உங்கள் நினைவாற்றல் குருநாதர் இருக்கும் எல்லைக்குச் செல்வதற்கே உபதேசிக்கின்றோம்

உங்கள் நினைவாற்றல் குருநாதர் இருக்கும் எல்லைக்குச் செல்வதற்கே உபதேசிக்கின்றோம்

 

உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களை மறைத்திருக்கும் சித்திரை என்ற நிலைகளிலிருந்து… அந்தத் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும் என்பதற்குத் தான் அருள் உரைகளை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எல்லாம் கற்றுக் கொடுத்தாலும் அதை நான் (ஞானகுரு) மறைத்து விட்டால் என்ன செய்யும்…? அவ்வாறு இல்லாது
1.இந்த விஞ்ஞான உலகில் வரும் பெரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.
2.உங்கள் பார்வையால் மற்றவர்களின் தீமைகளைப் போக்கும் நிலை பெற வேண்டும்.
3.உயிருடன் ஒன்றிய ஒளியாக அந்த ஞானத்தின் வழியில் நீங்கள் வாழ்ந்திட வேண்டும்.

உதாரணமாக நாம் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தில் ஒரு அச்சுறுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நம் நல்ல குணத்தில் அது இணைந்து விடுகிறது.

அந்தப் பயமுறுத்தும் உணர்வு நமக்குள் விளைந்து விட்டால் நல்ல குணங்களை நம்மால் காக்க முடியவில்லை… காக்க முடியாது போகிறது.

அதாவது…
1.ரோட்டிலே இன்ன மரம் இருந்தது… அந்த இடத்தில் கோர விபத்தானது என்று கேள்விப்பட்டவுடனே “ஆ…” என்று பயமான உணர்வு பதிவாகின்றது.
2.பதிவான பின் அதே நினைவு வருகிறது… அந்த இடமே அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்துவிடும்.

ஆகவே அச்சுறுத்தும் உணர்வை மாற்றிடும் சக்தியாகத் தான் குருநாதர் கொடுத்த அந்த அருள் சக்திகளை… தீமைகளை வென்ற அந்த அருள் உணர்வுகளை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

1.எம்மிடமிருந்து (ஞானகுரு) சொல்லாக அது வெளி வந்தாலும் (உங்களுக்குள் பதிவு)
2.அந்த அருள் ஞானிகள் நுகர்ந்த அந்த எல்லையில் யாம் பெற்ற நிலையில்
3.அங்கே யாம் பெற்றதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
4.உங்கள் நினைவாற்றல் என் குருநாதர் காட்டிய அந்த எல்லைகளுக்கே செல்லும்
5.அங்கே உருவான அந்த மெய் உணர்வை நீங்களும் நுகர முடியும்.

நீங்கள் மீண்டும் மீண்டும் அதை நினைவுபடுத்தி உங்கள் நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும் சித்திரை என்ற நிலைகளை மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வின் அணுவாக மாற்றிட வேண்டும்.

ஏனென்றால் திரும்பத் திரும்பச் சொல்லித் தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வை இணைத்துக் கொண்டு வருகின்றேன்.

உதாரணமாக பள்ளியில் படித்த பின் தேர்வை வைக்கின்றனர். தேர்வின் மூலமாக அவன் தெரிந்து கொண்டானா…? இல்லையா…? என்று பரீட்சித்துப் பார்க்கின்றனர்.
1.படித்தது நினைவுக்கு வந்தால் எழுதிவிடுகின்றான்.
2.படித்ததை நினைவுக்குக் கொண்டு வந்தால் சிந்திக்கும் தன்மையும் வருகின்றது.

படித்ததை வைத்து நினைவு கொண்டு அந்தச் செயலாக்கங்களை எப்படி மாற்ற வேண்டும் என்ற சிந்தனை கொண்டால்… சிந்தித்துச் செயல்படும் ஞானமாக அங்கே வருகின்றது.

அது போன்று தான் குருநாதர் காட்டிய உண்மைகளை எல்லாம் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றேன்.
1.அதை யாரெல்லாம் நினைவுபடுத்தி அதைக் கவரும் நிலைக்கு வருகின்றனரோ
2.அவர்களுக்கு நிச்சயம் குரு பெற்ற அருள் ஞானம் கிடைக்கும்… மெய்ப் பொருள் காணும் திறனும் கிடைக்கும்.

Leave a Reply