ஓ…ம்… என்று தனியாகச் சொல்லலாமா…? பெண்கள் ஓ..ம் சொல்லலாமா…?

Om - ohm

ஓ…ம்… என்று தனியாகச் சொல்லலாமா…? பெண்கள் ஓ..ம் சொல்லலாமா…?

கேள்வி:
ஓ…ம் என்று தனியாகச் சொல்லலாமா…? அல்லது ஓ..ம் ஈஸ்வரா… என்று தான் சொல்ல வேண்டுமா…? பெண்கள் ஓ…ம் சொல்லலாமா…?

விளக்கம்;-
நாம் ஒவ்வொருவருமே புதிதாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் எழுப்பக்கூடிய ஒலி “ஓ…” அல்லது “ஓ..ஹோ….!” அல்லது “ஓ… அப்படியா..!” இது தான்.

அந்த மொழிக்காரராக இருந்தாலும் இந்த “ஓ..” கண்டிப்பாக வரும்.

அதே போல் அடுத்தவர்கள் சொல்லக்கூடியதை நாம் ஆமோதித்துக் கொண்டே வந்தால் என்று அவர்கள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல “ம்..” “ம்..” என்ற ஒலியை எழுப்பத்தான் செய்வோம்.

இந்த “ம்…” சொல்லவில்லை என்றால் நம்மிடம் பேசுபவருக்குச் சிரமமாகி நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்… நீ என்ன “ம்..” என்று கூடச் சொல்ல மாட்டேன் என்கிறாய்…? என்று கண்டிப்பாகக் கேட்பார்கள். அந்த உணர்ச்சி அப்படிக் கேட்க வைக்கும்.

ஏனென்றால் நமது சாஸ்திர விதிகளின்படி, “ஓ…ம்” என்பது பிரணவம், நமது உயிர் நமக்குள் ஜீவனாக இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குப் பெயர் “ஓ…”.

1.“ஓ…” என்றால் ஜீவன் என்று பெயர்.
2.உயிர் நமக்குள் ஜீவனாக இயங்குகின்றது என்று பொருள்.
3.இந்த உயிர் எதையெல்லாம் கவருகின்றதோ அவையனைத்தும் “ம்…” என்று நமது உடலாக அமைந்துவிடுகின்றது.

(ஆனால் மற்றவர்கள் சொல்வதை நம்மால் ஏற்க முடியவில்லை என்றால் “ம்…” என்று சொல்வதற்குப் பதில் உ..ம்.. அது எப்படி…? என்போம் அல்லது ஊஹும்ம்ம்… கிடையாது…! என்போம்)

எப்படிப் பார்த்தாலும் இந்த ஓ.. என்றும் ம்… என்றும் ஒலி வந்து கொண்டே தான் இருக்கும் அதனால் தான் எல்லாக் கோவில்களிலும் எல்லாத் தெய்வத்திற்கு முன்னாடியும் ஓ..ம் போட்டுக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஓ…ம் சக்தி…! என்று கூட நாம் புரிந்து கொள்ள பச்சையாகவே காட்டுகின்றார்கள். ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம்…!

ஓம் சக்தி என்றால் பராசக்தி.. மார்யம்மன்.. காளியம்மன் என்று நினைவு எங்கேங்கேயோ போகின்றது. ஆக மொத்தம் ஓ…ம் என்றால்
1.அது மிகப் பெரிய இயக்கச் சக்தி..
2.பேராற்றல் மிக்க ஜீவனூட்டும் சக்தி
3.நம் உயிரின் மூல சக்தி (மின்சாரம்)

ஓ..ம் என்று சொன்னாலே அது நம் உயிரின் இயக்கச் சக்தியைக் கூட்டும்.

கோபம் வந்தால் என்ன சொல்கிறோம்…? ஒரு கடினமான சாமானைத் தூக்க வேண்டும் என்றால் என்ன சொல்கிறோம்..? ஒரு முக்கியமான சிந்தனையாக இருந்தால் என்ன சொல்கிறோம்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

இந்த நேரங்களில் எல்லாம் நம்முடைய தொண்டையிலிருந்து இந்த “ஓங்கார ஒலி” கண்டிப்பாக வரும். அதனால் தான் இதை “மந்திரம்” என்று சொன்னார்கள்.

ஆனால் மந்திரம் என்றாலே நாம் எதை எதையோ தான் நினைக்கின்றோம்.
1.அதற்குள் மறைந்துள்ள சக்தியையும்.. சூட்சமத்தையும் காட்டத்தான் அதை மந்திரம் (ஒலி) என்றார்கள் ஞானிகள்.
2.ஆக மொத்தம் ஒலியை எழுப்புகின்றோம். மூலத்தை விட்டுவிட்டோம்.

ரோஜாவில் இருக்கும் முக்கியமானதே அதனுடைய மணம் தான் அந்த மணத்தை நுகரும் பொழுது தான் “ஆஹா..” என்று சொல்கிறோம். மணம் வரவில்லை என்றால் ஆஹா என்ற சொல் வருமா…?

அது போல் தான் ஓ…ம் என்று சொன்னால்
1.நம் உயிரை…
2.நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் ஈசனை
3.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனை எண்ண வேண்டும்
4.அவனுடன் நாம் கலந்துறவாட வேண்டும்
5.அவனுடன் ஐக்கியமாக வேண்டும்
6.அவன் வேறல்ல… நாம் வேறல்ல…! என்ற நிலையில் பரிபூரணமாக நினைக்க வேண்டும்
7.அப்படிப்பட்ட ஒரு தெய்வீக உறவு நமக்கும் நம் உயிருக்கும் வருவதற்குத்தான் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று சொல்லச் சொன்னார்கள் ஞானிகள்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தீட்டாக இருந்தாலும் பாபம் செய்தவனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் ஓ..ம் ஈஸ்வரா என்று உயிரை நினைக்கத்தான் வேண்டும். அப்பொழுது தான் அந்தத் தெய்வீக சக்தியைப் பெற முடியும்.

ஆகவே… நாம் எண்ணியது எந்தக் குணமோ அந்தக் குணத்தின் தன்மை நமது உடலானாலும் அந்த குணத்திற்கு குருவாக இருப்பது உயிர். நாம் எண்ணியதை இயக்கி அந்த உணர்வின் சக்தியை உடலாக மாற்றும் நிலைதான் ஈஸ்வரன் என்பது.

என்னை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைக்கு “ஈஸ்வரா…” இந்த உடலிலுள்ள குணங்கள் அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது “குருதேவா…”

ஆகவே, நாம் ஒம் ஈஸ்வரா குருதேவா என்று நமது உயிரைச் சொல்கின்றோம்.

Leave a Reply