ஆவியின் பிம்பமான அனைத்து பிம்பமுமே ஆண்டவன் என்று கண்டு ஆண்டவா ஆண்டவா…! என்று வணங்கிட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

Nature is God

ஆவியின் பிம்பமான அனைத்து பிம்பமுமே ஆண்டவன் என்று கண்டு ஆண்டவா ஆண்டவா…! என்று வணங்கிட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்கு மட்டும் மற்ற உடலில் ஏறினால் வெளி வரும் சக்தியில்லேயே…! மற்ற முனிவர்களும் சித்தர்களும் ரிஷிகள் மட்டும் தன் சக்தியை எந்நிலையில் செயல்படுத்துகிறார்கள்…? என்று இதைப் படிப்பவர்கள் எண்ணலாம்.

இந்நிலையை அறிவதற்கு முன் இவ்வுலகின் நிலையை முதலில் அறிந்திடுவோம். நேற்றைய பாடத்தில் அனைத்துமே ஆவி தான் என்று உணர்த்தினேன்.

எந்நிலை என்று அறிந்திட எண்ணுவீர்.

இவ்வுலகம் எப்படித் தோன்றியது…? மற்ற மண்டலங்கள் எப்படித் தோன்றின…? இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதே அளவுடன் தான் உள்ளனவா…? இவ்வுலகின் நிலையென்ன…? என்று அறிந்திட எண்ணுவீர்.

ஆவியான உலகங்கள் தான் அனைத்து உலகங்களுமே. உலக ஆரம்ப காலத்தில் உலகம் எப்படி தோன்றியது…? இக்காற்றுடன் இக்காற்றே ஆவிதான்.

காற்றுடன் கலந்துள்ள நீரும்… சகல சக்திகளும்… கலந்துள்ள இவ்வாவி
1.காற்றில் கலந்துள்ள அமிலங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து திடப்பொருளாகி
2.அத்திடப் பொருளில் உள்ள காந்த சக்தியினால் பல அமிலத் தன்மைகள் உள்ள திட பிம்பங்களைத் தன்னுள் ஈர்த்து
3.அதுவே சுழலும் வேகத்தில் இக்காற்றினில் கலந்துள்ள சகல அமில சத்தையும் தன்னுள் ஈர்த்து
4.ஒரே கோளமாக ஆனது தான் இப்பூமியின் நிலையும்.
5.இதைப்போலத்தான் மற்ற பூமிகளின் நிலையும்.
6.சிறுகச் சிறுக ஈர்த்துத்தான் இவ்வுலகமே ஆனதப்பா.

இக்காற்று மண்டல ஆவியில் கலந்துள்ள அமிலத் தன்மையினால் வளர்ந்தது தான் இப்பூமி.

எந்த நிலைகொண்ட அமிலத்தை ஈர்த்து இப்பூமி வளர்ச்சி பெற்றதோ அதே நிலைகொண்ட அமிலத்தைத்தான் இன்றும் ஈர்த்து வளர்கிறது.

இவ்வளரும் நிலை இந்நிலை கொண்டேதான் வளர்ந்து கொண்டே உள்ளனவா…? வளர்வதற்கு சக்தியான அமிலம் எங்கிருந்து வந்து கொண்டே உள்ளது என்றும் எண்ணுவீர்.

இவ்வுலகம் எந்நிலை கொண்டு வளர்ந்ததோ அந்த நிலை கொண்ட சுவாச நிலைகொண்ட உயிர் அணுக்கள்தான் இன்று இவ்வுலகிலுள்ள உயிரணுக்களின் தன்மையெல்லாம்.

இவ்வுயிரணுக்களின் சுவாச நிலையும் இவ்வுலக சுவாச நிலையும் ஒன்று போல்தான் இருந்திடும். இவ்வுலகின் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்க்கின்றன.

இவ்வுலகம் எப்படி ஆவியான அமிலத்தைத் தன்னுள் ஈர்த்து வளர்த்து கொண்டதுவோ அதைப்போல் இவ்வுலகம் வெளிப்படுத்தும் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்த்து அதற்குகந்த நிலையில் அதன் தன்மை உள்ளது.

இவ்வுலகத்தின் சுவாச நிலை ஈர்த்து எடுக்கும் அளவு அதன் ஆவியையும் வெளிப்படுத்துகிறது. அதனால் இவ்வுலகம் வளர்ந்து கொண்டே உள்ளதுவா…? குறைந்து உள்ளதுவா…? என்று எண்ணுவீர்.

இவ்வுலகின் காலங்கள் மாறுபடும் பொழுது இவ்வுலகின் தன்மையிலும் மாறுபாடு நடக்கின்றது. அந்நிலையில் அதன் ஈர்ப்புத் தன்மையில் மாறும் நிலையில் உள்ளது. அந்நிலையில்தான் இவ்வுலகத்தின் அளவு நிலையும் மாறுபடும் தன்மை பெறுகிறது.

இவ்வுலகம் மாறுபடும் நாளில் தான் எல்லா மண்டலங்களுமே மாறுபடும் தன்மை பெறுகின்றது. அந்நிலையில் ஏற்படும் ஆவியின் சக்தி நிலைகொண்டு ஒவ்வொரு மண்டலங்களிலும் மாறுபடும் தன்மைகள் வருகின்றன.

அந்நிலையை சூட்சுமத்தில் வருபவர்கள் அறிந்திடலாம்.

1.இவ்வுலகம் யாரும் கண்டு எடுத்து வாழ்வதற்கு வந்த உலகமல்ல.
2.ஆவியினால் அவதரித்த உலகம்.
3.ஆவியின் உயிரணுக்களை ஈன்றெடுத்த உலகம்.
4.ஆவியின் ஆவியான அனைத்துமே கலந்துள்ள உலகம்.
5.நீ அருந்தும் நீரும் ஆவிதான் நெருப்பும் ஆவிதான்.
6.நீ இன்று செல்வமாக்கக் கருதும் இப்பூமியின் பொக்கிஷங்கள் அனைத்துமே ஆவிதான்.
7.ஆவியின் ஆவிதானப்பா அவ்வாண்டவனே.

ஆவி உலகம் என்பதனை நாம் இன்று பேய் பிசாசு ரூபத்தில் இனி எண்ணிலடாகாதப்பா.

இம்மனித உடலில் இருந்து பிரிந்த ஆத்மாக்கள் தன் ஆசையை செயல்படுத்திடத்தான் இவ்வுலகையே இவ்வுலக மக்களின் எண்ணத்தையே மாசுபடுத்தி இருக்கிறது.

ஆசையின் நிலையிலிருந்து உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் வழிவழியாய் வந்ததின் கொடுமையின் கொடுமைதானப்பா இன்று உடலுடன் வாழ்பவர்களின் நிலையெல்லாம்…!

இதிலிருந்து மீள்வதற்காக முனிவர்கள் சித்தர்கள் ரிஷிகள் இவர்களின் நிலையை விளக்கிடுவேன்.

ஆண்டவா… ஆண்டவா…
ஆண்டவா…. ஆண்டவா…!

ஆண்டவன் எங்குள்ளான்…?
ஆண்டவன் எங்குள்ளான்…?
என்றே அறிந்திட… “ஆண்டவனை”
எங்கும் எதிலும் காண்பதற்கே
என்னையே நான் ஆண்டவனாக்க…
என்னில் அவ் ஆண்டவனை
என்றும் கண்டிடவே….!

என்னுள்ளே அன்பையும்
சத்தியத்தையும் தர்மத்தையும்
அஹிம்சையையும் ஏற்றிடவே

ஏற்றிய வழியினிலே
ஆண்டவனைக் கண்டிடவே
ஆண்டவா… ஆண்டவா…!
என்றே நம் ஆத்ம
ஜோதியை வணங்கிடுவோம்

அகிலத்திலே அகிலமாக
ஆவியின் ஆவியாக
ஆவியின் சக்தியே
ஆவியே ஆண்டவனே…!

ஆவியின் பிம்பமான
அனைத்து பிம்பமுமே
ஆண்டவன் என்று கண்டு
ஆண்டவா ஆண்டவா…!
என்றே வணங்கிடுவோம்…!

Leave a Reply