ஒரு தெய்வத்தை வணங்குபவர் அடுத்த தெய்வத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார்…?

Realization of God-1

ஒரு தெய்வத்தை வணங்குபவர் அடுத்த தெய்வத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார்…?

இராமனைக் கும்பிட்டால் நமக்கு ஒன்றும் கொடுக்க மாட்டான்…. விஷ்ணுவைக் கும்பிட்டால் நமக்கு ஒன்றும் கொடுக்க மாட்டான்…! என்று சிவ தத்துவத்தில் சொல்வதும் சிவனைக் கும்பிட்டால் உனக்குச் சோறு கிடைக்காது..! என்று பதிலுக்கு விஷ்ணு தத்துவத்தைச் சார்ந்தவர்கள் சொல்வதும் இப்படி நமக்குள் இயற்கையின் நிலைகளைத் திருத்தித் தான் வாழ்கின்றோமே தவிர உண்மையின் தன்மையை அறிந்து வாழவில்லை.

ஏனென்றால் காசுக்காக வேண்டிப் பக்தி என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு
1.இந்தத் தெய்வத்தை வணங்கினால்தான் உனக்கு எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டு
2.தூதுவனாக இருந்து காசு வாங்கி அவன் அவன் பிழைப்பதற்குத்தான் ஆகின்றது.
3.ஆண்டவனிடமிருந்து இவன் வரம் வாங்கித் தரப் போகின்றான்…! என்று தவறான பாதையில் சென்று
4.உண்மையின் இயற்கையின் உணர்வுகளை நாம் அறியவிடாது தடைபடுத்தி விட்டனர்… இன்றும் தடைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மதங்கள் என்ற போர்வையில் மதத்தின் நிலைகளில் அரசன் என்றும் அரசனுக்குக் கீழ் பக்தி என்றும் பக்தி என்ற நிலைகளில் அவன் உருவாக்கியதை நாம் உடலுக்குள் சேர்த்து விட்டால் “அதுவே தெய்வம்” என்றும் உருவாக்கப்பட்டு விட்டது.

அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு அந்த உணர்வின் தன்மையை நாம் மீண்டும் எண்ணும் போது “தெய்வம் காக்கின்றது” என்றும் ஆனால் அவர்கள் காட்டிய உணர்வுக்கு மாறாக எடுத்தால் “தெய்வ தண்டனை கிடைக்கும்….!” என்று இப்படி மக்களை அச்சுறுத்திவிட்டனர்.

மக்களுக்கு உண்மை தெரியாது… அறியவிடாது… அன்றைய அரசர்கள் செய்த பிழை இது. இப்படி மதம் என்ற நிலையில் போர் என்ற நிலைகள் வரப்பட்டு உலகம் முழுவதற்குமே மனிதனுக்கு மனிதன் கொன்று குவிக்கும் நிலை தான் வந்தது.

என் மதத்தை காக்க… என் மதத்தைக் காக்க…! என்று போர் முறைகள் தான் வருகிறது. இன்றும் பார்க்கிறோம்.
1.மதத்தின் அடிப்படையில் மக்களை அழிக்கும் உணர்வுகள் தான் விளைகின்றதே தவிர
2.மக்களைக் காக்கும் மதம் எதுவும் இல்லை

விஷ்ணு மதம் சிவ மதம் இராமன் மதம் முருகன் மதம் ஜயப்பன் என்று பக்தியின் நிலைகள் வரப்படும் போது ஜயப்பன் கோவிலுக்குப் போகிறவர்களும் முருகன் கோவிலுக்குப் போகிறவர்களும் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
1.பக்தி என்ற நிலையில் நாம் அஞ்ஞான வாழ்கை வாழ்கின்றோம்.
2.மெய் ஞான உலகை நாம் பெறவில்லை.

இதைப் போல ஒரு சாமியைக் கும்பிடுகிறவர்களும் இது என் சாமி.. இது உன் சாமி…! என்று இனங்களை வைத்து கோயிலில் இருக்கக்கூடிய மாரியம்மனைக் கும்பிட்டாலும் என்னுடைய இடத்தின் பக்கம் அந்தச் சாமி வந்துவிடுமா… பார்க்கலாம்…! என்ற நிலையில் ஒருவருக்கொருவர் தாக்குவதும்
1.அந்த நல்ல உணர்வுகளை எடுக்க முடியாது தடைப்பட்டு
2.மனிதனுக்கு மனிதன் மடியும் நிலையே வருகின்றது.
3.தெய்வம் நம்மைக் காக்கின்றதா… தெய்வத்தை நாம் காக்கின்றோமோ…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மை அது உணர்ச்சியாகச் செயலாக்கப்படும் போது தெய்வம். அந்த உணர்வின் சக்தி நமக்குள் எடுக்கும் போது அது வித்து… “வினை…”

அந்த உணர்வின் சக்தி நமக்குள் வரும் போது உணர்ச்சிகளாக எண்ணமாகத் தோன்றுகிறது. எந்தச் சுவையின் தன்மை வருகிறதோ – சீதா ராமா…!

1.அந்தந்தச் சுவைக்கு ஒப்ப நம் எண்ணத்தின் உணர்ச்சிகள் இயக்குகிறது என்றும்…
2.இயற்கை நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையையும்…
3.தன்னை அறிந்து கொள்வதற்குத் தான் அத்தனை தத்துவங்களையும் ஞானிகள் நமக்குக் கொடுத்தார்கள்.

இன்று மனிதன் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் வைக்கிறார்கள் அல்லவா…! மோட்டாருக்கு ஒரு பெயர்.. T.V.க்கு ஒரு பெயர்.. கம்ப்யூட்டருக்கு ஒரு பெயர்.. பின் அதனுடைய உப பொருட்களுக்கு என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரை வைத்து அதை எல்லாம் இணைத்தால் அது இணங்கி இயக்கும்…! என்று தெளிவாக்குகின்றார்கள் அல்லவா…!

இதைப் போன்று மனிதனின் வாழ்கையில் எதை எப்படி இணைக்க வேண்டும் என்ற நிலைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர்களை வைத்து மனித உடலுக்குப் பின்… விண் செல்லும் மார்க்கங்களைக் காட்டினார்கள்…! அன்றைய மகரிஷிகள்.

Leave a Reply