பொது நலம் கொண்ட ரிஷிகளின் செயலுக்கும் சுயநலம் கொண்டவர்களின் செயலுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பொது நலம் கொண்ட ரிஷிகளின் செயலுக்கும் சுயநலம் கொண்டவர்களின் செயலுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இறை ஆத்மாவின் அன்பு கொண்ட சக்தி ஜெபம் பெற்றவர்கள் (ரிஷிகள்) இறைவனாகவே செயல்படுகின்றனர்.

ஒவ்வோர் உயிரணுவையும் தனதாக எண்ணி அவ்வுயிராத்மாக்கள் படும் வியாதியின் சங்கடத்தை இவ் இறை ஆத்மாக்களினால் ஏற்கப் பொறுக்காமல்… அவ்வாத்மா வேறல்ல தனதாத்மா வேறல்ல என்ற நிலைப்படுத்தி… ஒவ்வொரு சிறு உயிரணுவும் அதன் துடிப்பில் வேதனை உறுவதை தன் உயிராத்மாவுடன் கலக்கவிட்டு… “தானே அவ்வேதனைக்கு உடையவனாகி அதை அகற்றிடல் வேண்டும்… மற்ற உயிரணுக்கள் எல்லாமே இன்புறல் வேண்டும்…” என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயலாக்குகின்றார்கள்.

1.ஆனால் அது அது செய்த பாவத்திற்கு அது அனுபவிக்கின்றது
2.நாம் ஏன் வேதனையுறல் வேண்டும் என்ற சுய நல மிக்க ஆத்மாக்களினால்
3.நற்செயலையே செய்து நல்லொழுக்கமே கொண்டு வாழ்ந்து வழி வந்தாலும்
4.மற்ற ஜீவ அணுக்களையும் தனதாக ஏற்காமல் செயல்படுபவன் “சுயநலமிக்கவனாகின்றான்…”

“எல்லா உயிரணுக்களுமே ஒன்றுதான்…!” என்ற எண்ணம் கொண்ட உயிராத்மாக்கள்தான் “ஞான ஒளி…” ஆகின்றார்களே அன்றி சுயநலம் மிக்க ஆத்மாக்களினால் அருள் நிலை பெறுவது கடினம்.

சிறு எறும்பு நம்மை வந்து கடிக்கின்றது. அக்கடி நிலை பொறுக்காமல் அதை நசுக்கி எறிகின்றோம். அவ் எறும்பின் ஜீவன் பிரிந்து விடுகின்றது. அதன் உருவம் நச்சுப்படுகின்றது என்று எண்ணுகின்றோம். அதன் ஜீவன் எங்கு செல்கின்றது…?

அதை நசுக்குபவரின் எண்ணத்திலேயே…
1.அவ் எறும்பு சேமித்த எண்ணத்தையும் அமிலத்தையும்
2.அதை நசுக்குபவனே ஏற்றுக் கொள்கின்றான்.

பல உயிர்களை உணவாக்கி உண்ணுகின்றோம். அதனால் அவைகளுக்கு இம் மனிதர்களின் உடலிலேயே அவற்றின் சக்தியை எல்லாம் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை அறியாமல் நம் நாவின் சுவைக்காக நம்மை அறியாமல் நாம் பலி படுகின்றோம்.

எல்லா உயிர் அணுக்களுக்குமே எண்ணமுண்டு. இவ்வெண்ணத்தில் சேமித்த அமிலத்தின் நன்மை தீமை கொண்ட குண நிலையும் உண்டு.
1.ஓர் உயிர் ஜெந்துவை அழித்து உண்ணும் நாம்
2.அஜ்ஜெந்துவின் நிலையையும் நம்முள் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை உணரல் வேண்டும்.

மனிதர்களில் இருந்துதான் மிருக ஜெந்துவும் பறவைகளும் ஊர்வனவும் வருகின்றன என்று முதலிலே சொல்லியுள்ளேன். மிருகங்கள் மற்றப் பறவைகள் எல்லாம் மனித இனமாக வருவதில்லையா…? என்று எண்ணிடலாம்.

மனிதர்களால் மற்ற ஜெந்துக்களைப் புசிக்கும் நிலையில் அதன் சப்த அலையும் உயிரணுவும் அதன் உடலைப் புசித்தவனின் உடலுக்குள் ஏறிக் கொள்கின்றது.

1.அறிவு வளர்ச்சி நிலை கொண்ட மனித ஆத்மாவில் ஏறிக்கொள்ளும் மிருக ஜெந்திற்கு
2.அம் மனிதக்கூட்டில் இருந்து அம்மனித ஆத்மா பிரிந்த பிறகு
3.மனிதனின் உடலில் ஏறிய இஜ்ஜீவனுக்கும் மனித உருவாய்ப் பிறந்திடும் பக்குவ நிலை பெற்று பிறப்பிற்கு வருகின்றது.

அஜ் ஜெந்திற்கு இம் மனிதனால் விமோசனம் கிடைக்கின்றது…!

இம் மனிதனுக்குத்தான் மற்ற ஜீவனை உண்ட நிலையினால் அதன் குண நிலையின் வழித்தொடர் பெறுகின்றான்.

இந்த நிலையை உணர்ந்து நாம் எல்லா ஜீவ ஆத்மாக்களிடமும் உயிரணுக்களிடமும் “அவை வேறல்ல… நாம் வேறல்ல…” என்ற நிலையில் நம்மையே அவையாக்கி அவையே நாமாகி… “அன்பென்னும் நிலைதனை கனிவாகப் படர விடல் வேண்டும்…!”

இன்று அவை கொசுவாகவும் குருவியாகவும் ஆடாகவும் இருந்திடலாம். அவையும் நம்மைப் போல் ஜீவன் கொண்டவை தான். எல்லா உயிரணுக்களையும் நமதாக எண்ண கனிவு நிலையில் வழி நடந்திடுங்கள்.

இவ்வுலகிற்கும் எண்ணமுண்டு… ஜீவ காந்த அமில சக்தியுண்டு. இவ்வுலகினில் வாழும் அனைத்திற்கும் மனிதன் முதல் எறும்பு வரை அனைத்து ஜீவராசிகளுக்குமே எண்ணமும் உண்டு… அதற்குகந்த காந்த அமில சக்தியுண்டு…!

1.யாருக்கு யாரும் மூத்தவருமல்ல இளையவருமல்ல
2.எல்லாம் அப் பரம்பொருளின் ஐக்கியம் கொண்ட ஆத்மாக்கள் தான்.

Leave a Reply