தீமை எந்த வழியாக நமக்குள் வருகிறது…? அதைத் தடுக்க நாம் போட வேண்டிய பாதுகாப்பு வேலி எது…?

தீமை எந்த வழியாக நமக்குள் வருகிறது…? அதைத் தடுக்க நாம் போட வேண்டிய பாதுகாப்பு வேலி எது…?

 

உதாரணமாக ஒருவர் கடுமையான நிலைகளில் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நோயின் தன்மை கொண்டு உடலில் விளைந்த அந்த உணர்வுகளை…
1.அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது
2.நம் காதின் புலனறிவுக்குள் அவர் வேதனயாக இட்ட குரலின் உணர்வுகள் நம்மை இயக்கச் செய்கின்றது.
3.இந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவி கண்ணின் நினைவலைகளுக்கு வருகின்றது.

அப்பொழுது அது எந்தத் திசை…? என்று பார்க்கின்றது.

நமது கண் யார் வேதனையுடன் சொல்லுகின்றாரோ அவரைப் படம் எடுக்கின்றது. அப்படிப் படம் எடுத்த இந்த உணர்வுகள் ஊழ்வினையாக நம் எலும்புக்குள் பதிவாகின்றது.

1.ஒரு லேசர் (LASER) இயக்கத்தைப் பாய்ச்சி X-Ray படம் எடுப்பது போல
2.நமது கண்ணின் பார்வை லேசரைப் போன்று படம் எடுத்து
3.அந்த உணர்வின் காந்தப் புலன்கள் நமக்குள் ஊடுருவி உணர்வின் தன்மையை ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றது.

அதே சமயம் கண்ணின் நினைவலைகள் கொண்டு இயக்கப்படும் பொழுது அந்த உணர்வால் கண்ணுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும்… உடலுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும் இணைகின்றது.

அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் நுகர்ந்து பார்க்கச் செய்கின்றது. அது நமது ஆன்மாவாக மாறுகின்றது.

நமது ஆன்மா என்பது என்ன…?

நமது ஆன்மா என்பது, நம்மை சுற்றி இருக்கும் நம் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள காற்று மண்டலம்தான்.

இன்று ரேடியோ அலைகள் எப்படிப் படர்கின்றது…? எப்படி ஈர்க்கப்படுகின்றது…? எப்படி வேலை செய்கின்றது…? அதே மாதிரித்தான்
1.நம் ஆன்மாவில் நாம் எண்ணிய சுவாசித்த உணர்வலைகள்
2.பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்தைப் போன்று நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.

நம் கண்கள் வேதனைப்பட்டவரை எலும்புக்குள் பதிவாக்கியபின் “மேக்னட்” போன்று பதிவான உணர்வலைகள் இழுக்கப்பட்டு நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் (ஆன்மாவாக) வந்து சேரும்.

நமக்குள் ஆன்மாவாக மாறியபின் நம் உடலிலிருந்து நஞ்சினை நீக்கும் நமது நல்ல ஆன்மாவுக்குள் அவர்பட்ட வேதனையான நஞ்சு கலந்து விடுகின்றது.

ஆன்மாவில் வருவதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம்.
1.ஆகவே நஞ்சான உணர்வுகள் கலந்து கொண்டபின்
2.நாம் சுவாசிக்கும் பொழுது உயிருக்குள் பட்டவுடனே
3.பாலில் துளி விஷம் கலந்து குடிக்கும் பொழுது எப்படி மயக்கம் வருமோ
4.அதைப் போல நமக்கும் வேதனை உண்டாகின்றது.

அதாவது பரமாத்மாவிலிருந்து நமது ஆன்மாவாக மாறுகின்றது. எப்படி…?

அந்த நோய்வாய்ப்பட்டவர் வேதனை தாங்காது சொல்வதை அந்த வேதனையான மணம் வெளிப்படும் பொழுது அந்த மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.

நமது பூமி ஒரு பரம்… அதாவது எல்லை. இந்த எல்லைக்குள் அவர் பேசிய வேதனையான குரலின் தன்மையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பரத்துக்கு ஆத்மாவாக… பரமாத்மாவாக (இந்தக் காற்று மண்டலத்தில்) மாற்றிவிடுகின்றது.

1.நாம் கண் கொண்டு அவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது
2.;அவர் சொல்லும் உணர்வுகளை அந்த உடலிலிருந்து வெளிப்படுவதை
3.நம் கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுத்துப் பராமாத்மாவில் இருப்பதை நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

இப்படி வந்தவுடன் நம் நல்ல ஆன்மாவில் தீமையான உணர்வு உரிமை கொண்டாட ஆரம்பிக்கின்றது. நம் நல்ல எண்ணத்தையும் நல்ல மனதையும் பலவீனப்படுத்துகின்றது.

அதை மாற்றத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஆகவே தான்
1.நம்முடைய ஆன்மாவில் (நமக்குள்) தீமைகள் புகும் வழியைத் தெரிந்து கொண்டால்
2.அதை மாற்ற அடுத்த கணமே அருள் ஞானிகளின் நினைவாற்றலை நம் கண்ணான புலனறிவுக்குக் கொண்டு வந்து
3.அதைப் பதிவாக்கி… ஊழ்வினை என்ற வித்தாக்கி…
4.அதன் வழி கொண்டு நம் ஆன்மாவிலே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்க வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால் பிறிதொரு தீமை செய்யும் உணர்வு நம் ஆன்மாவிலிருப்பதை அது பிளந்து அதைச் செயலற்றதாக்கும். நம் ஆன்மா தூய்மை ஆகும்.

அருள் உணர்வுகள் “கவசம் போன்று…” நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.

Leave a Reply