உடலுக்குள் பல மாற்றங்களை உண்டாக்கி வலியோ வேதனையோ நோயோ எப்படி உருவாகிறது…? என்பதை நேரடியாகக் காட்டினார் குருநாதர்

உடலுக்குள் பல மாற்றங்களை உண்டாக்கி வலியோ வேதனையோ நோயோ எப்படி உருவாகிறது…? என்பதை நேரடியாகக் காட்டினார் குருநாதர்

 

ஈஸ்வரபட்டாய குருதேவர் எம்மை (ஞானகுரு) பதினான்கு வருடம் பல காடு மேடெல்லாம் அலையச் செய்தார். என்னை அறியாது எனக்குப் பல துன்பங்களை அங்கே ஊட்டினார்.

அந்தத் துன்பத்தை நான் நுகர்ந்து பார்க்கும் போது அது எல்லாம் எனக்குள் வந்து விடுகின்றது. அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று அனுபவபூர்வமாக நான் தெரிந்து கொள்வதற்காகவே அதை எல்லாம் கொடுத்தார்.

அதற்காக வேண்டி மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படியும் செய்தார். அதை நான் வேடிக்கை பார்க்கும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
1.ஒருவருக்கொருவர் சண்டை போடுவது… ஒருவருக்கொருவர் தகாத நிலையில் பேசுவது…
2.இது போன்ற எத்தனையோ உணர்வின் தன்மைகளை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது
3.சுவாசித்தது உயிருடன் மோதும் பொழுது ஏற்கனவே நான் எடுத்துக் கொண்ட நல்ல குணங்களுக்குள் இது கலந்து
4.அந்த விஷத்தின் தன்மை எனக்குள் இருக்கும் நல்ல குணத்தைச் செயலாக்க விடாதபடி
5.என் எண்ணங்கள் எப்படி எல்லாம் மாறுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும்
6.என்னை அறியாமலே உடலுக்குள் பல கவலையும் பல சஞ்சலமும் ஏற்படச் செய்து
7.எவ்வளவு திடசாலியாக இருந்தாலும் பலவீனப்படுத்துவதையும் குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வைக் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் இங்கே பதிவாகி விடுகின்றது.

அந்த அலைகள் உடலுக்குள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் இரவில் படுத்திருக்கும் போது அந்த உணர்வுகள் தன்னை அறியாமலேயே சுவாசிக்கச் செய்து “பயப்படச் செய்வதையும்… தூங்கவிடாமல் எப்படிச் செய்கிறது…? என்பதையும்” நேரடியாக அனுபவபூர்வமாக குருநாதர் காணும்படி செய்தார்.

அங்கே பார்த்த உணர்வுகள் உடலுக்குள் அது எதுவாக இணைகின்றது…? அது மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக உணர்ச்சிகளை ஊட்டி உடலில் அணுக்களாக வளரச் செய்து நோய்களாக எப்படி உருவாகிறது…?

காரணம்…
1.ஒவ்வொரு நாளும் எந்தெந்தக் குணங்களை எடுக்கின்றோமோ…
2.அந்தக் குணங்களுக்குத் தக்கவாறு… ஒவ்வொரு உணர்வுக்குத் தக்கவாறு தான் உடலும் உடல் உறுப்புகளும் அமைந்தது.
3.ஈரல் கல்லீரல் மண்ணீரல் கிட்னி சிறுகுடல் பெருங்குடல் இருதய வால்வுகள் சிறு மூளை பெரு மூளை என்று
4.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு எதனெதனை அது சேர்த்ததோ
5.அந்த மிருதுத் தன்மைக்குத் தக்கவாறு தான் அதனுடைய செயல்களும் இருக்கின்றது.

அந்த உறுப்புகளின் இயக்கங்களையும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலிகளுக்கொப்ப அது எப்படி இயங்குகிறது..? என்ற நிலையையும் உடலுக்குள்ளேயே வைத்துக் காட்டினார் குருநாதர்.

மருத்துவம் படிப்பவர்கள் படிப்பு (PRACTICAL) மூலமாகத் தெரிந்து கொள்வதற்காக பிறருடைய உடல்களை எப்படி எடுத்துப் பரீட்சித்துப் பார்ப்பார்களோ அதே போல
1.எத்தகைய உணர்வை நீ சுவாசிக்கின்றாய்…?
2.எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும் உடல் உறுப்புகளை எப்படித் தாக்குகின்றது…?
3.அந்த உணர்வின் வேகத் துடிப்பு இரத்தத்துடன் கலந்து சுழன்று வரப்படும் போது
4.ஒவ்வொரு உறுப்புகளிலும் இது எதிர்மாறாகும் போது அது எப்படி எரிச்சலாகின்றது…
5.அது எந்தெந்த வேதனையாக உருவாக்குகின்றது…? என்று காட்டினார்.

உடலிலே சர்க்கரைச் சத்து அதிகமாகி விட்டால் எந்த அளவிற்குச் சர்க்கரை அதிகமாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி சிறு நீரின் கலர் மாறுகின்றது… பார்க்கலாம்…!

அதைப் போல் பிறருடைய செயல்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும்… இந்த உணர்வுகள் அது சுவாசித்து உடலுக்குள் செல்லும் போது இரத்தமாக மாறி… உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளுக்குள் ஊடுருவி… இதற்கும் அதற்கும் எதிர்மறையாகும் போது
1.அந்த உறுப்புகள் எப்படிப் பின்னமாகின்றது…?
2.உனக்குள் வலி எப்படி வருகிறது…? என்ற நிலையையும்
3.என்னையே முன்னிறுத்தி என் உடலின் இயக்கங்களைப் பார்க்கச் சொல்கிறார்.

எக்ஸ்ரே படங்களிலும் மற்ற ஸ்கேன் படங்களிலும் பார்ப்பது போல் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அது எவ்வாறெல்லாம் உன் உடலில் விளைகிறது…? என்பதை குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் இதைக் காட்டினார்.

பின் அதை எல்லாம் மாற்றும் உபாயமாக மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டிய முறைகளையும் கொடுக்கின்றார். அதை எல்லாம் கண்டுணர்ந்த பின் தான் உங்களுக்குள் இதை உபதேசிக்கின்றேன்.

1.நீங்கள் சாதாரண நிலையில் இருந்தாலும்
2.சிறு குழந்தையாக இருந்தாலும் அல்லது படிக்காதவர்களாக இருந்தாலும்
3.யாம் உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவு செய்யப்படும் போது
4.குருநாதர் காட்டிய அருள் ஞானிகளின் சக்திகளை நீங்களும் பெற முடியும்.

அந்த மெய் ஞானிகள் தீமையை நீக்கும் ஆற்றல்களைப் பெற்று எவ்வாறு விண்ணுலகம் சென்றார்களோ அந்த உணர்வின் சத்தை உங்களுக்குள் நினைவு கூர்ந்து இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது உற்றுக் கவனித்தால் அது உங்களுக்குள் பதிவாகிவிடுகின்றது.

அந்தப் பதிவை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அவர்கள் பெற்ற சக்தியை நீங்களும் பெற முடியும்… விண் செல்லவும் முடியும்…!

Leave a Reply