ஐந்து தலை நாகன் மீது நாராயணன் பள்ளி கொண்டு உலகையே இயக்குகின்றான்… எப்படி…?

ஐந்து தலை நாகன் மீது நாராயணன் பள்ளி கொண்டு உலகையே இயக்குகின்றான்… எப்படி…?

 

27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் துகள்களைச் சூரியன் தன் உணவாக எடுத்துக் கொண்டாலும் தனக்குள் இருக்கும் பாதரசத்தால் மோதி அதில் உள்ள விஷத்தைப் பிரித்து விட்டு… வெப்பம் காந்தம் என்று உருவாக்குகிறது.

இருந்தாலும் பலவீனமடைந்த விஷத்தைக் காந்தம் மீண்டும் கவர்ந்து கொள்கிறது.
1.வெப்பம் உருவாக்கும் சக்தி
2.காந்தம் கவரும் சக்தி (அரவணைக்கும் சக்தி)
3.விஷம் இயக்கும் சக்தி.

இப்படி மூன்று நிலைகளில் அது இயக்க அணுவாக உருவாகிறது.

ரேடியோ டி.வி. எந்தெந்த அலைவரிசைகளில் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றோமோ அதை இந்தக் காந்தம் கவர்ந்து வைத்துக் கொண்டால் அந்தச் சத்தினை வெளிப்படுத்தும் சக்தி விஷத்திற்கு உண்டு.

இதே போல் அந்த இயக்க அணு ஒரு மனிதனின் உணர்வைக் கவர்ந்து கொண்டால்…
1.உதாரணமாக கோபத்தை அந்தக் காந்தம் கவர்ந்து தனக்குள் இணைத்துக் கொண்டால்…
2.மற்ற மனிதர்கள் அதை நுகர்ந்தபின் “கோபத்தை இயக்கும் அணுவாக” ஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அதை நாம் நுகர்ந்து உயிரிலே பட்டால் கோப உணர்ச்சிகளைத் தூண்டி அந்தக் கோபமான உணர்வின் சத்து உடல் முழுவதற்கும் பரவி எண்ணம் சொல் செயல் என்று இயக்குகிறது.

இதுவும் சூரியனிலிருந்து வந்தது தான்.

உயிரின் இயக்கம் ஈசன்… அதனின் துடிப்பில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் இலட்சுமி…!

கோபமான உணர்வை அந்த மனிதன் வெளிப்படுத்தும் போது இந்த இயக்க அணு அந்தக் கார உணர்ச்சிகளை நுகர்ந்து எடுத்துக் கொண்ட பின் அதை நாம் நுகர்ந்தால் உயிரிலே பட்டு அதே கோபத்தை இயக்கும்… அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலை அடைகிறது.

உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் நம் உடலையே இயக்கும் அந்தச் சக்தி பெறுகிறது. ஆகவே நம் உயிரின் இயக்கத்தை நாம் புரிந்து கொள்வதற்குச் “சங்கு சக்கரதாரி…” என்று காட்டுகிறார்கள்.

கோபமான உணர்வுகள் உயிரிலே பட்ட பின்
1.அந்தக் கோபத்திற்குண்டான சப்தங்களும்… அந்த உணர்ச்சிகள் வேகமாக இயக்குவதும்…
2.ஒரு மிளகாயை வாயிலே போட்டால் ஆ… என்று அலறுவது போல
3.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உடலில் இப்படிச் செயலாக்குகிறது.

உயிரின் இயக்கமும் இந்த மூன்று நிலையில் இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

ஆனால் சூரியன் விஷத்தைப் பிரித்துவிட்டு இயக்க அணுவாக மாறி அந்தக் கோபமாக வெளிப்படும் உணர்வின் சத்தைக் கவர்ந்து கொண்டால் பரப்பிரம்மம் என்றும்… அதனுடன் இணைந்து கொண்டால் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும்… இந்த விஷம் அந்தக் கோபமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது புலனறிவு ஐந்தாக மாறுகின்றது.

இதைத் தான் சூரியன்… “ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இந்த உலகையே இயக்கிக் கொண்டுள்ளான்…!” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
1.எல்லா உணர்வுகளையும் இயக்க இந்த விஷமே மூலமாக இருக்கின்றது என்பதனை நாம் அறிந்து கொள்ள ரூப வடிவினைக் காட்டி
2.சூரியனின் இயக்கத்தையும் உயிரின் இயக்கத்தையும் காரணப் பெயரை வைத்து உணர்த்துகின்றனர்.

ஆகவே கோபமான உணர்வை நுகரும் போது அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் எப்படிப் பாய்கிறது…? என்பதனை குருநாதர் உணர்த்துகின்றார்.

அந்தக் கோபமான உணர்வுகள் உயிரிலே பட்ட பின் சங்கு சக்கரதாரி “சப்தமாகி…” அந்த உணர்ச்சிகள் எண்ணம் சொல் செயல் என்று இந்த உடலை இயக்குகிறது என்பதைச் சாஸ்திரங்கள் தெளிவாக்குகிறது.

இந்த உடல் ஒரு அரங்கம். கோபமான உணர்ச்சிகள் உயிரிலே பட்ட பின் அரங்கநாதன்…! கோபமான நாதத்தை உண்டாக்குகிறது. அந்தக் காரமான உணர்ச்சிகள் நம்மை இயக்குகிறது… ஆள்கிறது… “ஆண்டாள்” நம்மை ஆள்கிறது.

அதாவது நாம் எண்ணி எடுத்த அந்தக் கோபமான உணர்ச்சிகள் நம்மை ஆளத் தொடங்குகிறது.

அந்தக் கோபப்படும் மனிதனை உற்றுப் பார்க்கப்படும் போது அந்த இயக்க அணு நமக்குள் வந்து அது இயங்குகிறது. ஆனால் அது ஆள்கிறது.

அதே உணர்ச்சிகள் உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறுகின்றது. உமிழ் நீராக மாறும் போது அந்தக் காரமான உணர்ச்சிகள் நம் சிறு குடல் பெரும் குடலில் இருக்கக்கூடிய அணுக்களுடன் இணைகின்றது.

அப்போது என்ன நடக்கிறது…?

ஒரு மிளகாயை வாயிலே போட்டால் எப்படி நாம் அலறுகின்றோமோ… அதே போல் நாம் சாப்பிடும் ஆகாரத்தை ஜீரணிக்க முடியாதபடி எரிச்சலூட்டும் உணர்வுகளாக அங்கே உருவாகின்றது.
1.வயிற்றிலே எரிச்சல்…
2.இதன் உணர்வு உடல் முழுமைக்கும் படரும் போது மற்ற உறுப்புகளில் எரிச்சல்.

இப்படி நாளடைவில் இயங்கத் தொடங்கினால் இரத்தக் கொதிப்பாக வந்து விடுகின்றது. எதை எடுத்தாலும் எரிச்சலாகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சூரியனிலிருந்து வந்த இயக்க அணு அந்தக் கோபக்காரன் உணர்வை எடுத்துக் கொண்ட பின் அதை நுகரப்படும் போது அந்தக் கோபத்தை நமக்குள் இயக்கினாலும் அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறும்.

உமிழ் நீர் ஆகாரத்துடன் கலந்த பின் ஆகாரம் ஆவியாக மாறி அதனின் இயக்கமாக மாறி இரத்தமாக மாறப்படும் போது அந்த இயக்க அணு ஜீவ அணுவாக மாறுகின்றது.

ஜீவ அணுவாக மாறிய பின்
1.அந்தக் கோபத்தால் உருவான அணுவின் மலம் எங்கெல்லாம் படுகின்றதோ அங்கெல்லாம் எரிச்சல் வருகிறது…
2.குருநாதர் இதை எல்லாம் எம்மை நேரடியாக அறியும்படி செய்தார்.

சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் ஒரு கோபப்படுவோரையோ வெறுப்படைவோரையோ பார்த்து… கோபத்தையும் வெறுப்பையும் நுகர்ந்து விட்டால் நம் உடலில் எப்படித் தீமைகள் விளைகின்றது…? என்பதைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று உணர்த்துகின்றார்.

இதை எல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply