மகரிஷிகளின் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வுகள்

மகரிஷிகளின் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வுகள்

 

இப்போது ஒரு வேதனைப்படுவோரின் உணர்வை நாம் நுகர்ந்தால் உற்றுப் பார்த்த உணர்வுகள் நமக்குள் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி நமது உடலையும் வலு இழக்கச் செய்கின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வே நம்மை இயக்குகின்றது. அதன் வழி அன்றைய வாழ்க்கையும் அமைகின்றது.

ஒரு குடம் பாலில் நீங்கள் பாதாமைப் போட்டாலும் அதைக் காட்டிலும் பல உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும் ஒரு துளி விஷம் பட்டால் பால் அனைத்தும் நஞ்சாகி விடுகின்றது.

அதில் ஆயிரம் குடம் பாலை விட்டால் நஞ்சின் தன்மை சிறுத்துப் பாலின் தன்மை வீரியத்தன்மை அடைகின்றது.

ஒரு சமயம் 100 தரம் நாம் நல்லதைச் செய்தாலும் ஒரு நொடி அந்த வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை தான் நம்மை இயக்குகின்றது.

100 மணி நேரம் நாம் நல்லதை நுகர்ந்தாலும் அந்த 100 மணி நேரமும் நல்லவைகளை உருவாக்குகின்றது நமது உயிர். ஆனால் ஒரு நொடி வேதனை என்ற உணர்வை நுகரப்படும்போது அது நம் நல்ல குணங்கள் அனைத்தையும் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இது இயற்கையின் நியதிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பண்புடன் அன்புடன் பரிவுடன் நாம் நடந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் நுகர நேரும் அந்தத் தீமையான உணர்வுகளை அகற்றியே ஆக வேண்டும்.

அன்றாடம் உடலையும் உடைமைகளையும் நாம் எப்படித்தான் தூய்மைபடுத்தினாலும் அழுக்குப்படியத்தான் செய்யும். அதைத் தூய்மையாக்கவில்லை என்றால் அழுக்குகள் கூடிவிடும்.

அதைப் போன்று நம் மனதையும் அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வினை நுகர்தல் வேண்டும்.

Leave a Reply