பிறப்பு இறப்பு பற்றிய இரகசியம் என்ன…?

Life cylce of man

பிறப்பு இறப்பு பற்றிய இரகசியம் என்ன…?

கேள்வி:-
பிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஆண்டவனிட்ட பிச்சை என்கின்றோம்.. இயற்கை என்கின்றோம்…! எதுவப்பா பிச்சை…? எதுவப்பா இயற்கை…? அணுவின் பாடத்தையும் ஆவியின் பாடத்தையும் எண்ணிப் பார்த்தால் பிறப்பு இறப்பு எல்லா இரகசியங்களும் புரிந்துவிடும். பிறப்பு இறப்பு என்பதைப் பற்றிப் புரிந்து கொண்டீர்களா…?

மேலே கூறப்பட்டுள்ள மாமகரிஷி ஈஸ்வரபட்டரின் கருத்தில் “அணுவின் பாடம் பற்றியும்… ஆவியின் பாடம் பற்றியும்…” விளக்கம் தேவை

பதில்:-
அணுவின் பாடம்:-

விண்ணிலே தோன்றிய ஓர் உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் சந்தர்ப்பவசத்தால் பூமிக்குள் வந்து ஒரு தாவர இனத்தில் வீழ்ந்தால் ஒரு புழுவாக உடல் பெறுகிறது.

பின் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதன் வரை வளர்ந்து வருகிறது. மனிதனுக்குப் பின் தன்னை உணர்ந்து மெய் ஞானிகள் வழியில் சென்றால் மனிதன் தெய்வ நிலை பெறுகின்றான். கல்கி என்ற நிலையில் அழியா ஒளிச் சரீரமாக ஆக முடியும்.

ஆனால் விண்ணிலே தோன்றிய அந்த பூமிக்குள் வராது வேறு கோள்களின் ஈர்ப்புக்குள் சென்று விட்டால் அங்கே கிருமிகளாகத்தான் வாழ முடியும்.
1.எத்தனை கோடி ஆண்டுகளாக அங்கே இருந்தாலும் உடல் பெறும் நிலை இல்லை.
2.மனிதனாக வரும் வாய்ப்பே இல்லை.

நம் சூரியக் குடும்பத்தில் நம் பூமியில் மட்டும் தான் உயிரணுக்கள் உயிரினங்களாக உடல் வளர்ச்சி பெற்று மனிதன் வரை பரிணாம வளர்ச்சி அடையச் செய்யக் கூடிய தாவர இனங்களும் நீர் வளங்களும் உள்ளது.

ஆகையினால் நாம் இந்தப் பூமியில் மனிதனாக இப்பொழுது பிறந்திருக்கும் நிலை எந்தக் காலத்தில் பெற்ற நல்ல நிலையோ என்பதைக் கருத்தில் கொண்டு நம் உயிரான்மா இந்தப் பிறவியில் இப்பொழுது பெறவேண்டிய விமோச்சனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் வழியில் வாழ்ந்திடல் வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பூமி அல்லாது நாம் வேறு கோள்களின் ஈர்ப்புக்குச் சென்றிருந்தால்
1.மனிதனாகும் தகுதியும் இருக்காது.
2.ஞானத்தின் வழி செல்லும் சந்தர்ப்பமும் இல்லாது போய்விடும்.
3.ஆக மனிதனாகப் பிறந்ததின் பயனை நாம் அடைதலே சிறப்பு,

ஆவியின் பாடம்:-

மனிதனாக நாம் இன்று வாழ்ந்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பத்தால் எத்தனையோ உணர்வுகளை நாம் சந்திக்கின்றோம். அதில் நல்லதும் உண்டு தீமையும் உண்டு. நாம் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் அவைகள் வந்து மோதத்தான் செய்கின்றது.

நல்லதோ தீமையோ எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுகளின் இயக்கத்திற்குக் காரணமே
1.இந்தப் பூமியில் ஏற்கனவே நம்மைப் போன்று வாழ்ந்த மனிதர்கள் விட்ட மூச்சலைகள் தான்.
2.அந்த அலைகளை நாம் சுவாசித்துத் தான் நாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்கின்றோம். (அதைத்தான் சிவ தனுசு என்று சொல்வது)
3.அதாவது ஒரு உடலுக்குள் விளைந்த உணர்வுகளைத்தான் சுவாசிக்கின்றோம்.
4.மீண்டும் இந்தப் பூமியில் உடல் பெறச் செய்யும் உணர்வுகளைத்தான் நாம் சுவாசிக்கின்றோம்.

வாழும் காலத்தில் ஒவ்வொரு மனிதனுமே எத்தனையோ வேதனையுடன் நிராசையாகித்தான் கடைசியில் உடலை விட்டுப் பிரிகின்றான்.

அவர்கள் வெளியிட்ட மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்திலே படர்ந்துள்ளது. அதே சமயத்தில் உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிராத்மாக்களும் இதே காற்று மண்டலத்திலே தான் சுழன்று கொண்டுள்ளது.

நாம் சாதாரணமாக எண்ணும் பொழுது அவர்கள் வெளி விட்ட மூச்சலைகளும் நம்முடைய எண்ணமும் ஒன்றாக இருந்தால் அந்த அலைகள் நமக்குள் வந்து நம்மை இயக்கும்.

ஆனால் மிகவும் அழுத்தமாக எண்ணினால் உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாவே நம் ஈர்ப்புக்குள் வந்து நம் இரத்தத்தில் வந்து அது நம்மை இயக்கத் தொடங்கும். இதைத்தான் ஆவி நிலை என்பது.

ஏனென்றால் நிராசையுடன் சென்ற அந்த உயிரான்மா
1.தன்னுடைய ஆசையை நிறைவேற்றும் எண்ணத்துடனேயே காத்துக் கொண்டு இருக்கும்.
2.இன்னொரு உடலுக்குள் சென்று குழந்தையாகப் பிறக்காமல்
3.உடலுடன் வாழும் மற்ற மனித உடல்களுக்குள் புகுந்து தன் காரியத்தைச் செயல்படுத்தும் ஏக்கத்திலேயே இருக்கும்.

ஓரளவுக்கு முழுமையாக வாழ்ந்து உடலை விட்டு அமைதியாகப் பிரிந்த ஆன்மாக்கள் தான் அடுத்து குழந்தையாகப் பிறக்கும் நிலைக்கு வரும். அதுவும் குறைந்தது 100 – 150 ஆண்டுகளாவது ஆகும்

நிராசையாக உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் தன் ஆசையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருப்பதால் அவைகள் நம் உடலுக்குள் வந்தால் அவர்கள் உடலில் வந்த நோய்களும் துன்பங்களும் நம்மையும் சாடி நம் உடலையும் சீக்கிரம் நலியச் செய்து அதே நிலைக்கே அழைத்துச் சென்று விடும்.

ஆக மொத்தம் மனிதனாகப் பிறந்து வாழும் பெரும்பகுதியானவர்கள் கடைசியில் இப்படித்தான் இறக்கின்றனர்.

1.இந்த ஆவி உலக உயிராத்மாக்களின் உணர்வின் உந்தல்களால் இயக்கப்பட்டு
2.தீமையான உணர்வுகளுக்குள் சிக்கித் துன்பப்பட்டு வேதனைப்பட்டோ அல்லது
3.மற்றவரை அழிக்கும் எண்ணம் கொண்டோ செயல்படச் செய்து
4.கடைசியில் நிம்மதியை இழந்து பலவிதமான நோயாகி இறக்கும் நிலை தான் இன்று உள்ளது.

ஆனால் “வயது ஆக ஆக மனிதனுக்கு இப்படித்தான் நோய்கள் வரும்…!” என்று நாம் இதை எல்லாம் ஏற்றுக் கொண்டு “அதையே வாழ்க்கை…!” என்று எண்ணிக் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளோம்.

நல்லதே செய்து நல்ல எண்ணத்தில் வாழ்பவர்களுக்கும் பக்தி கொண்டு வாழ்பவர்களுக்கும் பக்தி இல்லாது வாழ்பவர்களுக்கும் எல்லோருக்குமே நோய் வருகிறது என்றால் அதற்குக் காரணம் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் பிறிதொரு உடலை விட்டுப் பிரிந்த உணர்வுகள் அல்லது அந்த ஆன்மாக்களின் இயக்கமே…!

இன்று சிறிதளவு உணர்ச்சி வசப்பட்டாலும் அந்த ஆவி உலக ஆன்மாக்களின் உணர்வுகள் நம்மைச் சாடத்தான் செய்யும்.

ஆவி உலக ஆன்மாக்களின் ஈர்ப்பிலிருந்து விடுபட வேண்டும் என்றால் ஞானிகள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து வலுவாக்கிக் கொண்டால் தான் தப்ப முடியும்.

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்திக்கு நம் கண்ணின் நினைவுகளைக் கொண்டு போய் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வசப்படும் பொழுதெல்லாம் இவ்வாறு மாற்றிக் கொண்டால் தான் ஆவி உலக ஆத்மாக்களின் தொடர்பிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே நம் எண்ணங்களும் உணர்வுகளும் செயல்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இந்த உடலுக்குப் பின் மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் எளிதில் அடைய முடியும்.

1.பிறிதொரு மனித உணர்வின் (ஆவி) ஈர்ப்பு நம் ஆன்மாவில் இருந்தால் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நமக்கு வந்து கொண்டே தான் இருக்கும்.
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடந்து சென்ற மகரிஷிகளின் உணர்வின் ஈர்ப்பு நம் ஆன்மாவில் இருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லாத நிலையாக மரணமில்லாப் பெரு வாழ்வு நாம் வாழலாம்.

Leave a Reply