நம்மை நாம் காத்து வாழ்வதற்கே இவ்வாத்மீகம் ஒன்றுதான் வழி – ஈஸ்வரபட்டர்

நம்மை நாம் காத்து வாழ்வதற்கே இவ்வாத்மீகம் ஒன்றுதான் வழி – ஈஸ்வரபட்டர்

 

இன்று நாம் வாழும் வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவும் நாம் எடுக்கும் சுவாசமும் விஷம் கலந்ததாக உள்ளது. அதனால் பல புதிய வியாதிகளை நாம் ஏற்க வேண்டிய நிலையும்… அது நம்மைத் தாக்கும் நிலையும் உள்ளது.

இவை தவிர இன்றைய இக்கலியில் வாழ்ந்த நம்மில் வாழ்ந்த உடலில்லா ஆத்மாக்களின் எண்ணத்தில் செயலில் இருந்து நம்முடன் வாழும் மனிதர்களின் எண்ணத்தில் செயலில் இருந்தும் தப்ப வேண்டியுள்ளது.

இவைகளின் தாக்குதலில் இருந்தெல்லாம்…
1.நம்மையும் நம் மனோநிலையையும் நம் உடலையும் காத்திட வேண்டும் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து
2.ஆத்மீக வழியைப் பின்பற்றி வாழும் நிலைக்குப் பக்குவம் பெற்று வந்திடல் வேண்டும்.
3.நம்மை நாம் காத்து வாழ்வதற்கே இவ்வாத்மீகம் ஒன்றுதான் வழி.

ஓங்கி நிற்கும் “தனியான தெய்வம் ஒன்றில்லை…” என்பதனை உணர்ந்து… நாமும் நம்மைப் போல்தான் இவ்வுலகமும் மற்ற அனைத்து உலகங்களுமே என்றுணர்ந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் அதனதன் உடல் தன்மை எந்தெந்த நிலை கொண்டெல்லாம் ஒவ்வொரு நாளும் செயல்படுகின்றதோ அந்நிலை கொண்டே இப்பூமித்தாயும் உயிருடன் உணர்வுடன் வாழ்கின்றாள்.

இப்பூமியில் வளர்ந்து வாழும் நாம் ஜீவன் கொண்டு எப்படி வாழ்கின்றோமோ அப்படியே தான் இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்… வளர்க்கின்றாள்… காக்கின்றாள்… அனைத்து சக்தியையும் வளர விடுகின்றாள்…!

உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கும் எந்நிலை கொண்ட உணர்வுத் தன்மை உள்ளதோ அந்நிலையின் உணர்வுடனே இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்.

இவ்வுலகத் தாயின் உணவாக இவ்வுலகத் தாய்க்குச் சூரியனிலிருந்தும் மற்ற மண்டலங்களிலிருந்தும் கிடைக்கப் பெறும் அமுது தான் பல சக்திகள் கொண்ட இக்காற்றினில் வந்து சேரும் இப்பூமித்தாய் ஈர்க்கும் பல அணுக்களும் நீருமே.

இப்பூமித்தாய் உண்ணும் நீரும் அணுவும்தான் அவள் உண்டு அந்த அமுதை நமக்கும் அளிக்கின்றாள். அவள் பெற்ற செல்வங்களுக்கு இந்நீர் இல்லாவிட்டால் இவ்வுலகுக்கே ஜீவனில்லை.

இவ்வுலகிலுள்ள உலோகங்கள் தங்கம், தாமிரம், வைரம், நிலக்கரி இன்னும் பல நிலை கொண்ட உலோகங்களும் கல்லும் மண்ணும் மரமும் செடியும் எவையுமே
1.இப்பூமியிலிருந்து வளரும் எவையுமே நீர் இல்லாவிட்டால் வளர்ந்திடாது.
2.இப்பூமியும் நீர் இல்லாவிட்டால் வாழ்ந்திட முடியாது
3.நீரையே ஜீவனாகப் பெறும் இவ்வுலகிற்கு உணரும் தன்மை அனைத்தும் உண்டு.

இவ்வுலகில் பல இடங்களில் எரிமலையும் வெளிப்படுகின்றது பனி மலையும் வளர்கிறது பாலைவனங்களும் உள்ளன. “பாலைவனங்களுக்குச் சக்தி இல்லை…” என்று எண்ண வேண்டாம்.

பாலைவனங்கள் தான் மற்ற நிலையில் உள்ள சோலைகளுக்கு உயிர் நாடி. சோலைவனங்களும் மலைகளும் கடலும் சில பள்ளத்தாக்குகளும் இப்படி இவ்வுலகிலேயே ஒன்றுபோல் இல்லாமல் ஒவ்வொர் இடத்திற்கும் ஒவ்வொரு மாறுபட்ட தன்மைகளை இப்பூமித்தாய் தான் ஈர்த்து வெளிக்காட்டிடும் நிலையில் வளரச் செய்கின்றாள்.

பல சக்திகள் இக்காற்றில் சுற்றிக் கொண்டே உள்ளன.

அனைத்து சக்திகளுமே மனிதனுக்கெப்படி துடிப்பு நிலை சுவாச நிலை ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளனவோ அந்நிலை போல்தான் இப்பூமியும் ஈர்த்துத் துடிப்புடனே வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

இவ்வுடலுக்கு நாம் உண்ணும் ஆகாரங்கள் அமிலமாகி அவை ஜீரணித்து நமக்கு வேண்டிய சக்தியைப் பெற்று நமக்கு வேண்டாத நிலையை வெளிப்படுத்துகின்றது.

நாம் எடுத்துக் உண்ட உணவையே இவ்வுடல் ஏற்று உதிரமாகவும் சிறுநீராகவும் மலமாகவும் காற்றாகவும் வியர்வையாகவும் ஆக்குகின்றது. இவற்றில் உதிர சக்தியை மட்டும் உடல் ஏற்று மற்றவைகளை வெளிப்படுத்துகின்றது.

அந்நிலை கொண்டுதான் இப்பூமித்தாய் ஈர்க்கும் நீரையும் அணுவையும் எந்தெந்த நிலைகளில் எச்சக்தி கொண்ட அணுவான அமிலத்தை ஈர்த்தனளோ அவ் ஈர்த்த சக்தியின் நிலை கொண்டே அச்சக்தியின் நிலை பெற்று அந்நிலையில் வளர்ச்சி பெறுகிறது.

அப்படி வளரும் நிலைகேற்ப சக்தியை அளிக்கும் (கொடுக்கும்) நிலையில் இப்பூமியின் உள் நிலையில் பல நிலை கொண்ட அமிலச் சக்திகள் தங்கி ஈர்க்குங்கால் அந்நிலையில் அவை சுற்றிக் கொண்டுள்ள தன்மையில் ஒரு சக்தியுடன் ஒரு சக்தி என்பது ஒரு நிலை கொண்ட அமிலத்துடன் மற்றொரு சக்தி நிலை கொண்ட அமிலம் மோதும் பொழுது (சத்ரு, மித்ரு நிலை) ஒன்றுக்கொன்று ஏற்காத நிலையில் அவை வெடிக்கும் தன்மையில் தான் பூமி அதிர்வு ஏற்படுவதெல்லாம்.

நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முதலிலேயே இன்றைய விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கும் நிலையை உணர்ந்துள்ளார்கள்.

ஆனால் இந்நிலை அதிர்வு பூகம்பம் இவை எல்லாம் எந்நிலையில் ஏற்படுகின்றன…? என்பதனை உணர்த்தி விட்டால் இனி விஞ்ஞானத்திற்கு இன்னும் பல வழிகள் புலப்பட்டிடும்.

1.பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் அனைத்து சக்திகளையும்
2.இக்காற்றிலிருந்து இழுத்துத் தன் சுவாசத்திற்கு ஈர்த்திடும் ஆற்றல்
3.இந்த உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உண்டு.

ஆனால் அவையவை எடுத்த சக்தியின் நிலை கொண்டு குறைந்தும் அதிகரித்தும் மாறுபட்ட தன்மையுண்டு. உலோகங்களில் மாறுபட்ட தன்மை உள்ளது போல் ஜீவராசிகள் ஈர்த்து வெளிபடுத்திடும் சக்தியிலும் மாறுபட்ட சக்தி நிலையுள்ளது.

ஒன்று போல் ஒன்றில் சக்தி நிலை ஒன்றுபட்டு எவற்றுக்குமே இருந்திடாது. கனி வர்க்கங்களிலும் ஒரே மரத்தில் காய்க்கும் கனிக்கும் மாறுபட்ட சுவையும் மாறுபட்ட சக்தியும் மாறுபட்ட அளவு நிலையும் இருந்திடும் சிறிதளவேனும்.

ஒரே செடியில் பூக்கும் புஷ்பங்களின் நிலையும் இவை போன்றே. இவ்வுலக நிலையும் இவை போன்றே.

சுற்றிக் கொண்டே உள்ள உலகில் அவை ஈர்த்து வெளிப்படுத்திய சக்தியில்தான் எத்தனை மாற்றங்கள்…? எத்தனை நிலை கொண்ட தன்மைகள்…?

இவை போல்தான் ஒவ்வொரு மண்டலத்தின் நிலையுமே.

இவ்வான மண்டலத்தின் நிலையும் ஜீவன் கொண்டேதான் சுற்றிக் கொண்டு உள்ளது. பால்வெளி மண்டலம் சூனிய மண்டலம் என்றெல்லாம் செப்புகின்றோம். எவை சூனிய மண்டலம்…?

1.சூனிய மண்டலம் என்ற தனித்த மண்டலம் ஒன்றில்லை.
2.இப்பால்வெளி மண்டலம் என்ற மண்டலத்திற்கே ஜீவன் உண்டு.

Leave a Reply