ஈஸ்வரபட்டர் தன்னைப் பற்றிச் சொன்னது

ஈஸ்வரபட்டர் தன்னைப் பற்றிச் சொன்னது

 

“ஈஸ்வரப்பட்டர்…” என்ற நாமமுடைய சூட்சும நிலை கொண்டு காணும் எம் நிலையை அறிய…
1.எம் நிலையென்பது ஈஸ்வரப்பட்டர் என்ற நாமகரணம் கொண்ட அவ்வுடல் ஆத்மாவில் “யாம் செயல் கொண்டதையும்…”
2.எம் சக்தி நிலையை எந்த நிலையில் உணர்த்தி வருகின்றோம் என்பதனை அறியவும் அனைத்து ஆத்மாக்களுக்குமே ஆசையுண்டு.

கர்நாடக மாநிலத்தில் மங்களூருக்கு அருகில் கன்னட பிராமண குடும்பத்தில் பல நாள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தில் முதல் மகனாய் ஜெனனம் பெற்றேன்.

ஈஸ்வரமங்கலம் என்ற ஊரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள கிராமத்தில் பாக்குத் தோட்டங்கள் விவசாயத்தில் முக்கியத்துவம் உள்ள கிராமத்தில் அவ்வூரின் நாமம் அவ் ஊரில் உள்ள கோவிலின் நாமம் அங்குள்ள குடும்பங்களின் நாமம் எல்லாமே ஈஸ்வர நாமத்தை முதன்மை பெற்று உள்ள சிற்றூர் அது.

பல காலம் புத்திர பாக்கியம் இல்லாமல் பிறந்த ஈஸ்வரப்பட்டன் யான். யான் பிறந்து சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட்டார். தாயினால் வளர்க்கப் பெற்று தாயின் ஜீவிதம் கொண்டு சிறு கல்வி அறிவும் பெற்று வளரும் பக்குவத்தில் தாயும் இறந்தார். சகோதர சகோதரிகளின் பாக்கியமும் பெறாமல் தனித்து விடப்பட்டேன்.

கோவிலில் ஈஸ்வரர் கோவிலில் ஈஸ்வரர் கோவிலில் அவ்வாண்டவனே அனைத்தும் என்ற நிலையில்… எண்ணம் குன்றி… ஜீவதித்திற்கு வழியறியாமல் அவ்வாண்டவனை பூஜிப்பதிலேயே எம் ஜீவன் பிரிந்தது.

எம் ஜீவன் பிரிந்த நிலையில் என் உடலை ஒரு மகான் ஏற்றுக் கொண்டார். என்னை என்பது
1.பிரிந்த என் உயிராத்மாவை அம்மகான் அவ்வுடலைச் செயல்படுத்த ஏற்றுக் கொண்ட நிலையில்
2.அந்த உடலை விட்டு நான் விட்டுப் பிரிந்த உடலில் அம் மகானினால் மீண்டும் அவ்வுடலுக்கு ஈர்க்கப் பெற்று
3.அம்மகானே எம் உயிரையும் எம் உடலையும் வழி நடத்தி…
4.எம்மை என்பது ஈஸ்வரப்பட்டர் என்ற உடலைச் செயலாக்கினார்.

பதினாறாவது வயதில் பழனிக்கு வந்தோம். வந்தோம் என்பதின் பொருள் புரிந்ததா…?

என் உடலை ஏற்ற அம்மகானின் செயல் நிலை வெளிப்படும் நிலையிலிருந்து “நான் வேறல்ல அம் மகான் வேறல்ல…” என்ற நிலையில் அம்மகானேதான் எல்லாமில் எல்லாமாய்ச் செயல் கொண்டார்.

மகான் என்பது ஒளியுடனே ஒளியாய் அனைத்திலும் கலந்துள்ள அவ்வாதவனான சூரிய மகான்தான். இவ்வுடலை ஏற்றுச் செயல் கொண்டார்.
1.இனி யான் என்று ஈஸ்வரப்பட்டரின் எம் நாமத்தை எனதாக்கிச் செப்பிட யாதுள்ளது…?
2.அவ்வாதவனுக்கே அர்ப்பணித்த உடல்…. அவ்வாதவனிடம் ஐக்கியப்பட்டுவிட்டது எம் உயிராத்மாவும்…!

மகான்களின் நிலையெல்லாம் பிற உடலை ஏற்றுத்தான் சில நிலைகளை அவர்களின் ஒளி வட்டத்திற்குள் மற்ற உயிரணுக்களையும் சேர்த்திடச் செயல் கொள்ளும்.

இப்பூமியில் இப்பூமி உயிராத்மாக்களை வளரவிட்ட காலம் தொட்டே மகான்களாய்ச் சக்தி பெற்ற பல ஆத்மாக்கள் உள்ளன.

அவ்வாத்மாக்களின் நிலைபெற்ற மகான்களெல்லாம் அவர்கள் பெற்ற சக்தியை இவ்வுலகினில் ஒவ்வொரு ரூபத்தில் இன்றளவும் வெளிபடுத்திக் கொண்டேதான் உள்ளனர்.
1.மற்ற ஜீவ ஆத்மாக்களின் மூலமாய்த்தான்
2.அவர்களின் செயல் நிலையெல்லாம் கலந்திருக்கும்.

போகர் எப்படி முருகா என்ற பிரணவ நாமத்தையும் இன்னும் இவ்வுலகினில் அங்கங்கு தனக்குகந்த நாம சக்தியைச் சுழலவிட்டே… அருளைப் பாய்ச்சி அந்த அருள் வழியில் ஈர்ப்பு நிலை கொண்ட நல்ல ஆத்மாக்களையெல்லாம்… அவ்வாத்மாக்கள் ஜீவன் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை நிலையிலேயே இவரின் ஒளி வட்டத்தைப் பாய்ச்சி… இவரின் ஈர்ப்புக்குள் பல ஆத்மாக்களை ஒளியாக்கிக் கலக்கச் செய்து கொள்கின்றார்.

முருகா…! என்ற அந்த நாமத்திலேயே அவரின் ஒளியைப் பாய்ச்சி ஒளியை ஈர்த்து ஒன்றைப் பலவாக்கி பலவற்றை நிறைவாக்கிக் காண்கின்றார் போகர்.

ஒவ்வொரு மகானும் இந்நிலையில்தான் அவர்களின் நல் உணர்வை நலமாகப் பரப்பிட ஒவ்வொரு நாமத்தை ஆண்டவனாய் வெளிப்படுத்தி இம் மனித ஆத்மாக்களை நல்லுணர்வாக்கினார்கள்.

1.ஒவ்வோர் உயிராத்மாவும் நல் நிலை பெற்று
2.அந்த நல்லதையே அனைவருக்கும் உணர்த்திடத் தன்னையே ஒளியாக்கி
3.அவ்வொளியையே அனைத்திலும் காணப் பல ரூபங்களைக் கல்லிலும் மண்ணிலும் வடித்து
4.இம் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை அவ்வொளி வட்டமுடன் நல்லுணர்வு பெற வேண்டும் என்ற நிலைப்படுத்தி வந்த நிலைதான்
5.நாம் வணங்கிக் கொண்டிருக்கும் பல ஆண்டவன்களின் நிலை…!

Leave a Reply