குருநாதர் எனக்கு அனுபவ வாயிலாகக் கொடுத்த அருளாற்றலை அப்படியே உங்களுக்கும் கிடைக்கச் செய்கிறேன்

குருநாதர் எனக்கு அனுபவ வாயிலாகக் கொடுத்த அருளாற்றலை அப்படியே உங்களுக்கும் கிடைக்கச் செய்கிறேன்

 

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
1.ஒவ்வொரு அணுவின் ஆற்றலின் நிலையையும்… நஞ்சின் இயக்க நிலையையும்
2.நஞ்சுடன் இணைந்த உணர்வின் அலையையும் அவர் தெளிவுறக் கண்டுணர்ந்து
3.இயற்கை எப்படி விளைந்தது என்ற நிலையையும் அறிந்தார்.

அதை எல்லாம் யாமும் (ஞானகுரு) அறிவதற்காக வேண்டிச் சுமார் 15 வருடம் காட்டுக்குள் செல்லச் செய்து அனுபவங்களைப் பெறச் செய்தார்.

பல பல தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து அந்த மணங்களை உயிரினங்கள் சுவாசிக்கும் பொழுது
1.அந்த மணம் உயிரினத்திற்குள் எண்ணமாக எப்படி வருகிறது…?
2.அந்த எண்ணத்தின் துணை கொண்டு தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கின்றது…?
3.ஒரு மரமாக இருப்பது தன் மணத்தைக் கொண்டு மற்ற நிலைகள் தன் அருகிலே வராதபடி தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்கிறது…?
4.அதே சமயம் தன் உணர்வால் அதனின் இனத்தின் சத்தை எப்படி எடுத்துக் கொள்கிறது…? என்ற நிலையையும் காட்டினார்.

அதே போல் செடிகளை எடுத்துக் கொண்டாலும் அந்த செடியில் வரும் மணத்தை உயிரினங்கள் நுகர்ந்தால்… அந்த உணர்வின் சத்து உடலாகி…
1.அதற்குள் இருக்கும் இந்த விஷமும்
2.அதனின் மணமும்
3.அதனின் உணர்வும்
4.எண்ணமாக எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையையும் அதை எல்லாம் நேரடியாகக் கண்டுணரும்படிச் செய்தார்

அவ்வாறு 15 வருடம் காட்டிற்குள் பெற்ற அந்த அனுபவத்தின் பயன் கொண்டு தான் மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார்.

அவ்வாறு சந்திக்கப்படும் பொழுது ஒவ்வொரு மனிதரும் எந்தக் குணத்தை முன்னணியில் வைத்து வளர்த்துள்ளார்களோ அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் பிறிதொரு ஆத்மா அவர்களுக்குள் எப்படி இயங்குகின்றது…? என்றும் காட்டினார்.

அந்த ஆன்மாக்கள்
1.அவர்கள் எண்ணங்களுக்கு ஒத்ததாக இயங்குவதும்
2.எண்ணங்களுக்கு மாறாக இயங்குவதும்
3.ஆசையால் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல் அவர்களுக்குள் வளர்ந்து கொண்ட பின்
4.அதனின் உணர்வுகள் இவர்கள் உடலிலே எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையை அதைத் தெளிவாகத் தெரியும்படிச் செய்தார்.

அதை எல்லாம் அறிந்து கொண்ட பின்… அடுத்த கணம்
1.அதை நீக்கிடும் உணர்வின் ஆற்றலை… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீ எப்படிப் பருக வேண்டும்…?
2.அதை உனக்குள் எப்படி வளர்க்க வேண்டும்…?
3.அந்த உணர்வின் எண்ணத்தை மற்றவர்களுக்கு ஒரு நல்ல சக்தி வாய்ந்த வித்தாக எப்படிப் பதிவு செய்ய வேண்டும்..?
4.அத்தகைய ஞான வித்தைப் பதிவு செய்து கொண்ட நிலையில்
5.அந்த அருள் ஞானிகளின் உணர்வினை அவர்கள் எண்ணி அதை நுகர்ந்து
6.அதன் மூலம் வாழ்க்கையில் தனக்குள் அறியாது வந்த தீய வினைகளை எப்படி அவர்களே நீக்கிக் கொள்வது…? என்ற நிலையையும்
7.குருநாதர் எனக்குத் தெளிவாகப் போதித்தார்.
8.அவர் எனக்குப் போதித்த அருள் வழிப்படித் தான் உங்களுக்கும் வழிகாட்டுகின்றேன்.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கினால் அந்த அருள் சக்தி உங்களைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்கு உறுதுணையாக வரும்.

Leave a Reply