மகா ஞானிகளின் அருகாமையை உங்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம் – ஞானகுரு

மகா ஞானிகளின் அருகாமையை உங்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம் – ஞானகுரு

 

சந்தர்ப்பவசத்தால் உடலில் சேர்த்துக் கொண்ட தீய உணர்வின் தன்மைகளால் மனிதனுக்குச் சில கடுமையான நோய்கள் வருகின்றது.

சாமியார்களோ அல்லது மந்திரவாதிகளோ மந்திரத்தால் மந்திரத்து சில வேலைகளைச் செய்து அந்த நோயினால் ஏற்பட்ட வலிகளை வேண்டும் என்றால் போக்கலாம். ஆனால் உடலில் விளைந்த நோய்களை மாற்ற முடியாது.

அதே போல் தான் டாக்டர்களால் மருந்து கொடுத்து வேதனைகளை நீக்கினாலும் உடலில் விளைந்த தீய விளைவுகளிலிருந்து மீள முடியாது. காரணம் மீள வேண்டும் என்று சொன்னாலும் உடலுடன்… உணர்வுடன்… அது கலந்திருக்கும்.

நோயிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால்
1.நம் நினைவின் எண்ண அலைகளை விண்னை நோக்கிச் செலுத்தி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர வேண்டும்.

ஒரு பன்றி சாக்கடைக்குள் அது நாற்றமாக இருந்தாலும் அதைப் பிளந்துவிட்டு அதில் உள்ள நல்ல பருப்பினை (உணவுப் பொருளை) எப்படி எடுக்கின்றதோ அதைப் போல்
1.சாக்கடையாக இருக்கும் இன்றைய காற்று மண்டலத்திலிருந்து
2.அதற்குள் இருக்கும் அருள் ஞானிகளின் அருள் ஆற்றல் மிக்க சக்தியை நாம் எண்ணி எடுக்க வேண்டும்.
3.அதை எடுத்து நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஆகவே…
1.தீயதை நீக்கி நல்ல உணர்வை நமக்குள் ஆழமாகப் பதியச் செய்வதும்
2.நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் கூர்மையாக விண்ணை நோக்கிச் செல்வதும்
3.நம் வாழ்க்கையில் ஏற்படும் சில துன்பங்களை நீக்க இதைப் போல் செயல்படுத்துவதே “ஆத்ம சுத்தியும் தியானமும்…”

நீங்கள் எண்ணும் போது அந்த ஞானிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசமும் கூட்டுத் தியானமும். கூட்டுத் தியானத்தில் மகரிஷிகள் உணர்த்திய இந்த ஆற்றல் மிக்க நினைவலைகளை உங்கள் உடலில் ஆழமாகப் பதியச் செய்கிறோம் (ஞானகுரு).

பதியச் செய்ததை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கும் போது இந்தக் காற்றிலிருக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

உங்கள் வீட்டில் இருக்கும் டி.வி.யில் சாதாரண ஆண்டென்னா மூலம் பக்கத்தில் (LOCAL) ஒளி பரப்பாவதை எடுக்க முடியும்.

அதே சமயத்தில் சேடிலைட்டில் அனுப்பக்கூடியதை… அமெரிக்காவில் ஒளி பரப்பு செய்கிறார்கள் என்றால் அதை எடுக்கச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா தேவைப்படுகிறது. அதைக் கொண்டு தான் அங்கிருந்து ஒளிபரப்பு செய்வதை இங்கே தெளிவாகக் காண முடிகின்றது.

அதைப் போன்று தான் அருள் ஞானிகளின் உணர்வலைகளை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியை உங்கள் எண்ணத்தால் எண்ணி ஏங்க வைக்கின்றோம்.

இதைக் கேட்டுணரும் போது
1.இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள எலும்புகளுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
2.அப்படிப் பதிவான நிலைகள் கொண்டு கூட்டாகத் தியானிக்கும் போது அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

சாதாரணமாக ஒரு நூலினை வைத்து ஒரு பொருளைக் கட்டித் தூக்கினால் நூல் அறுந்துவிடும். பல நூல்களை ஒன்றாகத் திரித்தால் தான் அந்தப் பொருளைத் தூக்க முடியும்.

அது போல் தான் தனிப்பட்ட மனிதன் ஒருவர் அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுக்க வேண்டும் என்றால் சாதாரணமாக அது முடியாது.

1.காரணம்… அவர்கள் பிறவா நிலை பெற்று விண்ணுலகம் சென்றவர்கள்
2.பிறப்பின் மேல் ஆசை வைத்த நாம் அந்த உணர்வை அணுகினால் அது நம்மை அறுத்துவிடும்… கிட்டத்திலே நெருங்கவிடாது.

இருப்பினும் அந்த அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண உணர்வின் வேட்கையில் உங்கள் அனைவருக்குள்ளும் ஆழமாக அதைப் பதிவு செய்கின்றோம்.

இங்கே கூட்டுத் தியானத்தில் அதை உபதேசிக்கும் போது
1.அந்த அருள் ஞானிகளின் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்கு
2.உங்கள் கவனங்கள் அனைத்தையும் ஒருக்கச் சேர்த்து ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றோம்.
3.எல்லோரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் போது வலுவாகிறது
4,அந்த வலு கொண்டு காற்றிலே மறைந்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் சக்தியை
5.நாம் அமர்ந்திருக்கும் (தியானிக்கும்) இடங்களுக்கு அழைத்து வருகின்றோம்.

ஆக பரவலாக அது வரும் நிலைகள் கொண்டு இங்கே குவியப்படும் போது… உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று உங்களை எண்ணி நான் தியானிக்கின்றேன்.

அது சமயம் குரு துணை கொண்டு உங்களால் அந்த மகா ஞானிகளின் பேராற்றல்மிக்க சக்திகளை உங்களால் பெற முடிகிறது. உங்கள் உடலில் அது சக்திவாய்ந்ததாக மாறுகிறது.

துன்பமோ துயரமோ நோயோ எதுவாக இருந்தாலும் அது வலு இழக்கிறது. உங்கள் ஆன்மாவும் மனமும் தூய்மை ஆகிறது. உயிரான்மா ஒளியாக மாறுகிறது.

Leave a Reply