உபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்திகளை நீங்கள் பதிவாக்கியே ஆக வேண்டும்

உபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்திகளை நீங்கள் பதிவாக்கியே ஆக வேண்டும்

 

நமது குருநாதர் கண்ட உண்மையின் உணர்வுகள் அது எப்படி உணர்வுகள் ஒளியாக ஆனது அதன் அறிவாக ஆனது என்ற அந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

நஞ்சு கொண்ட உணர்வினை அந்த அகஸ்தியன் எப்படி வென்றான் என்ற நிலையில் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் வரும் பொழுது அந்தக் கஷ்டத்தை எண்ணாதபடி… அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருளைப் பெற வேண்டும் என்ற நினைவை நீங்கள் கூட்டினால் அவன் கண்ட உண்மை உங்களுக்குள் கிடைக்கும்.

மற்றவர்கள் சொல்லும் துயரத்தையும் வேதனைகளையும் உங்களுக்குள் வராதபடி தடுத்து நிறுத்தி
1.அந்த அகஸ்தியன் அருள் அவர்களுக்குக் கிடைக்கட்டும்
2.பிணிகளில் இருந்து விடுபடும் சக்தி அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்று நீங்கள் சொல்லலாம்.

இது தான் நல்லது…!

ஏனென்றால் இப்படிச் செய்யும் போது உங்களை நீங்கள் காத்துக் கொள்கிறீர்கள். பிறரையும் காக்கும் சக்தியாகச் செயல்படுத்துகின்றீர்கள். இந்த இரண்டும் அவசியம் வேண்டும்.

ஆனால் பொதுவாக மற்றவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்குமே வருகிறது. இந்த உணர்வு வேகம் வந்தவுடன் கொஞ்ச நாளைக்கு உதவி செய்கிறீர்கள். பின்னாடி நிலைமை இங்கே தடுமாறும் போது…
1.எல்லாருக்கும் நான் உதவி செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…
2.தெய்வம் சோதிக்கிறது…! என்று அந்த வேதனையைத் தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் பட்ட துன்பம் உங்களில் வராது தடுக்க வேண்டுமல்லவா…!

ஆகவே இது போன்று நல்லது என்று செய்தாலும் அதற்குள் மறைந்து வரும் தீமைகள் என்ன செய்யும்…? என்று நாம் அறிந்து கொண்டபின் அதை நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த ஞானம் வேண்டும்.

விஞ்ஞான அறிவுப்படி ஒரு உலோகத்தை வைத்து இயந்திரத்தை உருவாக்குகின்றனர். ஆனால் இயந்திரம் ஓடும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் ஜாஸ்தியாக இருக்கிறதது என்று அது தாங்கவில்லை என்றால் என்ன செய்கிறார்கள்…?

1,அந்த இடத்தில் வரும் அதிகமான அழுத்தத்தையும் உராய்வையும் தாங்கக்கூடிய சக்தி கொண்ட
2.இன்னொரு உலோகத்தைச் சேர்த்தால் சரியாக வரும் என்று விஞ்ஞானி அதைக் கூட்டிக் கொள்கின்றான்.
3.அந்த உலோகத்தை மாற்றிய பின் இயந்திரம் சீராக இயங்குகிறது.

அதே மாதிரித் தான் மெய் ஞானிகள் கண்ட ஆற்றல்மிக்க சக்திகளை உங்களுக்குள் குருநாதர் காட்டிய வழிப்படி இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகள் வரும் பொழுது அந்த ஞானிகளின் சக்திகளை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டால் அதை மாற்றிடும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எப்பொழுது பார்த்தாலும் வீட்டில் சண்டை… சச்சரவு… வேதனை… என்றே சொல்வார்கள். நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்தேன். அவர்களை எல்லாம் எனக்கு எதிராக இப்பொழுது திருப்பி விடுகிறார்கள்… தொழிலையே செய்யவிடாது என்னைத் தடுக்கிறார்கள்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆக… இத்தகைய தவறான உணர்வுகள் நம்மை இயக்காது நல்லதாக மாற்றிடும் வலுவான சக்திகளை நாம் கொண்டு வர வேண்டுமா… இல்லையா…! அதற்கெல்லாம் இந்தப் பதிவு (உபதேச உணர்வுகள்) இருந்தால் தான் உங்களுக்கு அந்த உதவி கிடைக்கும்.

யாம் உபதேசிப்பதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த காற்றில் இருக்கும் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நீங்கள் உங்களைக் காக்கலாம்.

பிறரைக் காத்தாலும் அவர்கள் கஷ்டம் உங்களைத் தாக்காது இருக்க ஒரு வலு உங்களுக்கு வேண்டுமா இல்லையா…! ஏனென்றால் எல்லோரும் நல்லவர்கள் தான் யாரும் கெட்டவர்கள் இல்லை…!

நல்லதை எண்ணிச் செய்து… செய்து அவர்கள் கஷ்டத்தை எல்லாம் கேட்டுக் கேட்டு இந்த உணர்வு உடலில் வரப்போகும் போது அது வளர்ந்து விடுகின்றது. நம் நல்ல குணம் மறைந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்குத்தான் அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). அதை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிக் கொள்ளுங்கள். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.

Leave a Reply