தீமை நமக்குள் எப்போதும் உருவாகாதபடி “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு நாம் வளர வேண்டும்

தீமை நமக்குள் எப்போதும் உருவாகாதபடி “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு நாம் வளர வேண்டும்

 

உதாரணமாக காரமான ஒரு பொருளைத் தனித்து உணவாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சியே முன்னணியில் நிற்கும்.

ஆனால் அந்தக் காரத்தை அடக்க “சப்…” என்று இருக்கும் காரம் இல்லாத பொருள்களை அதனுடன் இணைத்து உட்கொண்டால் அந்தக் காரத்தின் தன்மை குறைந்து சுவைமிக்க நிலைகளாக உருவாகின்றது

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது
1.உயிர் இருக்கும் ஈஸ்வரலோகத்தில் அது உருவாக்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் தான் முன்னணியில் இயக்கும்.
3.மற்ற நல்ல குணங்களின் வலு குறைகிறது.

காரணம் மற்றவர்களுடைய குறைகளையும் துன்பங்களையும் கேட்டறிந்து நுகர்ந்து தான் உதவி செய்கிறோம். நுகரும் போது தான் உயிரும் அதை இயக்குகிறது.

இருந்தாலும் அதைக் கேட்டறிந்த நிமிடத்திலேயே…
1.அவர்கள் கஷ்டங்களைச் சொல்வதற்கு முன் “ஈஸ்வரா…!” என்று நம் உயிரான ஈசனிடமே கேட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
3.அந்த உணர்வை அப்பொழுதே உயிரிலே இணைக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

குழம்பு வைக்கும் போது பல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போல் நாம் கேட்டு… நுகர்ந்த மற்றவரின் உணர்வுக்குள் அந்த அருள் ஞானிகளின் உணர்வைக் கூட்டிவிட்டால் அதைத் தணித்து அருள் உணர்வின் அணுக்களாக மாற்ற முடியும்.

நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும்… சந்தர்ப்பத்தில் ஒருவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை நமக்குள் அதிகரிக்கப்படும் போது நல்ல குணத்தின் தன்மைகள் குறைந்து விடுகிறது.

1.அப்பொழுது அந்த நல்ல குணத்தின் தன்மையை அதிகமாக்க…
2.அதை வலிமை பெறச் செய்ய வேண்டும் என்றால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அதனின் உணர்வின் கருக்களாக மாறுகிறது. வேதனையை வலுவிழக்கச் செய்கிறது.

“பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலையில் நம்முடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவர்ந்து அந்த உணர்வை நுகர்தல் வேண்டும்…
2.இரத்தத்தில் கலக்கச் செய்தல் வேண்டும்…
3.உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் அதை இணைத்தல் வேண்டும்.

இப்படி… தீமையான உணர்வுகளைக் குறைத்து தீமைகளை அகற்றிட்ட வலிமையான மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அந்தக் கருத்தன்மை உருவாக்கப்பட்டு… நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கப்பட்டு… அது இந்திரலோகத்தில் தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக அதை மாற்றுகின்றது.

அத்தகைய நிலைகளை நாம் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை வலுப் பெறப்படும் போது வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி விடுகிறது.

உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கிறது…!
1.உடல் பெறும் விஷத் தன்மைகளை அங்கே கரைத்து விடுகின்றது.
2.ஒளியின் சரீரமாக… நம்மை ஒளியாக மாற்றுகின்றது.

Leave a Reply