குடும்பத்தார் படும் சிரமங்களைக் காட்டி அந்தப் பாசம் எப்படி இயக்குகிறது..! என்று இமயமலையில் வைத்துக் காட்டினார் குரு

Remote spiritual power

குடும்பத்தார் படும் சிரமங்களைக் காட்டி அந்தப் பாசம் எப்படி இயக்குகிறது..! என்று இமயமலையில் வைத்துக் காட்டினார் குரு 

குருநாதர் காட்டிய வழியில் ஒவ்வொரு நாளும் நான் கால் நடையாகச் செல்லும் பொழுது மக்கள் கஷ்டப்படுவதையும் குடும்பத்தில் கஷ்டப்படுவதையும் பார்க்கின்றேன்.

ஒரு சமயம் இமயமலைக்குப் போகும்படி சொன்னார் குருநாதர். வெறும் கோவணத் துணியுடன் தான் அங்கே போகச் சொன்னார்.

அங்கே குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக குருநாதர் சொன்ன உணர்வுகளை மட்டும் நான் எடுக்க வேண்டும். அப்பொழுது உடல் உஷ்ணமாகும். எனக்கு அந்தக் குளிர் தெரியாது.

இப்படி இருக்கும் பொழுது என்னுடைய கடைசிப் பையன் சிறியவன் மீது பாசமாக இருந்ததால்… அவன் நினைவு எனக்கு அங்கே வருகின்றது.

அவனைப் பற்றிய நினைவு சென்றவுடனே இங்கே குளிர் தாக்கி உடல் எல்லாம் கிடு…கிடு… என்று நடுங்க ஆரம்பித்துவிட்டது.

1.பையன் மேல் ஆசை வைத்துப் பார்த்தேன்.
2.அவனைக் காக்க வேண்டும் என்று ஏதாவது உபாயம் செய்ய வேண்டும் என்பதற்காக எண்ணிப் பார்த்தேன்.

ஏனென்றால் என் பையன் வீட்டிற்கு வெளியே தெருவில் ஒரு ஓரமாக இரத்த இரத்தமாக வெளியே போய்க் கொண்டிருக்கின்றான். நானா..நானா.. (நைனா) என்று என்னை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றான்.

“அந்தக் குரல்” எனக்கு இங்கே இமயமலையில் கேட்கின்றது. அப்பொழுது குருநாதர் சொன்னதை என்னால் எடுக்க முடியவில்லை.

உடல் கிர்…! என்று இதயம் இரைய ஆரம்பித்துவிட்டது. அப்பொழுது தான் குருநாதர் உணர்த்துகின்றார்.

1.நீ உன் பாசத்தை அங்கே செலுத்துகின்றாய்
2.நீ இங்கே இப்பொழுது மடிந்து விட்டால் உன்னை யார் காப்பாற்றுவது..?
3.காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நீ செல்லப்படும் பொழுது
4.உன் ஆன்மா பையன் உடலுக்குள் தான் புகும்.
5.அவனுக்குள் போய் நீ வேதனையைத்தான் உருவாக்க முடியுமே தவிர நல்லதைச் செய்ய முடியாது.

இப்பொழுது நீ எப்படிச் சிரமப்படுகின்றாயோ… இதே உணர்வின் தன்மை அவனுக்குள் இயக்கப்பட்டு… அவனும் சாமியாராக ரோடு ரோடாகச் சுற்ற வேண்டும் என்கிறார் குருநாதர்.

ஆகவே நீ என்ன செய்ய வேண்டும் என்பதை அங்கே தெளிவாக்குகின்றார். பின் குருநாதர் சொன்ன உணர்வை எடுத்துக் கொண்ட பின் என் குழந்தையின் உடல் நலமாக ஆனது.

அங்கே என்னுடைய வீட்டில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். விறகுக் கடையில் வியாபாரம் சரியாக இல்லை. சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மோசமான சூழ்நிலையாக இருக்கின்றது.

இதை எல்லாம் பார்த்துப் பதட்டம் அடையப் போகும் பொழுது தான் எனக்கு மேலே சொன்ன அந்த நிலை எல்லாமே வந்தது.

பிறகு குருநாதர் சொன்ன காலக்கெடு முடிந்ததும் இமயமலையிலிருந்து இருந்து ஜோஸ்மெட் என்ற் இடத்திற்கு வந்தேன். போஸ்ட் ஆபீஸ் மூலமாக என்னுடைய புகைப்படத்தையும் ஒரு பத்து ரூபாயும் கவருக்குள் போட்டு அனுப்பினேன். எனக்கு மணியார்டர் செய்யத் தெரியவில்லை.

ரூபாய் வெளியே தெரியாமல்தான் காகிதத்திற்குள் வைத்து அனுப்பினேன். பணம் அனுப்பியிருக்கின்றேன் என்று கடிதமும் எழுதி இருந்தேன்.

இது அங்கே பதினைந்து நாள் கழித்து இவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்தப் பதினைந்து நாளுக்குள் அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல…!

என் மனைவி தன் தாலியையும் அடமானம் வைத்துப் பிள்ளைகளைக்குச் சாப்பாடு போட்டிருக்கின்றது. ஒரு பத்து ரூபாய் வந்ததும் கடவுளைப் பார்த்த மாதிரி ஆர்வம் வருகின்றது.

ஆனால் கவரில் போட்ட அந்தப் பத்து ரூபாயை இடைவேளியிலே யாரோ எடுத்து விட்டார்கள்.

கடிதம் இருக்கிறது… என் படம் இருக்கிறது.. ஆனால் ரூபாயைக் காணோம்…! பிரிக்கும் பொழுது “கீழே விழுந்து விட்டதோ…!” என்று அங்கே தேடு…தேடு… என்று தேடுகின்றார்கள். இதையும் நான் அங்கிருந்து பார்க்கின்றேன்.

இது எல்லாம் அனுபவரீதியில் குருநாதர் எனக்குக் காட்டியது. ஒவ்வொரு குடும்பத்திலும் எதன் எதன் நிலைகள் எப்படி எல்லாம் சிரமப்படுகின்றார்கள் என்பதை அப்படியே படம் பிடித்தது போல் காட்டுகின்றார்.

ஆக…
1.பிறருக்கும் எமக்கும் இந்த உணர்வின் தன்மை கொண்டு தெளிவாக்குகின்றார்
2.இப்படித்தான் நான் உண்மைகளைத் தெரிந்து கொண்டேன்
3.வரும் இன்னல்களிலிருந்து தப்பும் உபாயங்களையும் சக்திகளையும் அனுபவபூர்வமாக அறிந்தேன்.

உங்களுக்கும் அந்த அரும் பெரும் சக்திகளைக் கிடைக்கச் செய்வதற்காகத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

நீங்களும் இதைப் போல் அந்த அருள் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அவர் செய்வாரா…? இவர் செய்வாரா..? என்று யாரையோ எண்ணுவதற்கு மாறாக
2.உங்களுக்குள் வரும் இன்னல்களை உங்கள் எண்ணத்தாலேயே நீக்கிக் கொள்வதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றேன்.

ஆகவே யாம் அனுபவத்தால் பெற்ற இந்த உண்மையின் உணர்வுகளையும் அந்த அருள் மகரிஷிகளின் அருளையும் நீங்கள் பெற்று இந்த உபதேசத்தின் வாயிலாக கேட்டுணர்ந்த உணர்வுகளையும் அணுக் கருவாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.உங்கள் பார்வையால் பிறருடைய துன்பங்கள் மாய வேண்டும்
2.உங்களுக்குள் துன்பங்கள் சேராவண்ணம் தடைப்படுத்தும் அந்தச் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான்
3.குருநாதர் மூலம் பெற்ற அனுபவங்களை எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

Leave a Reply