உலக மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் – ஈஸ்வரபட்டர்

உலக மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் – ஈஸ்வரபட்டர்

 

உலகிலுள்ள உண்மை இயற்கைத் தன்மைகளை மெய் ஞானம் கொண்டு விளக்குகிறோம்…! இதனை விஞ்ஞானத்தவர்களும் எடுத்து ஆராயலாம்.

நம் பூமியில் மட்டுமல்லாமல் அனைத்துக் கோளங்களுக்கும் பொதுவாக உள்ள பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில குணங்கள்
1.அதனதன் நிலைக்கொப்ப அதனதன் இனத்துடன் சென்று எப்படி ஐக்கியப்படுகிறது…?
2.ஒவ்வொரு மண்டலமும் இயற்கைக் குணத்தில் எப்படியெல்லாம் வளர்ச்சி ஏற்படுத்திக் கொண்டது…?

மழை வரும் காலங்களில் இடியும் மின்னலும் ஏற்பட… ஏற்பட… ஒவ்வொரு பூமியின் வளர்ச்சித் தன்மையும் கூடுகிறது…! என்று அர்த்தம்.

1.இரண்டு அமில குணங்கள் மோதுண்டு வான மண்டலத்தில் சுழலும் தன்மையில்
2.அதன் மேல் மழை நீர் பட்டு இடி ஏற்பட்டு அந்த இடியின் ஈர்ப்பு பூமியில் பதிந்து
3.அதன் நிலையில் வளரும் காளான்களின் வளர்ச்சியிலிருந்து புதிய புதிய இன இயற்கை வளங்கள் வளருகின்றன.

எந்த நிலை கொண்டு…?

பூமியில் காளான் வளர்ந்த பிறகு ஒன்றிரண்டு நாளில் அதன் நிலை மாற்றம் கொள்கிறது. காளானிலிருந்து வெளிப்படும் அமிலத்தினால் அந்த நிலை காற்றாக பூமியில் படரும் பொழுது அதன் அமிலம் காற்றுடன் கலக்கப்பட்டு எந்தெந்த இடங்களில் அக்காற்றினில் அவ்வமிலம் படர்கின்றதோ எங்கெல்லாம் “புதிய இன வளர்ச்சி” ஏற்படும்.

மற்றும் இக்காளான் வகைகளிலேயே கணக்கிலடங்கா குண வகைகள் வளர்கின்றன மழைக் காலங்களில். பூமியில் மட்டுமல்ல. கடல்களிலும் நீர் நிலைகளிலும் பல வகைக் காளான்கள் மழைக் காலங்களில் ஏற்படுகின்றன.

மரங்களில் வளரும் காளான் ஒன்று இரண்டு நாளில் மடிந்து அந்த மரத்தின் மீது அக்காளான் செடி அழுகிய நிலையில் படர்ந்து விடுகிறது.
1.அந்த மரத்திலிருந்து வெளிப்படும் சுவாசக் காற்று அவ்வழுகிய காளான் மேல் பட்டு
2.அக்காளானிலிருந்து ஆவியான அமிலம் மற்றொன்றின் மேல் படும் பொழுது
3.வேறு வகையான இன வளர்ச்சி தோன்றக்கூடிய உண்மை இதன் தொடரில் தான் வருகிறது.
4.இப்படித்தான் இயற்கையின் வளர்ச்சியே உள்ளது.

நம் பூமியில் சூரியன் மேலிருந்து நம் பூமிக்கு வரும் ஒளி அலை ஒன்று போல் உள்ளதா..? என்று முந்தைய கால விஞ்ஞானத்திற்கும் இன்றைய விஞ்ஞானத்திற்கும் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படுகின்றன.

உலகச் சுழற்சியில் ஏற்படும் இந்த ஒளி அலைகள் ஒன்று போல் சுழன்றாலும் பூமி எடுக்கும் விதத்தில் அதனதன் நிலைக்குகந்த ஒளி அலையைத்தான் இந்தப் பூமியினால் எடுக்க முடிகின்றது.

நம் பூமியில் சில இடங்களில் எரிமலை தோன்றுகிறது. சில இடங்களில் பனி மலைகள் உள்ளன. அந்த இடங்களில் உள்ள ஒளி அலைகளை பூமி எப்படி ஈர்க்கிறது…?

எரிமலையாகக் கக்கும் இந்த உஷ்ண பூமியில் அதற்குகந்த ஆகாரத்தை அது அதிகமாகத்தான் எடுத்துக் கொள்கிறது. இந்த ஒளி அலையின் மூலமாகத்தான் நம் பூமியின் ஜீவனே வாழ்கிறது. நம் பூமிக்கும் ஜீவனுண்டு… உணர்வுண்டு… உருவ சதைகளும் உண்டு.

நம் பூமியின் உள் நிலையை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. பூமியின் உள் நிலையில் உள்ள சக்திகளிலும் செயற்கையின் ரூபம் காண நாம் விரயப்படுத்தி வாழ்கிறோம்.

1.வரும் இடியை இடி தாங்கியினால் தடுக்கின்றோம்.
2.இடி இல்லாவிட்டால் இன வளர்ச்சிக்குகந்த இயற்கைத் தன்மையை நாம் பெற முடியாது.
3.இயற்கையின் தாவர வளர்ச்சி அதிகம் கொண்டால் தான் நாம் இந்தப் பூமியில் வாழ முடியும்.

மனித ஆத்மாக்கள் குறுகிய காலத்திலே செயற்கைக்கு மிகவும் அடிமைப்பட்டு
1.இயற்கையைச் செயற்கையில் கண்டு வாழ்ந்து
2.இந்தப் பூமியையே நிலை தடுமாற வைக்கின்றார்கள்.

பூமியிலிருந்து எடுக்கப்படும் கனிவளங்களைக் காட்டிலும் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமில சக்தியை மனிதனால் மின்சாரம் காண… காற்று அலையில் உள்ள சக்தியைக் காட்டிலும் “பூமியிலிருந்து” அதிக மின் அலைகளை எடுக்கின்றோம்.

இப்படி பூமியையே நம் செயற்கையின் சோம்பேறி நிலைக்காகக் கொண்டு போய் அதில் உள்ள பல சக்திகளையும் விரயப்படுத்துகின்றோம்.

ஆங்காங்கு உள்ள கனிவளங்களை எடுத்தாலும் வளரும் இயற்கை வளர்ந்து கொண்டே இருந்த நிலையும் இன்று செயற்கை விஞ்ஞானம் தடைப்படுத்தி விட்டது.

அதாவது… பல ஆயிரம் ஆண்டு காலங்களாகப் பூமியிலிருந்து தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை எடுத்து வந்துள்ளார்கள். எடுக்க எடுக்க இவையும் வளர்ந்தன.

ஆனால் இந்தக் குறுகிய நூற்றாண்டுகளில்…
1.பெட்ரோலிய இனத் திரவத்தையும்
2.மின்சாரம் காண்பதற்காகக் காந்த அலையின் அணு சக்தியையும் நாம் உறிஞ்சி எடுத்ததனால்
3.பூமியில் வளர வேண்டிய கனி வளங்களுக்குகந்த ஆகாரமான இவ்வமில குணங்கள் எல்லாம் தடைப்பட்டவுடன்
4.அவைகளின் வளர்ச்சியும் சுத்தமாகக் குன்றிவிட்டது.

பொன் முட்டையிடும் வாத்தின் கதையைப் போல் ஆகிவிட்டது…!

வாத்து தானாகத் தினசரி இட்ட முட்டைகளைப் பேராசை கொண்டு ஒரு நாள் அந்த வாத்தை அறுத்துப் பார்த்த நிலையைப் போல் இந்தப் பூமியின் நிலையை மனிதர்கள் சிதறடித்துவிட்டனர்.

1.மனிதனின் எண்ண வளர்ச்சியிலும்… அறிவாற்றலிலும்… ஞானத்திலும் வேகமில்லை…!
2.ஆனால் நினைத்தவுடன் நினைத்தது நடக்க வேண்டும் என்ற
3.பேராசையின் வெறி… வேகம்… மனிதர்களிடம் மிகவும் துரிதப்பட்டதனால்
4.இயற்கையின் பொக்கிஷத்தை எல்லாமே அழித்து வாழ்கின்றோம்.

இதனின் விளைவைக் கூடிய சீக்கிரம் நீங்கள் உணர்வீர்கள்.

Leave a Reply