அமாவாசை தினத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ancestors wishes

அமாவாசை தினத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய ஒவ்வொரு வழியிலும் உள்ள உண்மையினை அறியாமல் நாம் அவற்றை குடும்பங்களில் வந்த குடும்பச் சடங்கு… சாங்கியம்… என்று வழிப்படுத்தி விட்டோம்.

1.அதன் நிலையில் மாறுபடும் பொழுது மனச் சஞ்சலம் கொண்டு
2.நாம் தெய்வக் குற்றம் செய்து விட்டோம்… பாவத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற பயந்த நிலையில்
3.இன்றும் பல குடும்பங்களில் பல நிலைகள் நடக்கின்றன.

பக்தி நிலை வளர்வதற்காக நம் முன்னோர்கள் பல வழிகளில் அவர்களின் சந்ததியார் வர வேண்டுமென்பதற்காகக் காட்டிச் சென்ற வழிதான் அந்தப் பல வழிகளும்.

1.அமாவாசை அன்று அவரவர்களின் முன்னோர்களை நினைத்து வணங்குவது
2.அமாவாசையில் வைத்தியம் செய்து கொண்டால் நற்பயன் அடையலாம்
3.அமாவாசையன்று எந்த நற்காரியங்களுக்கும் நல்ல நாள்
4.அமாவாசையன்று சேமித்து வைத்த தானியத்தைச் சூரியனின் ஒளி படும்படி வைத்தால் பல நாட்கள் அவற்றில் பூச்சி புழுக்கள் அண்டா
5.அமாவாசையன்று தொழில்களுக்குச் செல்லலாகாது என்றெல்லாம்
6.பல நிலைகளை நமக்கு உணர்த்திச் சென்றார்கள் நம் முன்னோர்கள்..

அமாவாசையின் நிலையென்ன…?

அன்று நமக்கு இப்பூமியின் மேல் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் அனைத்தும் அப்படியே வந்து தாக்குகின்றன. தாக்கும் நிலை கொண்டு இப்பூமியும் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

அமாவாசையன்று கடல் பொங்குகின்றது என்கின்றோம். கடலும் பொங்குகிறது. அமாவாசையன்று மட்டும் கடல் நீர் அதிகரிப்பதன் நிலையென்ன…?

இப்பூமித்தாய் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையில் அதிசக்தி வெளிப்படுத்துகிறது. கடல் நீர் எப்படி பொங்குகிறதோ அதைப் போலத்தான் ஜீவராசிகளின் நிலையும் தாவரங்களின் நிலையும் பனிமலையின் நிலையும் எரிமலையின் நிலையும் மற்றுமுள்ள பல இவ்வுலகில் இப்பூமியிலிருந்து இப்பூமித்தாய் வளர்க்கும் அனைத்து ஜீவ நிலை கொண்ட யாவுமே அமாவாசை அன்று சூரியனிலிருந்து கிடைக்கும் சக்தியின் மாற்றத்தினால் இந்நிலை பெறுகின்றது.

மனிதர்களுக்கு அமாவாசையன்று உடல் கனம் தெரியும். ஒரு வித சோர்வும் என்றும் இல்லாத நிலையில் சிறு தளர்ச்சியும் ஏற்படும்.

நாம் அன்று சுவாசிக்கும் காற்றில் கனமான அணு நிலை கொண்ட சூரியனிலிருந்து வெளிப்படும் சக்தியின் துரிதத்தினால் அக்காற்றை நாம் சுவாசிப்பதினால் நம் உடல் நிலையில் மாற்றம் தெரிந்திடும்.

1.ஆரோக்கியமுடன் வாழ்பவர்க்கே இந்நிலை ஏற்படும் பொழுது
2.நலிவுற்றோரின் நிலைக்கு அவர்கள் எடுக்கும் சுவாசம் கனம் பெறுவதால்
3.அவர்களின் உடல் நிலைக்கு முதலில் இருந்த நிலைக்கும் அவ்வமாவாசை நாளுக்கும் முன்னேற்றத்தை விட நலிவுத் ன்மை கூடிவிடுகின்றது.

நம் முன்னோர்கள் அதிக நலிவுற்றோர்களைக் காணும் பொழுது அமாவாசை தாண்ட வேண்டும் என்பதின் நிலையும் இதுதான்.

நலிவுற்ற நிலையில்… இக்கனமான சுவாச நிலையை நலிவுற்றோர் ஈர்த்து சுவாசிப்பது கடினமாவதினால்தான் இந்நிலை நடக்கின்றது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் இவ்வமாவாசையன்று அவர்கள் மன நிலை அதிகமாக மாறுபடும் நிலைக்கு வருகின்றது.

அமாவாசையன்று சந்திரனில் இருந்து நாம் பெறும் பல நிலைகள் நமக்குக் கிடைக்காமல் போகின்றது. நமக்கு எப்பொழுதும் பாதுகாப்பு போல் உள்ள சந்திரனின் அன்பான அரவணைப்பு இல்லாததினால் இந்நிலை ஏற்படுகின்றது.

விண் சென்ற முன்னோரை பக்தி கொண்டு நாம் வணங்கும் பொழுது நம் எண்ணம் அனைத்தும் அவர்களின்பால் பக்தி கொண்டு செல்வதினால் அவர்கள் காக்கும் நிலைக்கு நம்மை நாம் நிலைப்படுத்துகின்றோம்.

அப்பொழுது நமக்கு அமாவாசையன்று கனமான சுவாசத்தை ஈர்த்துச் சுவாசித்தாலும் அந்நிலையில் அவர்களின் ஆசி பெறுவதினால் இந்நிலையில் சோர்வு நமக்குத் தெரிவதில்லை.

அமாவாசையன்று நம் முன்னோர் விரதம் இருக்கும் நிலை ஏற்படுத்தியது எந்த நிலையில்…?

நாம் எடுக்கும் சுவாசத்திலேயே அமாவாசை தினத்தில் பல சக்திகள் அதிகரித்து ஏற்பதினால் இவ்வுடல் நிலைக்கு அன்று பசியின் நிலையும் குறைவு.
1.அதன் நிலையை அறிந்துதான் நம் முன்னோர்கள் “விரதம்” என்னும் பக்தி நிலையை
2.அந்நிலையில் காட்டி நமக்கு வழிப்படுத்தித் தந்தார்கள்.

எந்த ஒரு சிறிய நிலையையும் நம் முன்னோர்கள் நமக்குப் பக்தி நிலையிலேயேதான் உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

ஆண்டவன் என்ற பக்தி நிலை ஒன்றினால் மட்டும்தான்… என்றும் இவ்வுலக மக்களின் நிலையை நல்வழிப்படுத்திட முடியும் என்ற உண்மை நிலையில் தான்… பல நிலைகள் கொண்ட செயல்களையெல்லாம் நமக்கு உணர்த்திச் சென்றார்கள். பல ஏடு நிலைகளில் எழுதி வைத்தும் சென்றுள்ளார்கள்.

எந்நிலையிலும் நம்பிக்கை என்ற ஆண்டவனை நம்பினால் அனைத்து சக்திகளின் ஆண்டவனையே ஆண்டவனின் அருளையே அந்நம்பிக்கையில் நாம் பெறலாம்.

நல்லோரின் வாயிலிருந்து வரும் சொற்கள் எல்லாமே ஆண்டவனின் நாமச் சொற்கள் என்ற நம்பிக்கையுடன்
1.நாம் நம் முன்னோரையும் நம் பெரியோர்களின் வாழ்த்தையும்
2.நம்பிக்கையுடன் ஆண்டவனின் சொற்களாக நம்பி வரம் பெற்றால் நடப்பவை யாவும் நல் நிலைகளாக நடந்திடும்.

நம் முன்னோரையும்.. நம்மில் பெரியோரையும்… அவர்கள் ஆசி பெற நாம் வணங்குவது ஆண்டவனின் அருள் சொற்களை அவர்களின் நிலையில் இருந்து பெறுகின்றோம் என்ற நம்பிக்கையில் நலம் பெறப் “பெரியோர்களின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்கள்…!”

Leave a Reply