மலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

மலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

 

காட்டிற்குள் ஒரு சமயம் மலைப்பாம்பு ஒன்று வருகிறது நான் (ஞானகுரு) படுத்திருக்கிறேன். அது சுருண்டு…சுருண்டு சுருண்டு…சுருண்டு. புஸ்…புஸ்…புஸ்ஸென்று வருகின்றது.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) தான் இதை ஏவிவிட்டாரா… அல்லது நிஜமாகவே வருகின்றதா…? என்று எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு சீறிக் கொண்டு வருகின்றதே…! நிஜமாகவே உருவாக்கி கொடுக்கின்றாரா…! என்ற எண்ணமும் வருகின்றது.

ஆனால் குருநாதர் அருகில் இல்லை… காட்டிற்குள் சென்று விட்டார். குருநாதர் என்ன ஏவல் செய்கிறார்…? என்றும் எனக்குத் தெரியவில்லை. நிஜமா… பொய்யா…? என்று தெரியவில்லை.

அந்தப் பாம்பு அதிபயங்கரமான நிலைகளில் சீறிப் பாய்ந்து கொண்டு வரும் பொழுது என் மேலே இருக்கக்கூடிய துண்டையும் அதிலே ஒரு கல்லை முடிந்து அதைத் தூக்கிக் கொடுக்கின்றேன்.

இது என்னுடைய யோசனை…! புஸ்…ஸ்ஸ்… என்று இழுக்கும் பொழுது அதைத் தூக்கி கொடுக்கின்றேன். வாயில் சிக்கிக் கொண்டது.

மனிதனுடைய வாசனை என்று தெரிந்து அந்தக் கல்லுடன் சேர்த்து அப்படியே விழுகின்றது. ஏனென்றால் துண்டைக் கையில்தான் எடுத்திருந்தேன். அதற்குள் கல் தான் இருக்கிறது என்று அதற்குத் தெரியாது.

அந்த நேரத்தில் எனக்குள் பல விதமான உணர்வுகள் சுழல்கின்றது.
1.ஒரு பக்கம் தைரியமும் வருகின்றது. ஒரு சில நேரங்களில் தப்ப முடியவில்லை.
2.ஆனாலும் இதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஏனென்றால் அதற்கு முன்னாடி என் விரலை நீட்டினால் மரத்தையே வேருடன் சாய்க்கும் சக்தியை குருநாதர் கொடுத்திருந்தார்.

சரி…! என்னிடம் கொடுத்த சக்தியை வைத்து நான் ஏதாவது செய்கின்றேனா…? என்று தான் குருநாதர் பரிசோதிக்கிறார் என்ற இப்படி ஒரு சிந்தனை வந்தது.

1.எதுவானாலும் சரி… அப்பா நீயே பார்த்துக் கொள்…
2.எனக்கு ஒன்றும் தெரியாது.
3.என்னைப் பாம்பு விழுங்கினாலும் சரி… அல்லது கடித்தாலும் சரி…
4.நீயே பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டேன்… அவ்வளவுதான்…!

அந்த மலைப் பாம்பை அனுப்பி வைத்தது அவருடைய ஏவல்தான் என்று அப்புறம் நான் புரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு மறைகின்றது.

குருநாதர் கெக்கெக்..கெக்க.. என்று சிரித்துக் கொண்டு வருகின்றார். என்னுடைய பயிற்சியில் நீ தப்பிவிட்டாய்…! என்கிறார்.

குருநாதர் இந்த மாதிரிப் பல பரிசோதனைகளை வைத்து அவர் எனக்குக் கொடுத்த சக்தியை நான் எப்படி உபயோகிக்கின்றேன்…? என்று பார்க்கின்றார்.

இது போன்ற பல இன்னல்களைப் பட்டேன்… காடு மேடெல்லாம் அலைந்தேன்… குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் உணர்த்திய உண்மைகளை அறிந்தேன்… அந்தச் சக்தியை எனக்குள் பெருக்கினேன்.
இருந்தாலும் குருநாதர் எனக்குச் சொன்னது…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி
2.ஒவ்வொரு உடலையும் கோவிலாக மதி
3.அந்தக் கோவிலுக்குள் இருக்கும் நற்குணங்களை நீ உயர்ந்த நிலையில் எண்ணு…!

இவ்வாறு நீ எண்ணுவாய் என்றால் நான் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்தி உனக்குள் நற்பயனை அடையும்…! என்று இப்படி இந்த மூன்று சுருக்க நிலையைச் சொன்னார்.

அந்த அடிப்படையில் தான் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.

Leave a Reply