உயிரே கடவுள் என்று சொல்வதன் காரணம் என்ன…?

Soul is God (2)

உயிரே கடவுள் என்று சொல்வதன் காரணம் என்ன…?

 

(I). ஓ…ம் என்ற நாதமாக எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் “ஆண்டவனாக வணங்குவோம்…!”

ஓ…ம் என்ற நாதம் என்றால் நமது உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது. ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது.
1.நாம் நுகரும் உணர்வுகளை அதே நாதமாக்கி
2.எதை எதை நுகர்கிறோமோ அதனின் நாதமாக அதனின் இசையாக நம்மை இயக்கி
3.நமக்குள் அந்த அணுவாக உருவாக்கி விடுகின்றது… உடலாக மாற்றுகின்றது…!

(II). நற்குணங்களின் உணர்வைச் சுவாசமாக்கி நல்ல மணமாக நம்மை ஆளும் ஆண்டவனுக்கு “ஆராதனை செய்வோம்…!”

நாம் அனைவரும் நலம் பெறவேண்டும் என்றும்… உயர்ந்த பண்புகள் வளர வேண்டும் என்றும்… தெளிந்த மணம் பெற வேண்டும் என்றும்.. மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறவேண்டும் என்றும்… நாம் எண்ணத்தால் எண்ணி “அதைச் சுவாசமாக்க வேண்டும்…!”

1.அப்படி எண்ணும் பொழுது நுகர்ந்த உணர்வுகள் நுகரப்பட்டு உயிரிலே படும் பொழுது,
2.உயிரான ஈசனுக்கு ஆராதனை மட்டுமல்ல… நாம் அபிஷேகமும் செய்கின்றோம்.

(III). நாம் எண்ணும் நல்ல உணர்வை “இறைவனாகத் துதிப்போம்…!”

நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரில் மோதி நமக்குள் கலந்து இறையாகின்றது. இறையான உணர்வுகளின் தொடர் கொண்டு நமது உயிர் அதன் வழி இயக்குகின்றது. ஆகவே நாம் நமக்குள் நல்ல உணர்வுகளையே இறையாக்குவோம்.

(IV). நாம் எண்ணும் நல்ல குணங்களே நம்மைக் காக்கும் “தெய்வமாகத் துதிப்போம்…!”

நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் தெய்வமாக நின்று நல்ல உணர்வுகளையும் நல்ல உணர்ச்சிகளையும் தூண்டி நம்மைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக மலருகின்றது.

1.நாம் எண்ணும் ஒவ்வொரு நல்ல குணத்தையும்
2.நமக்குள் அது நம்மைக் காக்கும் சக்தியாக வருகிறது என்று
3.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் எண்ணி ஏங்கித் தியானிப்போம்.

(V). நன்மைகள் பல செய்யத் “துணிவோம்…!”

நன்மைகள் செய்யத் துணிவு வேண்டும். ஏனென்றால் நாம் பலருக்கு நன்மைகள் செய்தாலும் எதிர்மறையான உணர்வுகளைச் சந்திக்க நேர்ந்தால் துணிவை இழந்து விடுகின்றோம்.

அவ்வாறு அந்தத் துணிவை இழக்காது… “அவர்களுக்கு நன்மை செய்யும் உணர்வுகளையே”நமக்குள் வளர்த்திட வேண்டும் என்பதே இதன் பொருள்.

(VI). நாம் பார்க்கும் அனைவரையும் “மதிப்போம்…!”

ஒவ்வொரு உயிரும் கடவுள்… அந்த உடல் ஆலயம்…! மனிதராக உருவாக்கிய அரும் பெரும் சக்தி… சர்வத்தையும் காத்திடும் அருள் சக்தி கொண்ட உடல் என்ற நிலைகளில் “நாம் அனைவரையும் மதித்தல் வேண்டும்…”

1.மற்றவர்களை நாம் மதித்தால்
2.நமக்குள் இருக்கும் அனைத்து குணங்களையும் நாம் மதித்தவராவோம்.

(VII). உடலைக் கோவில் என “மதிப்போம்…!”

ஒவ்வொரு உடலையும் கோவிலாக மதித்து அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் என்று துதிப்போம். சந்தர்ப்பத்தால் தீய உணர்வுகள் உடலான கோவிலுக்குள் சேர்ந்திருந்தால் “ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும்…!” என்று தான் எண்ண வேண்டும். தீமைகளை எண்ணக் கூடாது.

மேலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அங்கே படர்ந்து அந்த ஆன்மா தூய்மை அடைய வேண்டும் என்று நாம் எண்ணினால்
1.நாம் நுகரும் உணர்வுகள் நமது ஆன்மாவைப் புனிதம் அடையச் செய்கின்றது.
2.நமது உடலான ஆலயம் தூய்மைப் படுத்தப்படுகின்றது.
3.அதன்வழி நமக்குள் மகிழ்ச்சி பெறும் தன்மை உருவாகின்றது.

(VIII). உடலில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் என துதிப்போம்

அதாவது நாம் பிறருடைய நினைவு கொண்டு அந்த உடலை எண்ணும் போது அவர்களுக்குள் எத்தனையோ வகையான நல்ல குணங்கள் உண்டு.

அதை இயக்குவதும் உருவாக்குவதும் அந்த உயிரே கடவுளாக இருக்கின்றது. ஆகவே உடலை ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணுதல் வேண்டும்.

ஒரு மனிதன் கோபமாகப் பேசினாலும் வெறுப்பாகப் பேசினாலும் வேதனையாகப் பேசினாலும் அந்த வேதனை நிலைகளை நாம் எண்ணாதபடி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தில் (உடலில்) படர்ந்து
2.அவர் உடலில் உள்ள வேதனை நீங்கி அருள் ஞானத்தின் சக்தி வளர்ந்து
3.அங்கு மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி விட்டால்
4.அப்பொழுது குறையோ மற்ற நிலைகளையோ அவர்கள் எதைச் செய்தாலும் அதை நாம் நுகராது தடுக்கப்படுகின்றது.
5.நம் உயிரான ஈசனுக்கு நாம் அந்த உயர்ந்த மணங்களைக் கொடுக்கின்றோம்.

ஒருவர் ஏசுவதையோ பேசுவதையோ வேதனைப்படுவதையோ நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகளை நுகரப்படும் போது நம்மை உருவாக்கிய நம்மை ஆளும் ஆண்டவனான உயிருக்கு “நாம் தீமை செய்கிறோம்…!” என்று தான் பொருள்.

ஆகவே
1.ஒவ்வொரு உயிரையும் நாம் நேசித்து
2.அந்த உணர்வின் நல்ல குணங்களை வளர்த்த உயிரை நாம் கடவுளாக மதித்து வந்தால்
3.நம்மை அறியாது வரும் கோபமோ வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ இவை மாற்றிடும் அரும் பெரும் சக்தி
4.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பரிபூரணமாகக் கிடைக்கின்றது.

Leave a Reply