“ஆகாயச் சித்தனின் அருள் பெற வேண்டும்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

siddhar agastyar.jpg

“ஆகாயச் சித்தனின் அருள் பெற வேண்டும்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பிறவிகள் ஏழு என்று கூறுவதே தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்கள், நிலம் வாழ் ஊர்ந்திடும் உயிரினங்கள், உலவிடும் மிருகங்கள், பறக்கும் இனங்கள், மனிதன், தெய்வப் பிறவி..! இவை அனைத்தும் பொதுச் சொல்லாகப் பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்திடும் இயற்கையின் சுதியில் உயிர் தொகைகள் வாழ்ந்திடும் செயலைக் குறிப்பது ஆகும்

1.ஒவ்வொரு உயிரும் இந்த ஏழு பிறவியில் எதிலே பிறப்புக்கு வந்தாலும்
2.அந்தப் பிறவியிலேயே எண்ணிலடங்காத பிறப்புக்கு வந்திடவும் கூடும்.
3.எடுத்துக் கொண்டிட குணங்களின் வலுவால் பிறிதொன்றில் அகப்பட்டே உழலவும் கூடும்.

ஆனால் விவாதம் புரிகின்றவன் கூறுகின்றான்… மனிதனாகப் பிறப்பதுவே ஏழு பிறவி என்று. மனிதனாக ஏழு பிறவிகள் பெற்று முடித்து விட்டால் “அடுத்த நிலை என்ன என்று உரைத்திட முடியுமோ…?”

1.மனிதன் சமமான எண்ணம் கொண்டு தன்னை உணர்ந்திடும் ஞானத்தால் அன்றி
2.வேறொன்றால் பிறவித் தளையை அகற்ற முடிந்திடாது.

எண்ணிறந்த பிறவிகள் பெற்றே இளைத்தேன்…! என்ற கூற்றுப்படி மனிதப் பிறவி அமைந்திடும் நிலை பற்றிச் சிவவாக்கியம் கூறுகின்ற “இறப்புக்குப் பின் மனிதன் பிறப்பது இல்லை… இல்லையே..! என்ற சூட்சமப் பொருளை அறிந்து கொண்டாயா…?

மனிதன் என்ற பிறவி வாய்க்கப் பெற்றாலும் தன்னை உணர்ந்திடும் வழியில் “பூரணமாக மனிதன்…” என்ற முழுமைத்துவம் பெற்றிடல் வேண்டும்.

மனிதன் என்ற பூரணத்துவ சக்தி பெற்றுவிட்டால் பிறப்பின் தளை அகன்றுவிடும்.
1.பிறவா நிலை பெறும் தெய்வத் தன்மை பெறுவதையே
2.மறை பொருளாகக் கூறுகின்றதப்பா சிவவாக்கியம்.
3.பிறவி நோயை அகற்ற முயல்பவனே மனிதன்.

பிறவி நோய் களைய வந்த சித்தர்கள் சரீர நோயகற்றும் மருத்துவன் செயலுக்கும் செயலாக்கினார்கள்.

தன் அனுபவ ஞானத்தால் சரீர பிம்பங்களை வெளிப்பார்வையில் நேருக்கு நேர் கண்ணுற்றுப் பார்த்து ஆய்ந்துரைத்த மருத்துவக் குறிப்புகளில் போகரால் உணர்த்தபட்ட ஏழு பிறவிகள் என்ற முறையுமுண்டு.

உயிரணுக்கள் உதித்திடும் சூட்சமச் செயலில் ஏழு பிறவியின் தொடர்களைப் பற்றி முழுவதையும் நாம் உரைத்து விட முடியாது. ஏனென்றால் சப்தரிஷிகளின் இரகசியங்கள் அனைத்தையும் சொல்லாகச் சொல்லி அதன் மூலமாக அறிந்திட முடியாது.
1.ஆகாயச் சித்தனின் அருள் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.வான இயல் சூட்சமங்கள் அனைத்தையும் அறிவின் ஞானத்தால் அறிந்து கொண்டே உயர்ந்திட வேண்டும்.

போகர் தான் கண்ட மருத்துவ அனுபவத்தால் உரைத்த உண்மை என்ன என்றால் ஒருவர் உருவத்தைப் போல் எழுவர் உலகம் எங்கும் உண்டு. ஆனால் ஒருவர் பெற்ற வீரியம் மற்றொருவருக்கு அமைந்திடாது.

ஒருவரை ஒருவர் சந்தித்திடும் வாய்ப்பும் அமைந்திடாத தன்மையில் குரலின் ஒலி நாதத்தின் மாறுபாட்டை உணர்ந்திடும் சூட்சமத்தை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஆகாயச் சித்தனும் உரைத்திடப் போகின்றான். அவன் பரிசுத்தம் என்னும் பிரம்மத்தைப் பூண்டவனப்பா…!
1.சிந்தனையைத் தூண்டிடும் வினா ஒன்றைப் போட்டு விட்டேன்.
2.அதனின் ஈர்ப்பு நிலை பெற்றே “என்னை முந்திச் செல்ல…” என்றும் ஆசிகள்.

காரண காரியம் கசக்குமப்பா
கண்டு தெளிவுற்றவனுக்கு விண்டு புகட்டிட
ஈசனே வந்தாலும் ஏற்றிடாது
கருத்தொன்றும் மெய் ஒளி என்பான்
ஈசன் என்பான் மெய் ஞானி

கண்டுணர்ந்த மெய் ஞானிகள் உரைக்கும் உண்மைப் பொருள் கேட்பவனுக்குக் கசக்குமப்பா. அவ்வாறு கண்டு தெளிவுற்றவன் கொண்ட மெய் ஞான விழிப்பின் உண்மையின் பொருளை மாறுதலாக விண்டு உரைத்திட ஈசனே முயன்றிட்டாலும் அது முடியாதப்பா…!

Leave a Reply