எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்களிடம் யாம் எதிர்பார்ப்பது என்ன…? – ஞானகுரு

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்களிடம் யாம் எதிர்பார்ப்பது என்ன…? – ஞானகுரு

 

நீங்கள் எத்தனையோ கோவில்களுக்குப் போகின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) சதா உங்களைத் தான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன்.

1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி
2.உங்கள் உடலை எல்லாம் கோவில்களாக எண்ணி
3.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்களை எல்லாம் தெய்வமாக எண்ணி
4.அந்தக் கோவிலில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.
5.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று தியானிக்கின்றேன்.

நான் பார்த்த கோவில்கள் அத்தனையுமே (எம்மைச் சந்தித்தவர்கள்) ஒவ்வொருவரையும் தியானம் செய்து அதிகாலை 4-30 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.

அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும். இந்த உபதேசத்தைப் பதிவு செய்தோர் அனைவருக்கும் அந்த நேரத்தில் முழிப்பு வரும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தவறு செய்யாமலே நமக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த நிலைகளை மாற்றி நல்லது செய்யும் அந்த ஆற்றலாகப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

அதனாலே எல்லோரும் முழு நம்பிக்கையாக உங்களை நீங்கள் நம்புங்கள்.

சாமியை நம்புகிறீர்கள் சாமியாரை நம்புகிறீர்கள் ஜோதிடத்தை நம்புகிறீர்கள் மந்திரத்தை நம்புகிறீர்கள்.
1.ஆனால் உங்களிடம் அந்த உயர்ந்த சக்தி இருக்கிறது
2.உங்களுக்கு முன்னாடியே அத்தனை சக்தியும் இருக்கிறது.
3.அதை நினைத்தீர்கள் என்றால் அது கூடும்.
4.நல்லதைப் பெற முடியும் மெய் ஒளி பெற முடியும்.

மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை. உங்களை நீங்கள் நம்புங்கள்.

1.சாமி சொன்னார் என்று சொல்லி
2.சாமி சொன்ன சக்தியை நாம் பெற வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

சாமி செய்து கொடுப்பார் என்பதல்ல. உங்களை நான் பிரார்த்திக்கின்றேன். உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று உறுதுணையாக இருக்கின்றேன்.

சூரியனின் காந்த அலைகள் படுகிறது. பூமி அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் தான் பூமிக்குச் சக்தி கிடைக்கும். பிரபஞ்சத்தில் காற்றில் பல சக்திகள் படர்கிறது. பூமி போகும் பாதையில்… தான் ஈர்த்துக் கொண்டால் தான் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

அதைப் போன்று தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திகின்றேன்.
2.அந்த அருள் ஒளியை நீங்கள் ஈர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆகையினால் இங்கே சொல்லக்கூடியதெல்லாம் உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று தகுதியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றேன்.

இதைக் கேட்டுணர்ந்த ஒவ்வொருவரும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தேன்… நான் நன்றாக இருக்கின்றேன்
2.எங்கள் குடும்பம் நலமாக இருக்கின்றது எங்கள் உடல் நலமாக இருக்கிறது
3.காற்றிலிருந்து அருள் சக்திகளை எடுக்க முடிகிறது
4.எங்கள் உடலில் உள்ள நோய்கள் அகன்றது என்ற
5.இத்தகைய சந்தோஷமான செய்திகளைச் சொல்ல வேண்டும்

ஆகவே “நாங்கள் நன்றாக இருக்கின்றோம்…!” என்று சொல்லும் போது தான் எனக்கு அது மகிழ்ச்சி. அதைக் கேட்க வேண்டும் என்று தான் நான் விரும்புகின்றேன். அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.

Leave a Reply