உலக மாற்றத்தில்… அனைவருக்கும் ஆவதே நமக்கும் நடக்கட்டும்… என்று எண்ணிடலாகாது…! – ஈஸ்வரபட்டர்

உலக மாற்றத்தில்… அனைவருக்கும் ஆவதே நமக்கும் நடக்கட்டும்… என்று எண்ணிடலாகாது…! – ஈஸ்வரபட்டர்

 

பல காலங்கள் வெளியிடாமல் இருந்திட்ட சக்தியின் உண்மை நிலையை இங்கு போதனைக்கு அளித்திட்ட நிலைக்குக் காரணம்
1.இப்பொழுது மாறப் போகும் கலியில்…
2.இன்றுள்ள இக்கலியில் வாழ்ந்திடும் அறிவாற்றல் கொண்ட மனித ஆத்மாக்களின் நிலையை
3.இம்மனிதரின் நிலைக்கு உணர்த்தவே இப்போதனை நிலை.

இன்றைய மனிதரின் வாழ்க்கை முறையும் எண்ணக் கலவையும் இன்று வாழ்ந்திடும் மனிதனால் ஏற்பட்டதல்ல. கல்கியில் தோன்றிட்ட கால நிலை தொட்டே வருவது தான்.

மனிதருடன் எண்ண நிலை சப்த அலையாக எப்படிச் சுற்றிக் கொண்டு உள்ளதோ… அந்த நிலையின் தொடர்ச்சியுடன் ஒவ்வொரு உயிராத்மாக்களின் எண்ணத்துடன் கூடிய சப்த அலைகளும் இப்பூமியில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்… “இப்பூமிக்கே உகந்த சப்த அலை ஒன்று உண்டு…” என்று உணர்த்தினேன்.

ஓங்கார இசையுடன் ஓ…ம்… என்ற பிரணவ நாதத்தில் உருளுகின்ற இவ்வுலகினில் உயிராத்மாக்களின் சப்த அலையின் தொடர்ச்சியில் இவ்வுலகிற்கு எண்ண நிலையும் உண்டு. இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் சப்த அலையுண்டு.

சுவாசம் எடுத்திடும் நிலையிலேயே சப்த அலையுண்டு. ஒலி நிலை இல்லாமல் இவ் உலகமே இல்லை என்று உணர்த்தினேன்.
1.இயற்கையில் அமைத்திட்ட உன்னத ஒலிதனில்
2.இன்றைய செயற்கையும் கலந்து செயல்படும் நிலையில்
3.இப்பூமியே மிகவும் தத்தளித்த நிலையில் உள்ளது.

இப்பூமியில் அறிவாற்றல் கொண்டு வாழ்ந்திடும் மனிதர்கள் தன் சக்தியை உணர்ந்து செயல்படாமல் வாழ்ந்ததின் வினையினால் இவ்வினையின் செயல் இவ்வுலகுக்கு மட்டுமல்ல… “இவ்வுலகைச் சார்ந்த அனைத்து மண்டலங்களுக்கும் மாறு கொள்ளும் நிலை…” மிகவும் குறுகிய கால நிலையில் உள்ளன.

பயந்த நிலையில் எண்ணத்தைச் செயல் கொண்டு பேராசைக்கு அடிமைப்பட்டிடாமல் ஆத்மீக நெறியறிந்து ஒவ்வோர் உயிராத்மாக்களும் செயல்பட வேண்டும்.

1.மனித ஆத்மாக்களிடமிருந்து மட்டுமல்ல
2.நினைவாற்றல் உடைய மற்ற ஜெந்துக்களிலும் வெறியுணர்வு பேராசை நிலை இவற்றிலிருந்து விடுபட்டால்தான்
3.மாறப் போகும் இக்கலியிலாவது நாம் மீட்சி கொண்டிட முடியும்.

அடுத்து வரப்போகும் கல்கியில் இன்று இப்பூமியில் அவதார புருஷர்களாக அவதரித்தவரின் எண்ண நிலை கொண்ட பிறப்பு நிலையின் தொடரினால் “நல் நிலையில் அவதரிக்கலாம்…!”

இவ்வுலக நிலையே மாறப் போகின்றது என்றால்…
1.நம் உடல்களும் அனைத்து ஜீவராசிகளும்தான் இயற்கை எய்தப் போகின்றனவே
2.அடுத்த நிலைக்காக ஏன் நம்மை இப்பொழுது செயல் கொண்டிட வேண்டும்…?
3.நடப்பது நடக்கட்டும்… அனைவருக்கும் ஆனது நமக்கும்…! என்று எண்ணிடலாம்.

இயற்கையின் நியதியும் இயற்கையின் சீற்றமும் இயற்கையின் சக்தியுடனே தான் செயல்படுகின்றன.

இந்த இயற்கையில் தோன்றிய உயிரணுக்களிலிருந்து அந்நிலையின் தொடரினால் சக்தி கொண்ட உயிராத்மாக்களாகி… செயலாற்றும் திறமையுடைய “அதிக சக்தி நிலை கொண்ட இம் மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் மண்டலங்கள் சில தான்…”

இவ்வுன்னத பூமித் தாயின் குழந்தைகளாய் இப்பூமியின் சுவாசமுடன் கலந்துள்ள உயிராத்மாக்களான நாம்… நம் ஆத்மாவும்… நம் எண்ணமும்… நம் சப்த அலைகளும்.. என்றுமே அழிவதில்லை என்பதின் உண்மையினை உணர்ந்து… மாறப் போகும் இக்கலியில் நம் ஆத்மாவை உன்னத பொக்கிஷமாக நாம் உணர்ந்து…
1.பல தீய சக்திகளுக்கு நம்மை அர்ப்பணித்திடாமல்
2.நம்முடன் தொடர்பு கொண்டவரின் நிலைக்கும் நம்மிடமுள்ள தீய சக்தி பாய்ந்திடாமல்
3.நல்லுணர்வுகளையே அவர்களுடனும் கலக்கவிட்டு
4.அவர்களின் நற்சொற்களையே நம் ஆத்மாவிற்கும் சுழலச் செய்து
5.உலக சக்தியையே இவ்வியற்கையின் மாற்றத்தில் வரப்போகும் கல்கியின் சுழற்சியில்
6.நல் நிலையாக்கிடத்தான் இப்போதனை நிலையெல்லாம்.

மனிதர்களின் இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை இன்று அவர்களால் ஏற்படுத்திய நிலை மட்டுமல்ல…! கல்கியிலிருந்து கலி வரை வந்த நிலை. இவ்வுலகுடன் கலந்துள்ள சப்த ஒலிகளில் ஈர்த்து எண்ணமுடன் கலந்திட்ட நிலை. இந்நிலையிலிருந்து மீளும் நிலையைத்தான் நாம் அறிந்திடல் வேண்டும்.

“உயிராத்மாக்களின் பொக்கிஷ சக்தி நிலையை… ஆத்மீக நெறிதனில் அழைத்திடவே…” இப்போதனை நிலையெல்லாம் ஈஸ்வரபட்டனாகிய யான் கொடுக்கின்றேன்.

Leave a Reply