ஆயுள் மெம்பர் என்றால் வெறுமனே அல்ல… ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே இருக்க வேண்டும்

ஆயுள் மெம்பர் என்றால் வெறுமனே அல்ல… ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே இருக்க வேண்டும்

 

பூமியில் உயிரணு தோன்றி பல உடல்களைப் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆனபின் முதல் மனிதன் அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது விஷத்தை வென்றிடும் சக்தி பெற்றான்.

அவன் பிறந்த பின் எத்தகைய விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றான். அவனின் வளர்ச்சியில்
1.வானுலகில் வரும் மின்னல்களைத் தனக்குள் நுகர்ந்து
2.உயிரைப் போலவே உணர்வை ஒளியாக மாற்றினான்.

கணவன் மனைவியும் இருவரும் சேர்ந்து துருவத்தின் வழி வரும் ஆற்றல்களைக் கவர்ந்து ஒளியின் சரீரமாக ஆகி நம் பூமியின் துருவப் பகுதியில் துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்… வளர்கின்றார்கள்.

அதிலிருந்து வரும் சக்திகளைத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
1.துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஆயுள் மெம்பராக இணைக்கின்றோம்
2.இணைத்தாலும் வெறுமனே ஆயுள் மெம்பராக இருக்கக் கூடாது.

குடும்பத்தில் ஆனாலும் சரி… அல்லது புறத்திலே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி… அல்லது தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி…
1.வேதனைப்படுவதோ வேதனைப்படுத்துவோரைப் பார்ப்பதோ…
2.சாபம் விடுவோரைப் பார்ப்பதோ அல்லது சாபமிடும் நிலைளுக்கு நாமே ஆளாகுவதோ…
3.இது எல்லாம் நுகர்ந்து… நுகர்ந்த பின் தான் அறிகின்றோம்
4.அறிந்து கொண்டாலும் அது நமக்குள் உருவாகாதபடி… விளையாதபடி ஆயுள் மெம்பர்கள் முதலிலே தடுத்து பழக வேண்டும் (இது முக்கியம்).

ஒரு வித்தை வேக வைத்தால் அந்த வித்து மீண்டும் மண்ணிலே ஊன்றினால் முளைக்காது. வேக வைத்த பொருள்கள் எதுவுமே மண்ணிலே போட்டால் முளைப்பதில்லை.

ஆகவே இந்த வாழ்க்கையில் வேதனையோ சலிப்போ சங்கடமோ கோபமோ குரோதமோ இதைப் போன்ற உணர்வுகளை நுகர நேர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஆயுள் மெம்பராகச் சேர்த்துக் கொண்ட நிலையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போல் பதிவு செய்திருக்கிறது.
1.தீமை என்ற நிலை வந்தால் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்
2.கண்களின் நினைவு புருவ மத்தியில் இருக்க வேண்டும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணின் நினைவ மேல் நோக்கி வானிலே செலுத்திக் குறைந்தது ஒரு நிமிடமாவது ஏங்க வேண்டும்.

காரணம்… எத்தகைய விஷத்தையும் வென்று அதை ஒளியாக மாற்றிக் கொண்டே இருப்பது துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத் தான் இந்நேரம் வரையிலும் உபதேசித்தது.

இந்த உணர்வை நீங்கள் சீராக எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சொல்லி விட்டால் இங்கே நின்று விடும்.
1.அதைத் தாண்டி உடலுக்குள் போவதில்லை
2.அதைத் தான் இராமன் வாலியைக் குகையின் மீது இருக்கும் பாறையைத் தட்டி வீழ்த்தி விடுகிறான் என்று காட்டுகிறார்கள்.
3.குகையை மூடிவிடுகிறான்… வாலி வெளியே வருவதற்கில்லை.
4.அவனுடைய செயலாக்கங்கள் தடுக்கப்படுகிறது.

வாலி என்றால் யார்…?

வேதனைப்படுவது கோபப்படுவது கொதிப்படைவது சலிப்படைவது சங்கடப்படுவது இது போன்ற மோசமான உணர்வுகள் எல்லாமே வாலி தான்.

ஒருவர் திட்டுகிறார்… நம்மைத் தவறாகப் பேசுகிறார்… என்றால் நமக்குள்ளும் அதே உணர்வுகள் வந்து உணர்ச்சியைத் தூண்டி இயக்கத் தொடங்குகிறது. நம்மால் அடுத்து நல்ல எண்ணங்களை எண்ண முடிகிறதா…? இல்லை.

இது நம் இரத்தங்களில் கலந்தால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்குள் விஷத் தன்மையாக மாறும். நம்மைச் செயலற்றதாக மாற்றும். அதனால் தான் வாலி யாரைப் பார்த்தாலும் அவர்களிடமிருந்து சம வலுவைப் பெற்று விடுவான் என்று சொல்வது.

அதை மாற்றுவதற்குத் தான் ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொடுக்கின்றோம். துருவ நட்சத்திரத்துடனே உங்கள் வாழ்க்கையை இணைக்கும்படி செய்கிறோம்.

Leave a Reply