அனைத்தையும் அரவணைத்து மகிழ்ந்திடும் நிலையாக ஒளியாக மாற்றும் சூட்சமம் பற்றி இராமாயணம் காட்டும் உண்மைகள்

vanmiki-ramayana

அனைத்தையும் அரவணைத்து மகிழ்ந்திடும் நிலையாக ஒளியாக மாற்றும் சூட்சமம் பற்றி இராமாயணம் காட்டும் உண்மைகள்

 

1.தீமையான உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் அது வாலியாகி விடுகின்றது.
2.நல்ல குணத்தின் தன்மை எண்ணும் போது ஆஞ்சநேயனாகி விடுகின்றது.

நல்ல குணத்தை எண்ணி எடுக்கும் போது சீதாவிற்கும் இராமனுக்கும் இலட்சுமணனுக்கும் மத்தியிலே இந்த உணர்வின் தன்மை அணுவான பின் இராமன் இட்ட கட்டளைப்படி ஆஞ்சநேயர் வாழ்கிறார்.

நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் எல்லாம் சீதாலட்சுமி ஆகின்றது. அந்தச் சீதாவைப் பாதுகாப்பது யார்…? இந்த உணர்வுகள்… உணர்ச்சிகள்…! அப்போது உடலிலே என்ன செய்கிறது…?

இராமன் ஊடுருவிச் சொல்கின்றான் என்ற நிலைகளில் தீமைகளை அகற்றும் உணர்வாக வருகிறது. (இராமன் என்றால் எண்ணங்கள், சீதா என்றால் சுவை – மணம், மகிழ்ச்சி).

இராமன் இட்ட கட்டளையை ஆஞ்சநேயன் நிறைவேற்றுகின்றான். ஆஞ்சநேயன் என்றால் வாயு (காற்று) அதாவது அந்த எண்ணத்தின் உணர்வலைகள்

சீதாவைச் சிறை பிடித்துக் கொள்கிறான் இராவணன்…! ஏன்…?

1.நல்ல குணத்தின் தன்மை பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்
2.அசுர குணங்கள் கொண்ட நிலையில் அதன் மீது இச்சைப்படுகின்றான்.
3.ஆக இராவணனின் சகோதரி இராமன் மேல் இச்சைப்படுகின்றாள்.

(அதாவது நாம் நல்ல எண்ணங்கள் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் வேதனையான கோபமான உணர்வை நுகர்ந்த பின் அடுத்து நல்ல எண்ணங்கள் வருகின்றதா..? இல்லை…! நம்முடைய மகிழ்ச்சி காணாது சிறைப்படுகின்றது, தீமையான குணம் நல்ல குணத்தை அடக்கப் பார்க்கின்றது)

அப்போது இவன் என்ன செய்கிறான்…! இவளை அவமதித்து விடுகின்றான். என்னை அவமதித்து விட்டான் என்ற கோபத்தில் சூர்ப்பணகை இராமனின் மனைவி அழகாக இருக்கிறது என்று இராவணனிடம் சொல்கிறாள்…!

ஆஹா… என் சகோதரியை இப்படியா சொன்னான் இராமன் என்று இவன் அகம் கொள்ளுகின்றான். அகம் கொண்ட பின் என்ன செய்கின்றான்..?

அவள் அழகை வர்ணிக்கும் போது அந்த உணர்வை நுகர்ந்து தனக்குள் அதை அடைய வேண்டும் என்ற உணர்வு இங்கே தோன்றுகிறது. பொறாமையில் வரக்கூடிய நிலை இது.

சகோதரி வார்த்தையைக் கேட்டான். அதனால் அகம் கொண்டு செயல்படும் போது கடைசியில் அவனுக்கு அழிவே வந்து விடுகிறது.

இராவணன் கூடப் பிறந்த சகோதரன் கும்பகர்ணனோ அவன் தூங்கிக் கொண்டே இருக்கிறான்… நல்லவன் அவன்…! (நம் உடலில் தீமையான உணர்வுகள் ஆட்சிக்கு வந்துவிட்டால் நல்ல குணங்கள் அனைத்தும் செயலிழந்து விடுகிறது அல்லவா..!)

இராவணனின் மகன் இந்திரஜித் என்ன செய்தான்…?

தன் தந்தையினுடைய நிலையில் மகனான அவன் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது… உருவாக மாட்டேன் என்கிறது…! அதாவது
1.இராவணன் அவன் ஆசையின் இச்சைக்குச் செயல்படும் போது
2.தீமைகளை அகற்றும் வல்லமை உருவாவதில்லை. (தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி)

அதே சமயத்தில் தசரதச் சக்கரவர்த்தி தினம் ஒரு மனைவியைக் கல்யாணம் செய்து கொள்கிறான். கங்கணமே கழட்டவில்லை. தசரதன் என்றால் பத்தாவது நிலை அடையக் கூடிய பருவம் பெற்ற நம் உயிர் தான்.

ஒருவர் வேதனைப்படுகின்றார்…!
1.அவரை உற்று நோக்கிய பின் அந்த வேதனைப்படும் சக்தியாக
2.என்னுடன் இணைந்து செயல்படுகிறது… அப்போது அது மனைவியாகின்றது.
3.மனைவியாகப்படும் போது அதிலே உருப் பெறும் கரு அந்த வேதனைகளை உருவாக்கும் தன்மைக்கே வருகிறது.
(இராமயாணக் காவியத்தை இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள். அதை யாராவது நாம் மதிக்கிறோமா…? இராமன் நல்லவனா என்றும் சீதா தூய்மையானவளா என்றும் பட்டிமன்றம் வைத்து ஆயிரம் கற்பனைகளைப் பண்ணி இராமயாணத்தையே கொலை செய்து விடுவார்கள். மனிதனின் சிந்திக்கும் தன்மையே இழக்கப்படுகிறது)

இராமன் நல்லவன் என்ற நிலையில் தசரதன் தன் மகன் மேல் பிரியப்படுகின்றான். ஒரு நல்லவன் இந்தச் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும். எதிர் காலம் நன்றாக இருக்கும் என்பதற்காக வேண்டி இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று தசரதர் எண்ணுகின்றார்.

ஆனால் கைகேயி கேட்ட வரப்படி நல்லவனுக்கு ஆட்சி இல்லை என்று ஆனபின் தனக்குள் அந்த உணர்ச்சிக்குள் அடிமையாகும் போது இந்த உடலை விட்டுப் பிரிகின்றார்.

யார்…? இந்த உயிர் வெளியிலே போய்விடுகிறது. பரதனோ தன்னுடைய சகோதரன் இராமன் நல்லவன் என்று உணர்கின்றான்.
1.அவன் பாதத்தை வைத்துத் தான் நான் ஆட்சி புரிவேன்
2.நல்ல குணங்களை வைத்து ஆட்சி புரிவேன் என்று செயல்படுத்துகின்றான்.

இராமன் காட்டிற்குள் செல்லப்படும் போது முதலில் குகனைத்தான் சந்திக்கின்றான். குகன் ஒரு படகோட்டி. அந்தக் குகனைச் சந்தித்த பின் அவன் இராமனை வரவேற்கின்றான். நல்ல உணர்வுகள் வருகிறது.

குகன் என்பது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய இரத்தம். அதற்குள் நம் எண்ணங்கள் அனைத்தும் படகாகச் செல்கின்றது. உயர்ந்த ஞானங்களை நாம் எடுக்கும் போது உடல் முழுவதும் அது படர்கின்றது. தீமைகள் உருவாகும் உணர்வுகளுக்கு அது இடம் கொடுக்காது அருள் ஞானத்தை அன்புக் கட்டளையாக இடுகின்றது. இது அடிபணிகின்றது.

இரத்தத்தில் அருள் ஞானத்தைப் பரப்பப்படும் போது இது ஊடுருவி உடல் அனைத்திற்குமே போகின்றது. பகைமை உணர்வை அடக்குகின்றது. நட்பு கொண்டு இணைகின்றது. அது தான் கல்யாணராமா.
1.அருள் ஒளியின் உணர்வுகளைத் தனக்குள் பெருக வேண்டும் என்று எண்ணும் போது
2.மற்ற தீமைகளை ஒடுக்கி நல்ல அணுக்கள் அனைத்திற்கும் உற்சாகம் ஊட்டுகிறது.
3.இப்படி ஒன்றுக்கொன்று போர் செய்யாத நிலைகள் வரும் போது நம்முடைய உணர்வுகள் அனைத்தும் ஒளியாகின்றது.

அப்படிப்பட்ட நிலையில் ஒளியின் கதிராக இருப்பது தான் துருவ நட்சத்திரம். வருவது அனைத்தையும் அரவணைத்துத் தன்னுடன் இயங்கச் செய்யும் தன்மைகளாக ஒளியின் உணர்வாக மகிழ்ந்திடும் உணர்வாக மாற்ற வேண்டும் என்பதற்காக
1,துருவ நட்சத்திரத்தின் சக்தியின் பேரருள் பேரொளியை எடுத்து
2.உடலிலுள்ள இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
3.உடல் முழுவதும் படரச் செய்ய வேண்டும் என்று தியானிக்கச் சொல்கிறோம்.

Leave a Reply