கலி புருஷனின் உண்மையான வலுவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

kali purusha

கலி புருஷனின் உண்மையான வலுவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நடக்கின்றோம் கேட்கின்றோம் பேசுகின்றோம் சுவைக்கின்றோம் பார்க்கின்றோம் நுகர்கின்றோம்..!

இந்த ஒவ்வொரு செயல் நிலையிலும் “ஞான வளர்ச்சி” காலமுடன் ஒன்றியதாகச் சத்து பெற்றுள்ள இத்தருணத்தை இன்றைய மனிதச் செயலின் அடுத்த நிலையான பறக்கும் நிலைக்கு மனிதனின் உருவக உயர்வு நிலை வந்திருக்க வேண்டும்.

கல்வித் தரத்தில் எப்படி முதல் வகுப்பு… இர்ண்டாம் வகுப்பு… என்று கல்வித் தரத்தை (தேர்ச்சி பெற்றதை) உயர்த்துகின்றார்களோ அதைப் போன்று
ஒலி…
ஒளி…
நீர்…
தாவரம்…
ஜீவ சக்தி… (உயிரினங்கள்)
ஞான சக்தி (தற்போதைய மனிதன்)
இத்தொடரில் அடுத்த நிலையான தெய்வ வளர்ப்பு சக்தியை மனிதன் பெற வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பூமி பெற்ற எல்லாச் சக்தியுமே இந்த மனிதக் கோளத்தில் தொடர்பு கொண்டுள்ளது.

அத்தகைய வளர்ப்பின் வலு கூடிய பிறகு தான் (மனிதனின்) எண்ணத்தின் பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் முதிர்வு நிலை பெறுகின்றது.

பூமியின் வளர்ச்சியில் முதிர்வு கொண்ட வளர்ப்பு தான் மனிதர்கள். மனிதனுக்கு அடுத்த நிலையான…
1.தெய்வ நிலை பெறக்கூடிய பூமியின் சத்து வித்தாக வளர்ச்சிப்படுத்த
2.பூமி சேமிக்கும் தன் வம்சத் தொடரின் தொடர்கள் தானப்பா
3.மனிதன் பெற்ற உயர் ஞான பகுத்தறிவு வித்து நிலை என்பது.

ஆனால் தன் உடல் கோளத்தில் உணரும் உயர் ஞானத்தை இக்கலி தந்த காலத்தில் வளர்க்கத் தெரியாமல்… கலிக்கு அடுத்த கல்கியின் உயர்ந்த சத்தாகப் பெறவல்ல உயர்ந்த சந்தர்ப்பத்தை… கல்கி யுகமாக்கிப் “பறக்கும் சக்தியை…” இந்தப் பூமி வளர்ப்பில் வளர்ந்த வித்துக்கள் (மனிதர்கள்) உயர்வு நிலைப்படுத்த முயற்சிக்கவில்லை.

“கலி” என்றாலே பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு என்று உணராமல்
1.இக்கலியையே செயற்கைக் கலியாக்கி
2.உன்னத வளர்ச்சியில் சுழன்ற இந்தப் பூமியின் சத்தையே
3.இன்றைய மனித ஞானம் அழிக்கும் நிலைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளது.

ஆக.. கல்கியுகத் தொடர்பை இந்தக் கலியில் இங்கே இந்தப் பூமியில் வளர்க்க முடியா விட்டாலும் நம் சூரியக் குடும்பத் தொடர்பில் (மற்றொரு கோளத்தில்) நாம் எடுக்கும் ஜெபத்தால் கல்கி யுகத்தை வளர்க்க முடியும்.

Leave a Reply