செல்வச் செழிப்புடன் மகிழ்ந்து வாழச் செய்யும் தியானம்

 

நீங்கள் ஒரு தொழிலோ, வியாபாரமோ, விவசாயமோ செய்பவர்களாக இருக்கலாம்.

அவ்வாறு நீங்கள் செய்து கொண்டிருக்கும் நிலைகளில் சலிப்பையோ சோர்வையோ வெளிப்படுத்துகின்றீர்கள் என்றால் அந்தச் சலிப்பான சோர்வான உணர்வுகள் தொழில் செய்யும் இடங்களில் பதிவாகின்றன.

உங்கள் தொழிலில் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களை அந்தச் சலிப்பான சோர்வான உணர்வுகள் தாக்கி அவர்கள் வாங்கவிருக்கும் பொருள்களில் அதிருப்தியை உண்டாக்கி உங்களுடைய தொழிலைப் பாதிப்படையச் செய்துவிடுகின்றன.

நீங்கள் வெளிப்படுத்தும் சலிப்பான சோர்வான உணர்வுகள் எவ்வாறு பாதிப்படையச் செய்கின்றது என்பதை அனுபவபூர்வமாக உணரவேண்டும் என்று விரும்பினால் அதை ஒரு சிறு சோதனையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்

,நாம் வெளிப்படுத்தும் உணர்வலைகளின் இயக்கங்கள்

நான்கு பூந்தொட்டிகளை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரே இனத்தைச் சேர்ந்த நான்கை தொட்டிக்கு ஒன்றாக பதியுங்கள். பிறகு அவைகளை ஒரே சூழலில் வைத்துப் பராமரிக்கப்ப்டும் பொழுது வெவ்வேறு உணர்வுகளுடன் அதை அணுகுங்கள்.

அதாவது ஒரு செடியைப் பார்க்கும் பொழுது அது செழித்து வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் நீரை ஊற்றுங்கள். மற்ற செடிகளை அணுகும் பொழுது சலிப்பு, வேதனை, வெறுப்பு போன்ற எண்ணங்களுடன் நீரை ஊற்றிப் பாருங்கள்.

செழிப்பின் உணர்வு கொண்டு நீரை ஊற்றிய செடி செழிப்பாக வளர்வதைக் காணலாம். அதே சமயத்தில் சலிப்பு, வேதனை வெறுப்பு கொண்டு பார்த்த செடிகள் வாடி வதங்குவதையும் காணலாம்.

இவ்வாறு வெவ்வேறு விதமான உணர்வுகளுடன் அந்தச் செடிகளைப் பராமரிக்கப்படும் பொழுது அந்தச் செடிகளின் வெவ்வேறு விதமான வளர்ச்சி செழிப்பு அவைகளை வைத்து வெவ்வேறு விதமான உணர்வின் செயல்களை அறிய முடியும்.

தாவர இனத்தின் உணர்வுகள் நமக்குள் உண்டு அதனின் மணத்தின் உணர்வு நமக்குள் எண்ணத்தைத் தூண்டுகின்றது. அந்தக் குணத்தின் சிறப்பு எதுவோ அது நமக்குள் உண்டு.

உயர்ந்த குணங்களை எண்ணி எந்தத் தாவர இனமோ அதனுடன் நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இணைக்கப்பட்டு உணர்வின் அலைகளை கண் ஒளிகளால் அதன் மேல் பாய்ச்சப்படும் பொழுது இந்த நினைவலைகளின் எண்ணங்கள் அதனுடன் இரண்டறக் கலந்து அந்தத் தாவரங்கள் செழித்து ஓங்குவதைக் காணலாம்.

இதைப் போன்று சங்கடமும் சலிப்பும் இருந்தால் நீங்கள் விளை நிலங்களுக்குச் சென்றாலே உங்கள் உணர்வலைகள் கண் பார்வை பட்டபின் செழித்த தாவர இனங்களாக இருந்தாலும் உடனுக்குடன் உணர்வலைகள் சோர்வடைந்தது போன்றே அங்கே விவசாயமும் குன்றிவிடும்.

நீங்கள் சோர்வான உணர்வலைகள் கொண்டு எந்தத் தொழில் செய்து வந்தாலும் அந்தச் சோர்வு உங்களுடைய வாடிக்கையாளர்களையும் சோர்வடையச் செய்து அவர் எந்தப் பொருளை வாங்க வந்தாரோ அந்தப் பொருள்களைக் காண்பிக்கப்படும் பொழுது அந்தப் பொருள் அவர்களைத் திருப்தியடையச் செய்யாது அதன் மீது அதிருப்தியை உண்டாக்கிவிடுகின்றது.

மேலும் இது தொடர்ந்து நடந்ததென்றால் உங்கள் வியாபாரம் மந்தமாகிவிடும். இதிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலை ஆலயமாக மதித்து உங்கள் உடலிலுள்ள நல்ல உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்துடன் கலக்கச் செய்து அறிந்தோ அறியாமலோ செய்த தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவ்வாறு எண்ணி இந்த மனித வாழ்க்கையில் முழுமையடைந்து உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரம் அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை எடுக்க வேண்டும்.

உங்கள் நல்ல உணர்வில் கலந்த சோர்வு வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகளை நீக்குவதற்கு கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிடுங்கள்.

பயிரினங்களை வாழ வைக்க விவசாயிகள் செய்ய வேண்டிய முறை

ஆத்ம சுத்தி செய்து கொண்டபின் உங்கள் விவாசாய நிலங்களை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

விவாசாய நிலங்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அதில் பயிரிடப்பட்டுள்ள பயிரினங்களில் அறியாது கலந்துள்ள தீய அணுக்கள் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் பயிரினங்களை வாழ வைக்கும் அணுக்கள் அங்கே உருப் பெற்று அந்த அணுக்களின் மலங்களால் பயிரினங்கள் செழிந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைக் கூட்டி பல முறை சுவாசித்து அந்த அலைகளை அங்கே பாய்ச்சுங்கள்.

உங்கள் விளை நிலத்திற்குச் சென்று இந்த முறைப்படி செய்து தியானித்து அந்த அலைகளை அங்கே படரச் செய்யுங்கள்.

அந்த உணர்வுடன் உங்கள் பார்வையைப் பயிரினங்கள் அனைத்திலும் செலுத்துங்கள். பயிரினங்கள் செழித்து ஓங்கி வளர்வதைக் காணலாம்.

பயிரிடப்பட்ட விளைச்சலை உணவாக உட்கொள்ளும் அனைவரும் ஆரோக்கிய நிலை பெறவேண்டும் என்று எண்ணுங்கள். அதைப் பயன்படுத்துபவர்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

மருந்து உதவுவதைக் காட்டிலும் உங்கள் எண்ண அலைகள் பயிர்களில் படர்ந்து தீமைகள் விளைய வைக்கும் அணுக்களைத் துரத்திவிடும்.

உங்கள் பயிர்கள் செழிக்கும். உங்கள் மனமும் செழிக்கும். உங்கள் மனம் செழிப்பானால் உங்கள் குடும்பமும் செழிக்கும்.

 

வியாபாரம் செய்பவர்கள் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை


துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தொழில்கள் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. எங்கள் பொருள்கள் முழுவதிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் பொருள்களைப் பயன்படுத்துவோர் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும். அவர்கள் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

தொழிலாளர்களுக்கு ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை

எங்களிடம் வேலை செய்யும் தொழிலாளிகள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அவர்கள் அனைவரும் மன வளம் மன பலம் பெறவேண்டும், சகோதர உணர்வுடன் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.

எங்கள் தொழிலாளிகள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அவர்களும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

கொடுக்கல் வாங்கலில் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை

உங்கள் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் ஏதாவது தடை இருந்தால் அதை நினைவில் கொள்ளாதீர்கள். எவரால் அந்தத் தடைகள் இருக்கின்றதோ முன்னதாகக் கூறியபடி ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

பின்பு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து அவர்கள் தொழில்கள் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அவர்கள் வியாபாரம் பெருகி செல்வம் பெருகி எங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் வரவும் அதைச் சீராகக் கொடுக்கும் திறன் அவர்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இதைப் போல் செய்தால் அவர்களுக்கு நல்ல நிலை ஏற்படும். பணமும் தடையில்லாது வரும். அனுபவத்தில் பாருங்கள்.

பணி புரிபவர்கள் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. எங்களுக்கு நல்ல எண்ணமும், எங்களைப் பார்ப்பவர்களுக்கு எங்கள் மீது நல்ல எண்ணமும் எங்கள் வழி நல்ல வழியாகவும் இருந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஐந்து நிமிடம் ஏங்கித் தியானியுங்கள்.

அதற்குப் பின் உங்கள் அலுவல்களையோ வேலைகளையோ தொடங்குங்கள். எல்லாமே சீராகும்.

எந்தத் துறையாக இருந்தாலும். எந்த வேலை செய்தாலும், அந்தந்தத் துறை சம்பந்தப்பட்ட பொருள்கள், இயந்திரங்கள், உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் படர செய்யுங்கள். வாடிக்கையாளர்களும் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

அனைத்திலுமே இப்படி துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைச் சம்பந்தப்படுத்தி இணைத்துக் கொண்டு வந்தோம் என்றால் அதனால் ஏற்படும் அருள் விளைவு எல்லோருக்கும் நலமாகும்.

 

நலம் பெறுக வளம் பெறுக

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெறுக.

Leave a Reply