மகரிஷிகளின் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து உலகில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுங்கள்

மகரிஷிகளின் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து உலகில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுங்கள்

 

உலகம் முழுவதும் நஞ்சாகப் பரவி இருக்கும் இந்த வேளையில்
1.எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மையை
2.அந்தக் கலாச்சாரத்தை இங்கே கொண்டு வர வேண்டும்.

சகோதர உணர்வுடன் வாழ வேண்டும்… எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… என்ற அந்த மகரிஷிகளின் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்.

காரணம்… சிந்தனையற்ற நிலையில் மனிதன் இன்று அசுரனாகின்றான். அந்த அசுர சக்தியை மாற்றுவதற்கு நாம் நம் குருநாதர் காட்டிய நிலைகளில் அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்துப் பரப்பியே ஆக வேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..! என்று நாம் சொல்லும் அந்த அகஸ்தியன் நமது நாட்டில் ஆதியிலே தோன்றிய மனிதன் தான் முதன் முதலிலே விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தவன்.

அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி நம் பூமியின் வடக்குத் திசையில் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.

1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றுமே வாழச் செய்யும் கலாச்சாரம்
2.தென்னாட்டிலே தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானது
3.நம் தென்னாட்டில் மீண்டும் இது தழைக்கின்றது… வேறு எந்த நாட்டிலும் இல்லை.

தெற்கிலே உருவான அந்தக் கலாச்சார அடிப்படையில்தான் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அகஸ்தியன் உணர்வை இப்பொழுது உணர்த்துவதும் உணரச் செய்வதும்.

அத்தகைய சிசுக்கள் வளர்ந்தால் மெய்ப் பொருளின் ஆற்றலை நாமும் பெறலாம். அந்த உணர்வின் தன்மையை எடுத்து உலகம் முழுவதற்கும் பரவும்படிச் செய்யலாம். அதை நாம் வளர்த்தல் வேண்டும்.

தியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டாலும் அந்தக் குடும்பத்திலே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவிலிருக்கும் குழந்தைகள் அந்த அகஸ்தியன் உணர்வுகளைப் பெற்று ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவிலேயே விளைய வேண்டும்
3.இருளைப் போக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்
4.உலகம் ஒன்றி வாழும் அந்த உணர்வின் சக்தி இந்த கருவிலேயே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.

அகஸ்தியன் உணர்வைப் பெற்றுத் தென்னாட்டிலே வளரும் அத்தகைய குழந்தைகள் எந்த நாட்டவரையும் காத்திடும் சக்தியாக வளரும்.

விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் என்று கண்டுணர்ந்தானோ அதைப் போல எந்நாட்டவரும் விண்ணுலகை ஆற்றலைப் பெறும் தன்மையும்… மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.
1.நாம் முன் செல்கின்றோம்.
2.பின் வருவோருடைய நிலைகளும் அதன் வழி செல்லும்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும். எதை எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கிறது. தன் இனத்தின் சக்தியைத் தன் வித்திற்கே கொடுக்கின்றது.

இதைப் போலத் தான் தீமையான வினைகள் மனிதனுக்குள் விளைய வைத்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதை ஊட்டி அந்தத் தீமையின் விளைவையே மனிதனுக்குள் இயக்கச் செய்கின்றது “இன்றைய நிலைக்குக் காரணம் இது தான்…!”.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்… மக்களை மீட்டுதல் வேண்டும். சிறிது பேர் தான் இருக்கிறோம் என்று எண்ண வேண்டாம். இது வளர வளர பல லட்சங்கள் ஆகும்.. பல கோடிகளாகவும் உருவாக்க முடியும்.

இரவில் தூங்கச் செல்லும் போதும் சரி… காலையில் எழுந்தவுடனும் சரி… ஆத்ம சுத்தியை எடுத்து
1.உங்களால் முடிந்த மட்டும் இந்த உலகம் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும்
2.அருள் வழியில் இப்படித்தான் இருக்க வேண்டும்… என்று தியானம் செய்யுங்கள்.
3.அதையே எழுத்தாக எழுதுங்கள்.

யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகளைக் கருத்தில் கொள்ளுங்கள். அதைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றுங்கள்.

எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள். அந்த அருளை உலகெங்கிலும் பாய்ச்சுங்கள்.

Leave a Reply