கண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன…?

கண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன…?

 

ஒருவர் வேதனைப்படுவார்.. ஒருவர் சங்கடப்படுவார்… ஒருவர் நோயுடன் அவதிப்படுவார்… ஒருவர் கோபக்காரராக இருப்பார்…! இவர்களின் உணர்வை எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்க்க நேர்ந்து அதை நுகர்ந்தறிந்தால் இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

சீதா என்றால்… சத்து சுவை என்றும்.. ராமா என்றால் எண்ணங்கள் என்றும்… சீதாராமா என்றால்.. மனிதனுக்குள் நுகர்ந்தால் (சுவாச நிலை) சுவைக்கொப்ப எண்ணங்கள் வருகின்றது என்றும்… நமக்குள் பலவிதமான நிலைகளை (மேலே சொன்னதை) நுகர்ந்தால் அந்த உணர்வின் எண்ணங்கள் “பல ராமனாக (பலராமன்) இயக்குகின்றது…” என்றும் சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.

பலராமனாக வருவதற்குக் காரணம்… நம் கண் ஒன்றை உற்றுப் பார்க்கின்றது. கண்களால் கவரப்பட்ட உணர்வை நுகரச் செய்கின்றது. அதன் உணர்வின் எண்ணங்களாக வருகின்றது.

உயிரோ அந்த உணர்வை ஈசனாக இருந்து இயக்குகின்றது. உடலுக்குள் அது பதிவாகின்றது. இவ்வாறு பதிவாக்கிய உணர்வுகளை
1.கண்களால் அந்தந்த உணர்வை அறிய முடிகின்றது
2.நுகர்ந்த பின் அந்தந்த உணர்ச்சி கொண்டு உயிர் நன்மை தீமை என்று அறிவிக்கின்றது.

நன்மை தீமை என்று அறிவதற்குக் கண்ணே கவர்ந்து அந்த உணர்வைப் பதிவாக்கி அந்த உணர்வை நுகரச் செய்கிறது.
1.உயிர் அந்த உணர்ச்சியை ஊட்டி உடல் முழுவதும் அது சக்கரம் போன்று சுழன்று படரச் செய்கின்றது.
2.உடலுக்குள் சென்ற பின் உடல் அதை அரவணைத்துக் கொள்கின்றது.

நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்தாலும் மனிதனான பின் இந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் மறைந்துள்ளது. பல விதமான எண்ணங்கள் நமக்குள் உண்டு,

இந்த உயிர் இங்கே பூமிக்குள் முதலில் வந்த பின் தாவர இனத்தில் விழுந்து உடல் பெற்றாலும் “கண்கள் உருவாவதற்கு முன் எண்ணங்களே இருந்தது…!” அனைத்தையும் (தாவரங்களின் மணங்களை) உணர்ந்து நுகர்ந்து உணர்வுகள் அது எண்ணங்களாக வளர்ந்தது.

ஒரு செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து கொண்டால் அது சீதாலட்சுமியாக மாறுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உயிரணு சூரியன் கவர்ந்த அந்த மணத்தை நுகர்ந்தால் சீதாராமனாக வருகின்றது. உயிரணு நுகர்ந்து உடலாக்கப்படும் பொழுது சிவமாகின்றது.

உயிரோ ஈசனாகின்றது. உயிரின் இயக்கம் விஷ்ணுவாகின்றது. நாராயணன் மறு அவதாரம் விஷ்ணு. உயிரின் துடிப்புகள் வெப்பமாக வரப்படும் பொழுது விஷ்ணு என்றும் காட்டுகின்றார்கள்.

நாராயணன் என்றால் சூரியன். தான் எடுத்துக் கொண்ட உணர்வு சீதாலட்சுமியாக மாறினாலும் இந்த உயிரணு நுகர்ந்தபின் சீதாராமனாக அந்த எண்ண்ங்கள் தோன்றுகிறது. நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான். திரேதா என்றால் உடல்.
1.இதை எல்லாம் ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைத்து
2.நாம் அறியும் தன்மைக்குக் கொண்டு வருகின்றனர் ஞானிகள்.

இப்படி வந்த இந்த உயிர் தான்… நுகர்ந்த பின் இந்த சீதா என்ற அந்தச் சுவை உடலாகும் போது சிவம்..

உடலுக்குள் அந்த உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிப்பதும் நாராயணன் அந்த உடலுக்குள் சீதாரமனாக அந்தச் சுவை எதுவோ அந்த எண்ணத்தின் உணர்ச்சியாக அது இயக்குகின்றது என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள்.

கடவுளின் அவதாரத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

இவ்வாறு உருவான அந்த எண்ணங்கள் சீதாராமன் என்று வந்தாலும் அதற்கப்புறம் கண் இல்லை என்கிற போது பார்க்க வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.

1.பல தீமையான உணர்வுகளை நுகரும் போது அதனால் வேதனைப்படுவதனால்
2.அந்த வேதனையிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்துகின்றது.
3.அதன் அறிவாக மாற்றம் அடைகின்றது… தப்பிக்கும் உணர்வுகள் அங்கே வருகின்றது.

பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்… என்ற உணர்வுகள் பார்த்துத் தெரிந்து உணர வேண்டும் என்ற நிலையில் அதற்குள் அந்த நினைவாற்றல்கள் கூடி அந்த உணர்வின் எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது.

1.அவ்வாறு தோற்றுவித்த உணர்வுகள் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துச் சேர்த்து
2.பல உடல்களில் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் வளர்ச்சி அடைகிறது,
3.அதைத் தான் “துவாரகா…” என்று காட்டுகின்றனர்.

ஒரு சுவையின் சத்தை நுகரப்படும் போது திரேதா யுகத்தில் உணர்வுகள் எண்ணங்களாகிக் கிரேதா உடல் என்று ஆனாலும் அதே சமயத்தில் இங்கே துவாரகா இந்த உடலுக்குள் தான் தன் தேவைக்குகந்ததை (தேவகி) நுகர்ந்த உணர்வுகள் வாசு தேவனாக சுவாசித்த உயிர் அதை உருவாக்குகின்றது.

அதாவது “தேவகி” என்ற உணர்வின் சத்தை
1.தன் தேவைக்கு என்று எண்ணிய அந்த உணர்வுகள் இரண்டும் சேர்ந்து
2.இந்தத் துவாரகா யுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் இந்த உடலான சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்… கம்சனை வெல்ல..!

கம்சன் என்றால் இருள். இருளை நீக்க அவன் பிறந்தான். இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகள் பல சரீரங்களீல் பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தோன்றித் தோன்றி அந்த எண்ணங்களால் தான் கண்கள் தோன்றியது என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகிறது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக மகாபாரதத்தில் பலராமன் கண்ணனுக்கு மூத்தவன் என்று காட்டுவார்கள்.

பல உணர்வின் எண்ணங்கள் (பல ராமன்) அங்கே தோன்றித் தான் பார்க்க வேண்டும் என்ற கண்கள் தோன்றியது.

ஆக…
1.இந்த இயக்கத்தின் நிலைகளை மனிதன் புரிந்து கொள்ளும் நிலைக்கே
2.பல உண்மையின் உணர்வுகளை இயக்கத்தைக் காட்டியிருந்தாலும்
3.காலத்தால் அந்த உண்மைகள் மறைந்து விட்டது.

மனிதனாக உருவாகக் காரணமான… “நாம் நுகர்ந்த உணர்வுகள்…” எவ்வாறு சந்தர்ப்பங்களில் ஒவ்வொன்றயும் நுகரச் செய்தது..? சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உயிர் நம்மை எப்படி மனிதனாக உருவாக்கியது…? என்று இதை எல்லாம் நம் சாஸ்திரங்களில் மிக மிகத் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதைச் சொன்னாலும் இன்று தெரிந்து கொள்ளும் நிலை இல்லை…! ஏற்கும் நிலையும் குறைவாகவே உள்ளது…!

Leave a Reply