நம் உயிரே சொர்க்கவாசல்

gateway to heaven

நம் உயிரே சொர்க்கவாசல்

 

நமது வாழ்க்கையில் எத்தனையோ பேருக்கு நாம் உதவி செய்கின்றோம். உதவி செய்தாலும் அவர்கள் தீமைகளை எல்லாம் கேட்டுணர்ந்த பின் தான் அந்த நன்மைகள் செய்கின்றோம்.

ஆனாலும் நம்மால் நன்மைகள் பெற்றோர் அந்த நன்மையை மறந்து நமக்கே தீமை செய்யும் நிலைகள் வரும் போது நாம் என்ன நினைக்கின்றோம்…?

1.இப்படி எல்லாம் அவர்களுக்கு உதவி செய்தேனே…
2.என்னை இப்படித் துன்புறுத்துகின்றார்களே…! என்று தான் எண்ணுவோம்
3.மீண்டும் மீண்டும் எண்ணி அதையே பிடிவாதமாகப் பிடித்து நமக்குள் வளர்ப்போம்.

ஆனால் இப்படி அவன் செயலை எண்ணி நமக்குள் உருவாக்கப்படும் பொழுது
1.அவன் செய்யும் தீமையின் உணர்வே நமக்குள் வந்து
2.நம் உடலுக்குள்ளும் தீமைகளாக விளைந்து விடுகின்றது என்பதனை நாம் மறந்துவிட்டோம்.

அவன் தீமை செய்கின்றான்…! என்று முதலில் உணர்கின்றோம்.

இருந்தாலும் அவன் இப்படிச் செய்கின்றான் என்று தொடர் வரிசையில் அவன் செயலை நாம் நுகரப்படும்போது அவன் உணர்வு நமக்குள் ஆகி தீமையின் அணுக்களாக உருவாகி நம் உடலையே நலியச் செய்து விடுகின்றது என்பதனைத் தெளிவாக்குகின்றது நமது சாஸ்திரம்.

இதனை மாற்ற வேண்டும் என்றால் நம் கண்ணின் நினைவை வானை நோக்கி எண்ணி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நம் உயிரை வேண்டி உணர்வினை நம் உடலுக்குள் பரப்ப வேண்டும்.

பல கோடிச் சரீரங்களைக் கடந்து தான் மனிதனாக இன்று வந்துள்ளோம். தீமையை அகற்றும் சக்தியாக மனித உடலை உருவாக்கிய உயிரை நாம் மதித்து நடக்கத் தெரிய வேண்டும்.

1.நம் உயிரை மதிக்கத் தவறினால்
2.நுகர்ந்த உணர்வு கொண்டு இந்த உடல் தான் நமக்குச் சொந்தம் என்ற நிலையில் வாழ்ந்தால்
3.அந்தந்த சந்தர்ப்பத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை எல்லாம் உயிர் உடலாக்கி
4.வேதனை உணர்வாக நம்மை நரகலோகத்திற்கே அழைத்துச் செல்லும்.
5.உடல் பற்றே மிஞ்சும்… இந்த நல்ல மனித உடலை இழக்கச் செய்யும்
6.மனிதனல்லாத உடலாக மாற்றியமைத்துவிடும் நமது உயிர்.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் எடுத்து வளர்த்து… அருள் ஒளியின் சுடராக நாம் மாறினால் நமது உயிரே சொர்க்கவாசலாக அமைகின்றது.

எதைக் கூர்மையாக எண்ணி வளர்த்தோமோ அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து சொர்க்கலோகம் அடைகின்றோம்.

Leave a Reply