முதல் பாதம் இரண்டாம் பாதம் என்று சொல்லும் இந்தப் பாத நிலை என்றால் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

முதல் பாதம் இரண்டாம் பாதம் என்று சொல்லும் இந்தப் பாத நிலை என்றால் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆதியிலிருந்து இன்றளவும் நமக்குக் கதைகளாகவும் பாடல்களாகவும் போதனை நிலைகளாகவும் தெய்வீக நிலைகளை நமக்கு உணர்த்தியவர்களெல்லாம்
1.சூட்சமப்படுத்தி மறைக்கப்பட்டு அதிலுள்ள ஜீவ நிலையை மக்களுக்குப் புரியும் நிலையில்
2.கதைகள் ரூபத்திற்காக அன்று வெளியிட்ட ஞானிகளின் ரிஷிகளின் நிலையையே
3.காலப் போக்கில் பல வடிவங்களைச் (திரிபு) சேர்த்து இன்றைய நிலைக்கு நம்பா நிலைப்படுத்தி விட்டார்கள்.

அவரவர்கள் வாழும் நிலைப்படுத்தி அவரவர்களின் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதமுண்டு, முதல் பாதம்… இரண்டாம் பாதம்… என்று இப்படி வரிசைப்படுத்தி எல்லாவற்றுக்கும் மேல் பாதம் சென்ற பிறகு தான் “அந்த ஆண்டவனுடன் ஐக்கியப்பட்டிடலாம்…” என்ற நிலையில் உணர்த்தி வருகின்றனர்.

இப்பாத நிலை பெறும் நிலை என்ன…?

ஒவ்வொரு பாதத்திலிருந்தும் முதல் படி இரண்டாம் படி மூன்றாம் படி இப்படிப் பள்ளியில் படித்திடும் நிலைக்கொப்ப “கடைசிப் படியில் பட்டம் வாங்குவதைப் போல் அல்ல…!” அவ்வாண்டவனிடம் ஐக்கியப்படும் நிலை.

எங்கும் நிறைந்துள்ள… நம்முள்ளும் கலந்துள்ள… நம் ஆத்மாண்டவனின் சக்தியை நமக்களித்த இந்த ஏழு பிறவியில் நாம் பெறுதல் வேண்டும்.

ஆனால் வாழ்ந்த நிலை கொண்டு நம் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு நமக்குகந்த அபிலாஷைப்படி இந்த ஏழு பிறப்புகளை நம் எண்ண நிலையில் மேம்படுத்திடாவிட்டால் நம் ஆத்மாவிற்கு இந்த மனித உடலை ஏற்கும் சக்தி இழந்துவிடுகின்றோம்.

இந்த ஏழு பிறப்பிலும் நம் எண்ண நிலைக்கொப்ப நாம் சேமித்துச் செயல்படுத்திட்ட பல தீய சக்திகளின் அமில சக்தியின் நிலை… இந்த ஏழாம் பிறப்பில் அதன் துரித சக்தியினால்… இந்த ஏழு பிறப்பில் சேமித்த நற்சக்திகளையும் இத்துரிதம் கொண்ட தீய சக்தியின் நிலையுடன் கலந்து…
1.இந்த ஏழாம் பிறப்பில் நம ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
2.நம் எண்ண சக்தியே தீய சக்திக்கு அடிபணிந்திட்ட நிலையில்
3.நாம் ஆவி உலகில் பல காலம் சஞ்சரிப்பதால் அந்நிலையில்…
4.அந்நிலையின் குண நிலைக்கொப்ப மிருகங்கள் உடல்களில் ஏறியும் அங்ககீனமுற்ற பிறப்புக்குத் தான் அடுத்து வருகிறோம்.

நாமாகச் சேமித்த வழி சென்றிடும் நிலை தான் இந்த நிலை…!

முதல் பாதம் இரண்டாம் பாதம் என்பதெல்லாம் ஒவ்வோர் உடலை ஏற்று அந்த உடல்களில் நாம் ஏற்படுத்திடும் சக்தி நிலைக்கொப்பத்தான் பிறவி நிலை பெறுகின்றோம்.

ஞான சக்தியின் தொடர்பு நிலைகொண்டு இவ்வுலக நிலையில் பற்றற்ற நிலைப்படுத்தி பக்தி நிலையின் சித்து நிலை பெற்ற பிறகுதான் சூட்சம நிலைக்கே சென்றிட முடியும்.

இவ்வாத்மாவுடன் கூடிய இந்த உடலில் வாழும் காலத்திலேயே நம் எண்ணத்தில் தீய அணுக்களின் சக்தி நிலையை நாம் அடக்கிப் பழக வேண்டும்.

கோபத்தையும் குரோதத்தையும் சஞ்சலத்தையும் சலிப்பையும் நம் எண்ணத்தில் வளரவிட்டு ஜெபம் கொண்டால் அதிலே எந்தப் பலனும் நம் ஆத்மாவிற்குக் கூடுவதில்லை.

நம் ஆத்மாவுடன் அன்பு கொண்ட நல் உணர்வையே வளரவிட்டால் அன்றி ஞான சக்தியின் தொடர் அறிவதும் கடினமே.

1.முதலில் நம்மையே நாம் உணர்ந்து.. நற்சக்திகளின் வழித் தொடர் பெற்று
2.ஞான வழியின் தொடரினால் அந்தத் தொடர் நிலை கொண்டோரின் தொடர் சக்தியையும் பெற்று
3.இவ்வழியிலேயே இவ்வழித் தொடரினை அறிந்து சப்தரிஷியின் நிலை பெற்று
4.ஒளியுடன் ஒளியாகக் கலந்து செயல்படும் நிலை தான் ஆண்டவன் நிலை பெறுவது.

இந்நிலையை உணர்த்திடத்தான் முதல் பாதம் இரண்டாம் பாதம் என்றெல்லாம் வழிப்படுத்தி உணர்த்தி உள்ளனர்.
1.ஆண்டவனே தான் நாம்… அவனே தான் மற்ற எல்லாமுமே…
2.யாரும் நமக்கு அப்பதவியை அளிப்பதல்ல… நாமே தான் நம் பதவியை அடைந்திட வேண்டும்.

ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களினால் தன் அறிவு நிலையை வளர்ச்சியில் செயல்படுத்திட முடியாது. ஆசை நிலை நல்லுணர்வுக்குத் தோன்றினாலும் பிறப்பெடுத்து இவ்வுடல் கொண்ட ஆத்ம வழியில் தான் எச்சக்தியின் தொடரையும் நாம் அறிந்திட முடியும்.

ஆகவே ஆவி உலகிற்குச் சென்று அல்லல்படும் நிலை இல்லாதபடி இன்று உடலுடன்… நல் நினைவுடன் இருக்கும் பொழுதே.. ஞானத்தின் வழி கொண்டு செயல்பட வேண்டும்.

Leave a Reply