காசியில் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது நடந்த நிகழ்ச்சி

Power and wisdom

காசியில் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது நடந்த நிகழ்ச்சி

 

என்னைக் (ஞானகுரு) காசிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் சொன்னார் குருநாதர். பார்த்தால் மோட்சம் கொடுக்கும் இடம் என்று சொல்வார்கள். ஆனால் நரகத்தைச் சிருஷ்டிக்கும் இடம் என்று சொல்லலாம்.

கங்கையில் காலையில் பார்த்தோம் என்றால் தலை ஒன்று கால் ஒன்று இதெல்லாம் பாதையில் இழுத்துக் கிடக்கும்.

நாற்பத்து எட்டு நாள் அங்கே இருக்க வேண்டும் என்றும் அங்கு நடப்பதை எல்லாம் நீ பார்க்க வேண்டும் என்றும் குருநாதர் சொல்லி விட்டார்.

அங்கே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் என்ன என்கிற பொழுது காசிக்கு வருபவர்கள் “இறந்தவர்களை மோட்சத்திற்கு அனுப்ப வேண்டும்..!” என்று பிண்டங்களை வைத்துச் சாங்கியம் செய்கிறார்கள்.

அங்கே பூராம் பண்டாக்கள் இருக்கிறார்கள்… எல்லாம் தாதாக்கள் தான். உதவி செய்பவர்கள் ஈசனுக்கு நைவைத்தியம் செய்யக் கூடியவர்கள்

ஈசன் பிறந்த இடம் என்கிற வகையில் எல்லோருக்கும் மோட்சத்தைக் கொடுக்கின்றான்…! என்று சொல்லி எல்லாம் நடக்கிறது.

காசி விஸ்வநாதன் கோவிலுக்கு முன்னாடி கீழே சுரங்கம் மாதிரிப் போகிறது (UNDER GROUND). நான் போன நேரத்தில் உள்ளே பார்த்தால் பிரேதம் மிதந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றது. தண்ணீர் அதிலே அடித்து மேலே பொங்கிக் கொண்டு வருகிறது.

பார்த்தால் இன்னொரு மடத்திலிருந்து பிரேதத்தைத் தண்ணீரில் தள்ளி விட்டிருக்கின்றார்கள். இங்கே வந்து பாதையில் அடைத்துக் கிடக்கின்றது. அப்புறம் அதை எடுக்கின்றார்கள்.

இதே மாதிரி மடங்களில் இருந்தாலும் அங்கே தள்ளிய பின் கங்கைக்கு வந்து விடுகின்றது. இப்படி எல்லாம் தவறுகள் செய்யக்கூடிய சொர்க்க பூமியாக இருக்கின்றது.

இரவிலே என்ன செய்கிறார்கள்…? என்றால் சிவன் உடுக்கையை வைத்து ஆடினான் என்று சொல்லி ஊ…ம் ஊ….ம் ஊ…ம்..! என்று சிவ பூஜை செய்கிறார்கள்,

உடுக்கையை அடித்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சுகின்றார்கள். அவர்கள் என்னென்ன செய்தார்கள்..? என்ற வகையில் அனைத்தும் தெரிந்து கொண்டேன்.

கடைசியில் என்ன செய்கிறார்கள்…?

தண்ணீரை எடுத்து வந்து சிவலிங்கத்தில் ஊற்றிய பின் பதார்த்தங்களைக் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். அது எல்லாம் பின்னாடி மறுபடியும் கடைக்கு வியாபாரத்திற்குப் போகிறது,

அதே மாதிரி சிவனுக்கு ஆராதனைக்காகப் போடப்படும் பூக்களும் மறுபடியும் கடைக்கு வியாபாரத்திற்குப் போகிறது. இப்படி எல்லாம் அங்கே தவறுகள் நடக்கின்றது.

சிவன் எப்படி இருக்கின்றான் என்று தெரியாது. சொர்க்கத்திற்குப் பதில் நரகமே நடக்கின்றது. பல விபரீத நிலைகள் நடக்கிறது.

நான் (ஞானகுரு) முதலிலே இரயிலில் இங்கிருந்து செல்லப்படும் பொழுது காசியில் காலடி எடுத்து வைத்தவுடனே தமிழிலேயே பேசுகிறான் சாப்பிட வாருங்கள்…! வெறும் எட்டணா தான்…! என்கிறான்.

பரவாயில்லையே… இந்த ஊரில் எட்டணாவிற்குச் சாப்பாடு போடுகிறானே…! என்று நினைத்தேன். ஊரெல்லாம் சுற்றிக் காட்ட என்று என் கூட இரயிலில் ஒருவர் வந்திருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து அங்கே போனோம்.

சாப்பிட ஆரம்பித்தோம். டால் (பருப்பு) என்று எல்லாம் வைத்தான். பில்லைக் கொடுத்தான். சாப்பாடு எட்டணா…! காய் பருப்பு எல்லாம் வைத்தது என்று சொல்லி முப்பது நாற்பது ரூபாய் என்று பில் போட்டான்,

கடைசியில் பில் முந்நூறு ரூபாய். “எட்டணா சாப்பாடு” என்று சொல்லி இப்படிப் போட்டான். எனக்கு முந்நூறு கூட வந்த ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் பில். நான் முழித்துப் பார்த்தேன்.

அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் இதே மாதிரி ஒருவன் பில் அதிகம்…! என்று கேட்கிறான். அவனை அடிக்கிறான்.

நீ சாப்பிடுவதற்கு முன்னாடி அல்லவா கேட்க வேண்டும்… சாப்பிட்டு விட்டுக் கேட்கிறாயே…! என்று சொல்லி அந்த ஓட்டல்காரன் அவனை அடிக்கிறான்.

இதைப் பார்த்ததும் நாம் ஏதாவது கேட்டால் நம்மையும் உதைத்து விடுவான் போல… என்ற எண்ணம் வருகிறது. பேசாமல் உட்ககார்ந்திருந்தேன்.

மற்றவர்கள் எல்லாம் பயப்படுகின்றார்கள்.. கேட்ட காசை அப்படி அப்பபடியே கொடுக்கின்றார்கள்.

நான் வந்தேன்… இந்தக் காசை வைத்துக் கொள்..! என்றேன். உன் சாப்பாட்டைப் பார்… எடுத்துச் சாப்பிட்டுப் பார் என்றேன்.

கசக்கிறது…! என்றான்.

எல்லாச் சாப்பாட்டையும் சாப்பிட்டுப் பார்…! என்றேன்.

கசக்கிறது…! என்றான்.

“கசப்பாக இருப்பதற்கு” நான் எவ்வளவு ரூபாய் கொடுப்பது…! என்று கேட்டேன். அது போக அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் “எல்லாம் கசக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

எல்லோரும் கசக்கிறது… கசக்கிறது… என்று சொன்னவுடனே இந்தக் காசை வைத்துக் கொள் நான் போகிறேன்…! என்று சொல்லிக் கிளம்பினேன்.

பாபுஜி மாப் கரோஜி…! பாபுஜி மாப் கரோஜி…! (மன்னிப்பு) என்று தன் காதுகளைப் பிடித்துச் சொல்லிக் கொண்டே என் பின்னாடியே வருகின்றான்.

விஸ்வநாதனிடம் போய்ச் சொல்…! நான் அவனைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன் அவன் தான் உனக்கு ஏதோ செய்திருக்கின்றான் ஆகையால் அவனைப் போய்க் கேட்டுக் கொள்..! என்றேன்.

நான் போகும் பொழுதே அவன் (அந்த ஓட்டல்காரன்) பின்னாடியே வந்தான். அங்கே இருப்பவன் என்ன சொல்கிறான்…?

உஸ்ஸ்க்…! உன் கழுத்தை அறுத்துப் போடுவான்… அவன் பின்னாடி போகாதே… என்கிறான்.

கங்கை எங்கே இருக்கிறது…? என்று கேட்டேன். சொன்னான்…! அங்கே போய்க் குளித்தேன். குளித்த பின்னாடி விஸ்வநாதன் எங்கே இருக்கிறான்…? என்றேன்.

இந்தப் பக்கம் இருக்கிறது என்று சந்துக்குள் கூட்டிக் கொண்டு போனான். பாபுஜி மாப் கரோஜி…! என்று சொல்லிக் கொண்டே வந்தான். கசப்பாக இருப்பதை எல்லாம் மாற்றிக் கொடுங்கள்…! என்று கேட்டுக் கொண்டே வருகின்றான்.

நீ வா… விஸ்வநாதனிடம் போய்க் கேட்கலாம்…! என்றேன். அங்கே போனதும் நீ “பேடா” வாங்கிக் கொண்டு வா..! என்றேன்.

பேடாவை விஸ்வநாதனுக்குக் கொடு… நீ சாப்பிட்டுப் பார்… எப்பொழுது இனிப்பு வருகிறதோ அப்பொழுது நீ போகலாம்…! என்றேன்.

அங்கே ஓட்டலில் ஏமாற்றிக் காசு எவ்வளவு வாங்கினானோ அதுவரையிலும் பேடாவை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டே இருந்தான்.

போட்டால் அந்தச் சாமியார் வாங்க மாட்டேன் என்கிறான். இது எதற்குடா வம்பு..? என்று தூக்கித் தூக்கி எறிகிறான். அங்கே இருக்கும் பண்டாக்கள் இப்படிச் செய்கிறார்கள்.

திருப்பித் திருப்பி திருப்பி வைத்துக் கடைசியில் நன்றாக ஆனது. சரி விஸ்வநாதன் மன்னிப்புக் கொடுத்தான். நீ இனிமேல் யாரிடமும் ஏமாற்றிக் காசு வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டுப் போ….! என்றேன்.

யாரையாவது நீ உதைத்துத் தப்பான வழிகளில் காசு சம்பாரித்தாய் என்றால் உன் வியாபாரமே போய்விடும்..! என்றேன்.

இனிமேல் இந்த மாதிரிச் செய்ய மாட்டேன்…! என்று சொல்லி விட்டுப் போய்விட்டான். இது காசியில் நடந்த சமாச்சாரம்.

Leave a Reply