தவறாக யாராவது திட்டினால் பதிலுக்கு நாமும் திட்டிப் பேசுகிறோம்… ஆனால் உண்மையை நாம் உணர்த்த முடிகின்றதா…?

தவறாக யாராவது திட்டினால் பதிலுக்கு நாமும் திட்டிப் பேசுகிறோம்… ஆனால் உண்மையை நாம் உணர்த்த முடிகின்றதா…?

 

யாராவது கடுமையாக உங்களிடம் பேசிக் கொண்டே இருந்தால் வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம்.

“உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். திட்டிக் கொண்டே இருந்தால் ஆமாம்… ஆமாம்… என்று சொல்லுங்கள்.

ஒரு சிலர் ரொம்பவும் வசனம் பேசிக் கொண்டே இருப்பார்கள்… மோசமான பேச்சுகளையும்… வாயிலே வராத வார்த்தைகளை எல்லாமும் பேசுவார்கள். அவர்கள் சொல்லச் சொல்ல…
ஆமாம்…
ஆமாம்…
சரி…
ஆமாம்..
சரி…! என்றே சொல்லுங்கள்.

உனக்கு மூக்கு இருக்கிறதா… கண் இருக்கிறதா..? மூளை இருக்கிறதா…! என்று என்னென்னமோ பேசுவார்கள்.

அது அத்தனையும் நீயே வைத்துக் கொள்… கண் மூக்கு எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்… “போ……!” என்று சொல்லிவிடுங்கள்.

மயக்கப்பட்டு அப்படியே சொத்… என்று கீழே விழுவார்கள்.

1.நீங்கள் அவர்களைத் திட்டவே வேண்டாம்.
2.எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
3.எனக்கு வேண்டாம்… நீங்களே அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுங்கள்.

அவர்கள் பேசுவதைக் கேட்டு நீங்கள் வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்கள் உடலில் உள்ள ஆவி இந்த மாதிரி வேலை செய்யும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் “ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருந்து விட்டு…” எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…! என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவி அப்படியே மயக்கப்பட்டுக் கீழே விழுவதைப் பார்க்கலாம்.

இந்த வாக்கினைச் சொன்னவுடனே அது செயலிழக்கும். இப்படிச் சொல்லும் போது
1.அதற்கு நாம் ஒரு நன்மையைச் செய்கிறோம் என்று அர்த்தம்.
2.நாம் தீமை செய்யவில்லை… (சாபம் இடவில்லை)

நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் அங்கே பட்டவுடன் அவர்கள் உடலில் அறியாமல் இருக்கக்கூடிய அந்த ஆவி சோர்வடைந்து கீழே விழுந்து எழுந்தால் அவர்கள் “சுய நினைவு” வரும். அப்பொழுது அவர்களை நாம் காக்கிறோம் என்று அர்த்தம்.

உங்களுக்கு இதை வாக்குடன் நான் (ஞானகுரு) சொல்லிக் கொடுக்கின்றேன்.

ஆனால் வழக்கமான நிலைகளில் “இப்படித் திட்டுகிறாரே… தாங்க முடியவில்லை… பொறுக்க முடியவில்லை…!” என்றால் அவர்கள் எண்ணத்தைத் தான் உங்களுக்குள் இழுத்துப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஏனென்றால் விஷம் எதிலே வேண்டுமென்றாலும் ஊடுருவிச் செல்லும். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே அதிகமாகத் திட்டுகிறார்கள் என்றால் “நீயே அதை வைத்துக் கொள்…” என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவிக்கு இது பலவீனமாகும்… மயக்கமாகும்.

ஆனால் இவர்களுடைய நல்ல சிந்தனை நினைவுக்கு வரும். அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்களையும் காக்கின்றோம்.

ஆனால் இந்த வாக்கின் தன்மை அங்கே இயக்கி அவர்கள் உடலில் வயிற்றால் போகும்… உண்மையை உணர்த்தும்.

இது நடந்த நிகழ்ச்சி. என்னுடைய (ஞானகுரு) பெரிய பிள்ளையை மைசூரிலே கட்டிக் கொடுத்திருந்தது. மாப்பிள்ளையின் தம்பியை வேறொரு இடத்தில் கல்யாணம் செய்திருந்தார்கள்.

அந்தக் குடும்பம் கொஞ்சம் போக்கிரித்தனமாக ரௌடித்தனம் செய்யக் கூடியவர்கள். யார்… என்ன… ஏது…? என்று ஒரு முறை இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள்.

என் பிள்ளையை ரொம்பவௌம் விரட்டிக் கொண்டே இருந்தார்கள். வாயிலே வராத வார்த்தையைப் பேசித் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

மாமனாரை ஏமாற்றிச் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டாய்…! என்று எது ஏதோ சொல்லிப் பேசினார்கள். ஆனால் இவர்களோ கஷ்டப்பட்டுச் சம்பாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதை எல்லாம் கேட்டுத் தாங்காதபடி என் பிள்ளை என்னிடம் “ஓ…” என்று அழுது கொண்டு வந்து இந்த விஷயங்களை எல்லாம் சொன்னது.

பின் நான் மேலே சொன்னபடி சொல்லி “இந்த மாதிரிச் சொல்லம்மா…” என்று அனுப்பினேன்.
1.திட்டுவதை எல்லாம் உம்… கொடுத்துக் கேள்… சந்தோஷமாகக் கேள்…
2.கடைசியில் இப்பொழுது சொன்னதை எல்லாம் நீயே வைத்துக் கொள் என்று சொல்லிவிடம்மா…! என்று சொன்னேன்.

அதே மாதிரி இங்கிருந்து போனவுடனே நீ நாசமாகப் போவாய்… உனக்குப் பேதியாகும்… நீ அப்படிப் போவாய்… இப்படிப் போவாய்… என்று அங்கே அந்த அம்மா திட்டிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள்.

என் பிள்ளை அவர்கள் திட்டத் திட்ட சிரித்துக் கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…! என்று சொல்லிவிட்டதும் அங்கே தாங்காது பேதியாகி விட்டது. உடல் எல்லாம் வலி ஆகியது. எழுந்திரிக்க முடியவில்லை.

ஆஸ்பத்திரிக்குச் சென்று எல்லாம் ஆனதும்… “கொஞ்சம் விபூதி இருந்தால் கொடு…” என்று அந்த அம்மா என் பிள்ளையிடம் கேட்கிறது.
1.நான் சொன்னதை நானே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னதும் எனக்கு இப்படி ஆகிவிட்டது
2.இனிமேல் நான் யாரையும் இந்த மாதிரித் திட்ட மாட்டேன்… தப்பாகப் பேச மாட்டேன்…! என்று சொன்னது.

பிறகு என்னிடமும் தேடி வந்தார்கள். உங்கள் பிள்ளையை எல்லாப் பேச்சும் பேசினேன். நான் எதை எல்லாம் சொல்லி அவர்களைத் திட்டினேனோ அது எனக்கே வந்து விட்டது. நீங்கள் விபூதி கொடுங்கள்… எனக்கு ஆசீர்வாதம் கொடுங்கள்…! என்று கேட்டார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த மாதிரி நல்ல வாக்கினைக் கொடுத்தால்… அங்கே நன்மை ஏற்படும். அவர்களும் உண்மையை அறியும் தன்மை வரும்.

பேசியதை அனைத்தையும் நீயே வைத்துக் கொள் என்று சொன்னவுடனே
1.அந்த உணர்வுகள் எல்லாம் அவர்களுக்குள்ளேயே சுழன்று
2.தானே அதை அறியப்படும் போது குற்றத்தை உணர்ந்து கொள்வார்கள்.

இதன்படி நடந்தால் யாம் கொடுக்கும் இந்த உயர்ந்த வாக்கின் வன்மை உங்களுக்குள் கூடுகிறது. அதே சமயத்தில் மற்றவர்களும் அறியாமையிலிருந்து விடுபட இது உதவுகிறது.

Leave a Reply