மறு ஜென்மம் என்பது உள்ளதப்பா…! ஒவ்வொரு மனிதனையும்… அவனைப் பார்த்துக் கொள்ள…!

மறு ஜென்மம் என்பது உள்ளதப்பா…! ஒவ்வொரு மனிதனையும்… அவனைப் பார்த்துக் கொள்ள…!

 

ஆவி உலகில் ஊடுருவி (நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்று மண்டலம்) அதன் தன்மையில் பார்த்தால் உலக நிலைமை எல்லாமே தெரிந்துவிடும்.
1.மனித உடலில் உள்ள வரை தான் அமைதியையும் சாந்தத்தையும் சந்தோஷத்தையும் காண முடியும்.
2.ஆவி நிலை எல்லாம் பெரும் அல்லல்படும் நிலை தான்.
3.(ஆவி என்றாலும் ஆன்மா – உயிரான்மா என்றாலும் இங்கே பொருள் ஒன்று தான்)

மனித உடலின் நிலையிலே மூன்றில் ஒரு பாகம் அமைதியான ஆனந்தமான நித்திரையை இந்த இயற்கையே நமக்குக் கொடுத்துள்ளது. ஆவிகளுக்கு எந்த நிலையிலும் இந்த ஆனந்தமான நித்திரை இல்லையப்பா.

மனித உடலில் பெற்ற பேற்றை வழி வழியாக உங்களுக்குச் சொல்கின்றேன். இந்தப் பேறு பெற்றதற்குப் பல கோடித் தவம் வேண்டும்.
1.தவமிருந்து பெற்ற உடலைத்
2.தன்னிச்சையாக அழிக்கின்றார்கள் மானிடர்கள்.

மனித உடலின் தன்மையெல்லாம் பெரும் பேரின்ப நிலையப்பா. மனித உடலில் இருந்து கொண்டே வாழும் வாழ்க்கை அழகுடனும் அர்த்தமுடனும் ஆனந்தத்திலும் களித்திட வேண்டுமப்பா.

மனித உடலை எய்தியவன் எல்லாம் தன் நிலையை உணர்ந்திடாமல் பிறந்தவுடனே ஆத்திரத்துடனும் பேராசையுடனும் பழி வாங்கும் நிலையிலும் கோபதாபத்துடனும் வளர்க்கப்படுகின்றான்.

எப்படியப்பா இருக்கும் வாழ்க்கை நிலை…?

பிறந்தவுடனே நல்லறிவை ஊட்டும் குடும்பத்தில் வளரும் குழந்தை நல்ல நிலைக்கு வந்திடுவான். வளரும் தன்மையிலே தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அமைகின்றது.

Leave a Reply