பூரண நிலவு போன்று நாம் முழுமை அடைந்து பிரகாசிக்க வேண்டும்

பூரண நிலவு போன்று நாம் முழுமை அடைந்து பிரகாசிக்க வேண்டும்

 

பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கும் போது உங்கள் மனம் இருண்டு விடுகின்றது. உங்களுடைய செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்லறிவின் செயலே முழுமையாக இழந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்குத்தான் சப்தரிஷிகளின் அருளையும் துருவ மகரிஷியின் அருளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வலைகளையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை நுகரச் செய்து உங்கள் கண்ணின் வாயிலாகப் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் ஆறாவது அறிவை…
2.எதனையுமே அறிந்து தெளிவாக்கிடும் அந்த ஞானத்தின் நிலையைக் காத்திடவே இதை உபதேசிப்பது.

உங்களை அறியாமலேயே பதியச் செய்கின்றோம்.

பதிவானதை மீண்டும் எண்ணும் போது உங்களை அறியாமலே பல அற்புதங்கள் நடக்கும். தீமைகளை நீக்கிடும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானியின் உணர்வை நுகரும்படி செய்கிறோம். மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்கின்றோம்.

உங்களை அறியாது நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும் சிறு திரையை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களின் நல்ல குணங்களுக்குள் ஆழமாக இணைக்கச் செய்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் நினைவு கொண்டால் ஒவ்வொரு நொடியிலும் உங்கள் நல்ல குணங்களை நீங்களே தெளிவாக்கிக் கொண்டுவர முடியும்.

அவ்வாறு நீங்கள் தெளிவாக்கிக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் இது முழுமை பெற்றால் சந்திரன் எப்படி பூரண நிலாவாகின்றதோ அதைப் போல இந்த உடலிலுள்ள உணர்வுகள் அனைத்தும் அந்த ஒளியின் சிகரமாக மாறும்.

ஒளியாக மாறிய பின் இந்த உடலை விட்டுச் சென்ற பின் இந்த உயிராத்மா பிறவியில்லா பெரு நிலைகள் அடையும்.
1.அத்தகைய நிலை பெறச் செய்வதற்கும்
2.இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை அகற்றிடவும்
3.தீமையற்ற செயலாக நம் உடலுக்குள் வளர்த்திடவும்
4.நம் எண்ணத்தால் நம்மைக் காத்துக கொள்வதற்கும் தான் இதை உபதேசிப்பது.

இப்போது பதிவு செய்ததை நீங்கள் ஒவ்வொரு நொடியிலேயும் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற நினைவினைச் செலுத்தினாலே போதும்…!

Leave a Reply