அகஸ்தியன் ஆதியிலே வெளிப்படுத்திய “உண்மையான சக்திகளை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்

agastya-rishi-pindam.jpg

அகஸ்தியன் ஆதியிலே வெளிப்படுத்திய “உண்மையான சக்திகளை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் தன் தாய் கருவிலே சிசுவாக இருக்கும் பொழுது நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெற்றான்.

ஏனென்றால் அவனுடைய தாய் காடுங்களில் வாழ்ந்து வரும் நிலையில் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் மற்ற மிருகங்களிடமிருந்தும் மின்னல்களிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள பல தாவர இனங்களையும் மூலிகைகளையும் பச்சிலைகளையும் தன் உடலிலே அரைத்துப் பூசிக் கொண்டது.

தன் உடலிலே பூசிய அந்தத் தாவர இனங்களின் மணங்களை அந்தத் தாய் சுவாசிக்கும் பொழுது இரத்தத்தின் வழியாகக் கருவிலிருக்கும் சிசுவுக்கும் போய்ச் சேர்கின்றது.

அத்தகைய சத்துக்களைப் பெற்ற அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்தபின் வானத்தை நோக்கிப் பார்த்துப் படுத்திருக்கின்றது. ஆனால் சூரியனுக்குள் நடக்கும் அதிசயங்களைப் பார்க்கின்றது… அந்த உணர்வை நுகர்கின்றது.

ஏனென்றால் அந்தக் குழந்தையின் தாய் தந்தையர்கள் மிருகங்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றச் “சூரியன் கடவுளாக வருகிறான்…!” என்று சூரியனை அக்காலத்தில் வணங்கியவர்கள்.

அது விஷத்தின் தன்மை உமிழ்த்திக் கொண்டிருக்கும் அந்த சக்தியை அவர்களால் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்தக் குழந்தையால் பார்க்க முடிகின்றது.

அவர்கள் சூரியனைக் கடவுள் என்று வணங்கினார்கள். இங்கே அந்தச் சூரியனின் அதிசயங்களைக் காணுகின்றது இந்தக் குழந்தை.

1.இருப்பினும் இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடையபடும் போது
2.அகஸ்தியன் அருகிலே வரும் எந்த விஷ ஜந்தும் மற்ற மிருகங்களும் அவனைக் கண்டு அது அஞ்சியே நிற்கின்றது
3.இதைக் கண்ணுற்ற தாயும் தந்தையும் இது கடவுளின் அவதாரம் என்ற நிலைகளில் அந்தக் குழந்தையைப் போற்றித் துதித்தார்கள்.
4.அங்கிருந்த அந்தக் காட்டுவாசி மக்களும் குழந்தையைக் கண்டு அதிசயக்கின்றார்கள்.

ஏனென்றால் அந்தக் காலங்களில் மிருகங்களிடமிருந்து தப்பிக் கொள்ள இந்த மனிதனுக்கு ஒரு சிறு புத்தி உண்டு.

தன் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் தான் கண்டுபிடித்த உணர்வைக் கொடுப்பார்கள். அடுத்தவர்களுக்குக் காண்பிக்க மாட்டார்கள். இதைப் போன்ற நிலைகள் இன்றும் உண்டு… அன்றும் உண்டு…!

ஆகவே அந்த அகஸ்தியன் குடும்பத்தில் மட்டும் இந்த நிலைகள் பெற்றபின் அந்தச் சுற்றுள்ள வட்டாரங்கள் அனைத்தும் இதனுடைய அதிசயங்களைப் பார்க்கின்றது. இதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர்.

இருந்தாலும் அந்த வட்டாரங்களில்
1.அகஸ்தியன் நுகர்ந்த உணர்வுகள் வெளிவரப் போகும் போது
2.அதை உற்றுப் பார்த்தபின் இந்த உணர்வின் தன்மை
3.அந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கும் இது தெரிந்திடும் அறிவாக விளைகின்றது.

இவனுக்குள் விளைந்த அலைகள் உற்றுப் பார்த்துக் கூர்மையாக பார்க்கப்படும்போது “இவன் காணும் அதிசயங்கள்…” மற்றவர்களுக்கும் இந்த உணர்வுகள் உணர்ச்சியைத் தூண்டும் நிலை பெறுகின்றது.

அன்று அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த ஆற்றல்கள் இன்றும் உண்டு. அதை எல்லோரும் பெற முடியும்.

அதற்காக வேண்டித்தான் அந்த அகஸ்தியன் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் பெரும் பகுதி நான் (ஞானகுரு) சுற்றுப் பயணம் செய்து வந்தது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் சுமார் பத்து வருடம் காடு மேடெல்லாம் அலைந்தது.

1.அகஸ்தியர் எந்தப் பகுதிக்குச் சென்றாரோ அந்தப் பகுதி எல்லாம் என்னை அலையச் சொன்னார் குருநாதர்.
2.அவர் பதித்த அந்த உணர்வினை அங்கங்கு சென்று அதைப் பதிவாக்கியபின்
3.எது உண்மை…? எது பொய்…? என்ற நிலையில் அறியும் அந்த பருவத்தைக் கொடுத்தார்.

இன்று நீங்கள் எல்லோரும் அதை நுகர முடியும்.

இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டு அந்த அகஸ்தியனை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று தியானித்தால் அதைப் பெற முடியும்.

அதை நுகர்வதற்குதான் மீண்டும் மீண்டும் அந்த அகஸ்தியர் பெற்ற உணர்வுகளை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

Leave a Reply