கேட்க விரும்புவோருக்கு இந்த ஞான வழியினை எடுத்துச் சொல்லி வழி காட்டுங்கள்…

soul-protection-method and relief

கேட்க விரும்புவோருக்கு இந்த ஞான வழியினை எடுத்துச் சொல்லி வழி காட்டுங்கள்… 

 

விஞ்ஞான உலகிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்குண்டான நிலைகள் இதைக் கேட்போர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இதை உபதேசிக்கின்றோம்.

யாம் உபதேசிக்கும் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் விளையச் செய்தால்
1.சில அற்புதங்களை உங்களால் செயல்படுத்த முடியும்
2.அதனால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி வரும்.

நீங்கள் சொல்லி… ஒருவருக்கு நன்றாகி விட்டால் உடனே சந்தோஷம் வந்து
1.உங்களுக்குள் நல்லதை உருவாக்கும் அந்த அணுக்கள் விளையும்.
2.அந்த நிலைக்கு ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்.

நீங்கள் தயாரானால் தான் நீங்கள் விடும் அந்த உயர்ந்த மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்திலே படரும். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த உயர்ந்த நிலைகளை வெளிப்படுத்தும் பொழுது இந்தக் காற்றலைகளிலே அபரிதமாகப் பரவும்.

அந்த உணர்வுகள்… நல்லதை எண்ணி ஏங்கி எடுப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

ஒருவருக்கு இந்த அருள் ஞானத்தைச் சொல்லி முறைப்படி எடுங்கள் என்று சொல்லும் பொழுது உங்களுக்குள் சமைத்திருந்தால் தான் அங்கே கிடைக்கும். ஏனென்றால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் “மிகக் கடினமானது…!”

அந்த ஞானிகளின் உணர்வை நாம் எடுத்து நமக்குள் சமைத்து “மற்றவர்கள் பெறவேண்டும்” என்று அதைப் பதித்து இந்த உணர்வை நம்முடன் தொடர்பு கொண்டவர்களின் நிலையில் இதன் வழி எடுக்க வைக்க வேண்டும். இப்படி ஒரு பழக்கங்கள் வர வேண்டும்.

இப்படி நாம் பழகி விட்டால் நாளை வரும் நஞ்சிலிருந்து எல்லோரும் மீளலாம். சகோதர உணர்வை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

1.குறைகளைக் கூறும் நிலையை அடியோடு விட்டுப் பழக வேண்டும். அதை நீக்கிடல் வேண்டும்
2.குறைகளை யாரும் வேண்டும் என்று செய்வதில்லை.
3.சந்தர்ப்பத்தால் அவர்களுக்குள் நுகர்ந்த உணர்வுகள் தான் அவர்களைத் திசை திருப்புகின்றது.

அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்… அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும்… அருளாற்றல் அவர்கள் பெறவேண்டும்…. மெய்ப் பொருள் காணும் நிலைகள் வளர வேண்டும் என்று நாம் உடனுக்குடன் அதைப் பக்குவப்படுத்தி அருள் உணர்வைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியில்… இப்படிச் சொல்வது நமக்கு நல்லது… நம்மை அறியாது இயக்கும் நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்…! என்ற உணர்வினை உயர்ந்த உணர்வுடன் எண்ணிச் சொல்லுங்கள்.

1.இதை எல்லாம் கேட்போருக்குச் சொல்லுங்கள்.
2.கேட்காதவருக்குச் சொல்ல வேண்டாம்…!
3.இவன் என்னமோ “பெரிய மனிதன்” மாதிரி நமக்குப் புத்தி சொல்ல வந்து விட்டான்…! என்று இதிலேயும் ஒரு உணர்வு வந்துவிடும்.

அந்த உயர்ந்த உணர்வுகளை மனதில் எண்ணி நாம் வளர்த்துக் கொண்டால் அவர்கள் பகைமை உணர்வு… அவர்கள் செய்யும் குறைகளையோ சொல்லவிடாது நமக்குள் தடுக்கும்.

இல்லை என்றால் அந்தக் குறையின் உணர்வு பதிவாகிவிடும். ஒரு நான்கு தடவை சொன்னால் குறையை வளர்த்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து அந்த அணுக்கள் சேரச் சேர நம்மையும் குறை கொண்டவராக வளர்க்கும்.

அந்தக் குறை உணர்வுகள் நமக்குள் அதிகமாகிவிட்டால் கண்டிப்பாக நோயின் தன்மை வளரத் தொடங்கும். இதைப் போன்ற விபத்துகளிலிருந்து எல்லாம் நாம் தப்புதல் வேண்டும்.

1.ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் குறுகிய காலமே வாழ்கின்றோம்
2.இதற்குள் நிறைவான வாழ்க்கையாக… அகண்ட அண்டத்தில் என்றுமே ஏகாந்த நிலைகள் கொண்டு வளர்தல் வேண்டும்.

இதற்காக வேண்டித்தான்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஆலயத்தில் நற்பண்புகளை வளர்க்கச் செய்து எல்லோரும் நலம் பெறவேண்டும் என்ற உயர்ந்த பண்புகளை ஞானிகள் நம்மை வளர்க்கச் செய்தனர்.

மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை… சந்தர்ப்பத்தால் அந்த நல்ல குணங்கள் மடிவதிலிருந்து மீள நாம் உயர்ந்த சக்திகளை அந்த ஆலயங்களில் எண்ணி எடுக்கும்படி வழிப்படுத்தினார்கள்.

ஆனால் இன்று ஆலயத்திற்குச் செல்பவர்கள்
1.தனக்குத் தான் கேட்கின்றார்கள்…!
2.மற்றவர்களை எண்ணும்போது எனக்குத் தொல்லை செய்தான் என்று வேதனையைத் தான் எடுக்கின்றார்கள்
3.ஆலயத்தில் ஞானிகள் காட்டிய நற்பண்புகளை உணரவில்லை.

இந்த ஆலயம் வருவோர் எல்லாம் நலம் பெறவேண்டும் என்று ஞானிகள் வகுத்துக் கொடுத்த நல்ல நிலைகளை மாற்றிவிட்டோம். அன்றைய அரசர்கள் காட்டிய நிலையைத் தான் இன்று கடைப்பிடித்துக் கொண்டுள்ளோம்.

அரசனுக்காகப் போராடிய உணர்வுகளும் அந்த மந்திரங்களைச் சொல்லி அந்த உணர்வின் தன்மை நாம் வளர்க்கப்படும் பொழுது இறந்த பின் அந்த மந்திரத்தால் அவர்கள் நம்மைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

இப்படி… முந்தி அந்த அரசர்கள் கைவல்யம் ஆனோம். இன்று அதன் வழி வந்த மந்திரவாதிகள் கையிலே சிக்குகின்றோம். அவன் ஆட்டிப்படைக்கும் பொம்மையாகத்தான் மாறுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் ஒவ்வொருவரும் மீள்தல் வேண்டும்.

Leave a Reply