என்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்

guru spiritual wishes

என்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்

 

இங்கு வெளியிடப்பட்டுள்ள அருள் ஞான நூல்களை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போது உங்கள் வாழ்க்கையில் மனம் சோர்வடைகின்றதோ அப்போது அதை எடுத்துப் படித்தால் அந்தச் சோர்வின் தன்மையை அது மாற்றி அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்களை அழைத்துச் செல்லும்.

ஆகவே இதை ஒவ்வொருவரும் தலையாய கடமையாக வைத்து அதைப் படியுங்கள். படித்ததை நீங்கள் மீண்டும் நினைவு கொண்டால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1.நான் (ஞானகுரு) ஒரு பங்கு தான் வளர்ந்திருக்கின்றேன்
2.என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு உயர்ந்தவர்களாக முடியும்.
3.அருளானந்தத்தைப் பெறக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்.
4.அனைவருக்கும் அருளானந்தத்தைக் கொடுக்கும் உயர்ந்த நிலைகள் நீங்கள் பெறலாம்.

சாமிக்கு மட்டும் ஏதோ சக்தி இருந்து பெற்றதில்லை…! என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு அதிகமாக அந்த அருள் சக்தியைப் பெறலாம். இதன் வழி நீங்கள் பின்பற்றிப் பாருங்கள்.

நீங்கள் எந்த அளவுக்கு உயர்கின்றீர்களோ உங்களிடமிருந்து அந்த ஆனந்தமான உணர்வை நானும் பெறுகின்றேன். இதைப் போல பிறருக்கு நீங்கள் போதித்து அவர்கள் வளர்ச்சி அடையும்போது அதைக் கண்டு நீங்களும் ஆனந்தப்படுங்கள்.

இணைந்து வாழும் நிலையும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் நாம் அனைவரும் பெறுகின்றோம். நீங்கள் எல்லோரும் உயர வேண்டும் என்ற கருத்தில்தான் இதை உபதேசித்து அந்த உயர்ந்த உண்மையின் உணர்வை நீங்கள் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன்.

நீங்கள் எந்த அளவுக்கு இதிலே வளர்ச்சி பெறுகின்றீர்களோ அந்த அளவுக்கு எனக்கு ஆனந்தம் வரும்.

ஒரு வித்தினை ஊன்றியபின் அது சீராக முளைத்து நல்ல பலன் கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்…? சந்தோஷம் என்ற நிலை வரும்.

ஒரு வித்தினை ஊன்றி அது சரியாக முளைக்காவிட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும்… சோர்வடைந்துவிடும்…!

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானத்தைப் போதித்து அருள் உணர்வுகள் உங்களில் வளர வேண்டும். இந்த வாழ்க்கையில் துன்பங்களை அகற்றிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும். பேரானந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்றுதான் எனது தியானமே.

இதைக் கேட்டுணர்ந்தோர் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் வலு கொண்டு துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெருக்குங்கள் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுங்கள். அதைப் போல பேரானந்தத்தைப் பெருக்கும் நிலையை கூட்டுங்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய தீமைகளை அகற்ற உதவும். உங்கள் வாழ்க்கையில் பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் வளர்வதைக் கண்டால் எனக்கு சந்தோஷம். அதே போல் நீங்கள் உங்களுடன் அணுகி வருவோருக்கு உங்கள் நோயெல்லாம் போய்விடும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொல்லி அதன் மூலம் அவர்கள் சந்தோஷப்படும்போது உங்களுக்கும் சந்தோஷம் வருகின்றது.

ஆகையினால் இந்தத் தியானத்தைச் செய்வோர் பிறருடைய நிலைகளைக் கண்டு “உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று கேட்க வேண்டாம்.

உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு…
1.உங்கள் நோய் ஓடிப் போகும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
2.உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் தொழில் லாபகரமாக இருக்கும் என்ற இந்த வாக்கினைக் கொடுங்கள்.

உங்கள் வாக்கு அது ஒரு ஞான வித்தாகி அவர்கள் நினைவு கொண்டால் நிச்சயம் அவர்கள் நலம் ஆவார்கள். ஒருவருக்கொருவர் இப்படிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சாதாரணமாக… ஒருவர் “தான் படும் துன்பத்தைச் சொன்னால்” அதை நாம் கேட்டபின் அந்தத் துன்ப நிலையே நமக்குள்ளும் விளைகின்றது.

இதைப் போல் பேரின்பம் பெற வேண்டுமென்று உங்களுக்குள் அருள் ஞான வித்தை யாம் ஊன்றிய பின் இதன் உணர்வை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

ஒவ்வொருவரும் அதிகாலையில் கூட்டுக் குடும்ப தியானம் இருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பெருக்குங்கள். எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்.

Leave a Reply