ஆண்டவனின் சக்தி பெற்றே ஒவ்வொரு உயிரணுக்களும் உதிக்கின்றது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Eswara sakthi power.jpg

ஆண்டவனின் சக்தி பெற்றே ஒவ்வொரு உயிரணுக்களும் உதிக்கின்றது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இந்த உலகினிலே ஜீவன் பெற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம்
1.தான் ஜீவன் பெற்ற நிலையை அறிந்து
2.ஜீவாதார உண்மையுடன் ஜீவித்து – இந்த ஜீவனை
3.நம் உடலில் ஜீவன் உள்ள பொழுதே நாம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
4.பல வழிகளையும் வழி முறைகளையும் மகரிஷிகள் நமக்களித்தார்கள்.
5.அந்த வழிகளை எல்லாம்… முறைகளை எல்லாம்… பல வழிகளில் மாற்றி விட்டார்கள்.
6.அவரவர்களுக்கு ஒரு மதம் என்ற நிலயில் ஒவ்வொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன் சுற்றத்தார்களுக்கும் ஒவ்வொரு நிலையையும் ஏற்படுத்திக் கொண்டு பல சடங்குகள்… பல சாஸ்திரங்கள்… என்று பார்த்து நம் மூதாதையர்கள் காலத்திலிருந்தே நம் குடும்பத்தில் இந்நிலையில் தான் எல்லா நிலைகளும் நடந்து வருகின்றன…! என்று உண்டாக்கி விட்டார்கள்.

ஒவ்வொரு உண்மை நிலைகளையும் தன் தன் நிலைக்கேற்பத் தன் மதத்தின் வாயிலாக அதையே ஒரு வழக்கமாக்கிக் கொண்டு அதனால் வரும் எண்ணச் சிதறல்களைப் பற்றி எண்ணாமல்
1.ஒவ்வொருவரும் மதம் என்ற ரூபத்தையே கொண்டு வந்து
2.அதனுள் சிக்கிக் கொண்டு மதத்தையே “மதமாக்கி” வாழ்கிறார்கள்.

மதத்தினால் வந்திடும் நன்மைகள் என்னப்பா…? பல மதங்களை ஏற்படுத்திக் கொண்டு அம்மதங்களின் வாயிலாக ஆண்டவனின் சக்தியையே பிரித்துக் கொண்டார்கள்.
1.இவர்கள் பிரித்த நிலைக்கு வருவதல்ல அந்த ஆண்டவனின் சக்தி.
2.அச்சக்தியின் நிலை எல்லோருக்கும் பொதுவானதே.

அன்று ஆண்ட அரசர்கள் தன் நிலைக்கு அடிபணியப் பல மந்திரிகளையும்… அந்த மந்திரிகளுக்கு ஊழியம் செய்ய அதற்கொத்த சேவகர்களையும்.. இப்படியெல்லாம் ஏற்படுத்தித் தன் ஆட்சி நிலை நிலைத்திருக்கத் தன் நிலைக்கு உகந்தபடி அவரகள் செய்த நிலையில் இருந்து தான் “ஜாதி மதங்களே” இன்றைய உலகில் பெருகி உலவி வருகின்றன.

1.அவ் ஈசனின் சக்தியில் இஜ்ஜீவ ஆத்மாக்களை ஜாதி மதங்களாகப் பிரித்து அனுப்பவில்லையப்பா…!
2.எல்லா உயிரணுக்களும் அந்த ஆண்டவனின் சக்தி பெற்று ஒரே நிலையில் தான் உதிக்கின்றன.

இந்நிலை இருக்கும் பொழுது ஜாதி மத வேறுபாடுகளை இவர்கள் உண்டு பண்ணி தன் தன் நிலைக்கு ஏற்ப தான் வாழ… தன் சுற்றத்தார் வாழ… என்ற நிலையை எல்லாம் ஏற்படுத்தி மனித எண்ணத்தையே பெரும் கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்களப்பா…!

1.எல்லோரும் ஓர் மதம்…
2.எல்லோரும் ஓர் குலம்…! என்ற
3.உண்மை நிலையை உணர்ந்து வாழ்பவர்கள் அரிதிலும் அரிது.

எந்த நிலை கொண்டு எப்படிப் புகட்டினாலும் உபதேசத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அரிதாக உள்ளார்களப்பா..!

1.அடுத்தவன் நிலையைக் கண்டு ஏங்குபவனும்
2.அடுத்தவனின் புகழுக்காக வாழ்பவனும் தான் இன்றைய நாட்டில் மிகுந்து உள்ளனரப்பா…!

தன் எண்ணத்தையும் சுவாசத்தையும் தான் பெற்ற ஜீவ சக்தியின் நிலையையும் பற்றி இனியும் புரிந்திடாமல்… அந்த நிலையிலேயே வாழ்ந்திடாமல்…
1.நம் எண்ணத்தைக் கொண்டு தான்..
2.நாம் விடும் சுவாச நிலையிலிருந்து தான்..
3.நம் நிலைகள் எல்லாமே நடக்கின்றன…! என்று உணர வேண்டுமப்பா…!

எண்ணத்தையும் சுவாசத்தையும் புரிந்து கொண்டு வாழ்பவர்கள் “அப்புருஷோத்தம ஜெபத்தை” ஏற்ற புனித ஆத்மாவாக என்றுமே இருந்திடலாம்.

நாம் ஈர்க்கும் ஒவ்வொரு சுவாச அலையும் நம் உடலுக்கும்.. நம் உணர்விற்கும்… நம் உயிர் நிலைக்கும்.. எப்படியெல்லாம் எந்தெந்த நிலை ஏற்படுத்தி நம் உடலும்.. உணர்வும்… உயிரும்… எந்த நிலையில் உள்ளன..? என்று நாம் ஜெபத்திலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

இன்றிருக்கும் ஜாதி மதத்திற்கு அடிமையாகாமல்… வழி முறையில் உள்ள பல சடங்குகளுக்கும் சாங்கியங்களுக்கும் நாம் அடிமையாகாமல்…
1.நம் எண்ணத்தையும் சுவாசத்தையும்
2.அவ்வீசனின் சக்திக்கே அடிபணியச் செய்தல் வேண்டுமப்பா…!

Leave a Reply