர்கள் எல்லாம் பயந்தார்கள்… நீ ஏன் பயப்படவில்லை…?
1.உடலின் இச்சையை நீ படவில்லை… நீ உயிரின் இச்சைப்பட்டாய்.
2.உயிர் ஒளியானது.. அறிவின் தன்மை ஆனது.
3.அதே அறிவின் தன்மை நீ அச்சமில்லாது இருப்பதனால் உனது சக்தியும் சேரலாம் என்று சொல்கிறார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு நொடிக்குள் எடுத்து அங்கே செலுத்துகின்றாய்… அவர்களையும் காக்கின்றாய்… உன்னையும் காத்துக் கொண்டாய்…!

அத்தனை பேரிலும் ஒருவன் நீ எண்ணிச் செயல்பட்டதால் “இது உனக்குள் இருக்கக்கூடிய வலு…” என்று சொல்கின்றார். இப்படிக் காக்கப்பட்ட விமானங்கள் எத்தனையோ…! என்று விமானத்தில் வைத்து குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.

இருந்தாலும்… எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை.

இன்று நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் சரி… மகான் என்று மக்கள் மத்தியிலே அவரைப் போற்றிக் கொண்டிருந்தாலும் சரி…
1.இந்த உடலின் விதி முடிந்து விட்டால்..
2.எதனுடைய அழுத்தம் அதிகமாகின்றதோ இந்த உடல் போய்த்தான் ஆகும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் அதிகரித்து விட்டால் இந்த மனித உடல் என்ற இச்சையிலிருந்து விடுபட்டு… உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறுகின்றது.

Leave a Reply